செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

2020ல் …




2020ல் என்னென்னவோ கனவுகள் எல்லோருக்கும். எத்தனையோ எதிர் பார்ப்புக்கள். இருந்தாலும் யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. இப்போத்தான் ஏதோ கொஞ்சம் பெண்கள் வெளியே நடமாட ஆரம்பித்தார்கள். அதற்குள் முக்கியமான பெரிய நகரங்களில் பாதுகாப்புப் பிரச்சினை வந்து விட்டது. 

பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் செலவு செய்தாலும் வருமானம், வேலைத் திறன், சம வாய்ப்பு, மேலாக ஒட்டு மொத்தமாக ஆண்கூட்டத்தை அடைத்து வேலை வாங்குவதில் உள்ள ( இருபாலரும் சேர்ந்து ஆலோசித்தால் தான் அதீதங்கள் இல்லாத மிதமான, வியாபாரத்திற்கு இன்றியமையாத முடிவு எடுக்க முடியும் என்பது மேலாண்மைக் கல்வியின் குருக்கள் போதிப்பது) சிரமம் என்பதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் பெண் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு பணம் கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள்.

செய்தி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நேரில் பார்த்தால் தான் என்ன கொடுமைடா இது … ஒரு மெய்க்காவலர் ( Bodyguard தான். அதிகம் புழக்கம் இல்லாத வார்த்தை ), இறங்கும் போது வண்டிக்குள்ளேயே இருக்கிற electronic card swiping, எழுத்து மூலம் … இன்னும் என்னவெல்லாம் அவசியம் வருமோ தெரிய வில்லை. பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. 

இன்னும் எத்தனை செலவழித்துப் பெண்களைப் பாதுகாக்க வேண்டி வருமோ? ஒரு கட்டத்தில் அதற்கும் எல்லை வந்தால், பெண்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற கொள்கைக்கு பொருளாதார ரீதியான அனுமதி கிடைத்துவிடும். அப்புறம்? … பேசாமல் மறுபடி வீட்டிற்குள் அடைத்துவிட வேண்டியதுதான். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் அவர்களாகவே அடைந்துகொண்டாலும் ஆச்சரியமில்லை. காட்டில் கூட மிருக பயம்தான். நாட்டில் மனித பயம்! 

மனிதர்களுக்கு அடிப்படைக் கட்டுப்பாட்டை நிறுவ முடியாத சமுதாயத்தில் அரசாங்கம், சட்டம், கல்விச் சாலைகள், நீதி மன்றங்கள் … அர்த்தம்தான் என்ன? இருபாலருக்கும் சரியானபடி சக மனிதர்களை மதித்து நடக்கக் கற்றுக் கொடுக்காமல் என்ன செய்தாலும் பயனில்லை. நடப்பு நிலை நீடித்தால் 2020ல் ஒன்று தெருவில் ஆண்கள் மட்டுமே நடமாடிக் கொண்டிருக்க வேண்டும்,  இல்லை என்றால் பெண்கள் அதீத தைரியமாகி ஆணகளை வீட்டுக்குள் அடைத்து ஆளும் ‘பகாவலி ராஜ்ய’ மாகிப் போய் விடலாம். இரண்டுமே … ஆறறிவில் ஒன்று குறைந்து விட்டதன் அடையாளம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக