வியாழன், 12 டிசம்பர், 2019

திருக்குறள் - ஊழ் (செல்வம்)


ஊழ் – (செல்வம்)

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
செல்வம் பெருகும் நேரத்தில் எதற்கும் அசையாமல் இருப்பார்கள், ஆனால் செல்வம் கையை விட்டுப் போகும் நேரத்தில் தானாகவே மடிந்து (தலை கவிழ்ந்து, உடல் மடிந்து, கூனிக் குறுகிப் பிறருக்குக் கட்டுப்பட்டு) விடுவார்கள்.

372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை
ஏழையாக இருந்தவரை அறிவிலி என்று உலகினால் பழிக்கப்பட்ட அதே மனிதன், செல்வம் வந்தவுடன் அறிவாளி (அறிவகற்றும்) என்று ஆகிவிடுவான்.

373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
செல்வம் சேர்க்கும் செயலைப் பொருத்தவரை, ஒருவன் எத்தனை நுணுக்கமான கருத்துகள் கொண்ட நூல்களைக் கற்றிருந்தாலும்கூட, அவனிடம் இயல்பாக இருக்கும் அறிவு மட்டுமே கைகொடுக்கும். [கல்வியினால் அறிவை விரித்துக் கொள்ளலாம், ஆனால் செல்வம் சேர்க்கும்போது எல்லோருக்கும் பாகுபாடு இன்றி அவர்தம் இயல்பான அறிவு மட்டுமே பயன்படும்]

374. இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
செல்வம் பெறுவது, தெளிந்த அறிவைப் பெறுவது என்ற இரண்டும் இயற்கையாகவே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு உலகங்கள். அதாவது செல்வம் இருந்தால் அறிவு கிடைக்கும் என்றோ, அறிவு இருந்தால் செல்வம் ஈட்டலாம் என்றோ ஒன்றை ஒன்று சார்ந்து சொல்ல முடியாது – அது வேறே, இது வேறே. They don’t depend on each other. One does not imply the other.

375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
செல்வம் ஈட்டும் போது, பொதுவாக நல்லது என்று பின்பற்றுகிற எல்லாம் கூடத் தீயதாகவும், தீயது எல்லாம் கூட நல்லது என்றும் ஆகக்கூடும்.

376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

செல்வமானது ஒரு சமயம் பிடித்து இழுத்தாலும் வராது, மறு சமயம் அள்ளிக் கொட்டித் தள்ளிவிட்டாலும் விலகிப் போகாது, கூடவே ஒட்டிக்கொள்ளும்.

377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
இதெல்லாம் யாரோ போடுகின்ற கணக்கு, அதைமீறி நாம் கோடிப் பணம் தேடி வைத்தாலும் அனுபவிக்க முடியாது.

378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
செல்வம் ஈட்டத் துப்பில்லாதவர்கள், யாராவது வந்து கையில் இடுகின்ற உணவு கிடைத்தால் (பிச்சை) போதுமென்று துறவியாகிவிடுவார்கள். [சோறு கண்ட இடம் சொர்க்கம்]

379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தான் நன்றாக இருக்கும் போது(செல்வந்தராக) பார்க்கும் எல்லாமே நல்லதாகவே தெரியும், ஆனால் தனக்கு முடியாதபோது(ஏழையானதும்) உலகமே துன்பமயமாகத் தெரியும் என்பது உலக வழக்கம்.

380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
செல்வத்தைவிட வலிமையுள்ள பொருள் என்று வேறு எதைச் சொல்ல முடியும்? சுற்றி எத்தனை போட்டி இருந்தாலும் செல்வமே அத்தனையையும் முந்திக்கொண்டு முதலிடம் பிடிக்கும்.