வெள்ளி, 19 ஜூன், 2015

யோகா - புதிதாக ஆரம்பிப்பவரகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை



இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மனத்தையும் உடலையும் அமைதியாக வைத்திருந்து ஆரோகியமாக வாழ ‘யோகா’ ஒரு இலகுவான உன்னத வழி. ‘யோகா’ என்பது ஒருவர் தன் மீது கவனம் செலுத்தித் தனக்குத் தானே புத்துயிர் கொடுத்துக் கொள்கிற வழியாகும். ஆனால் இதைக் கவனமாகச் செய்யாவிட்டலால் எதிர்மறை விளைவுகள் – நரம்புப் பிடிப்பு, மூட்டுவலி, மூச்சுத் திணறல் உட்பட பலவித ஆபத்துக்களைக் கொடுத்துவிடும். சில முக்கியமாகக் கவனித்துக் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ:

1.        யோகா செய்ய நேரமும் காலமும் உண்டு. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய காலை 4மணி முதல் 6மணி வரையிலும், மாலை அதேபோல் 4மணி முதல் 6மணி வரையிலும் மட்டுமே உடற்பயிற்சி சார்ந்த ஆசன வகை யோகாவைச் செய்ய வேண்டும்
2.        
2)      பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பத்தில் சரியாக (காலை மடித்து உட்காரும் சுகாசனம்கூட ஓகே தான்) உட்கார்ந்து கண்களை மூடியபடி, சத்தம் இல்லாத, கூடியவரை தூய காற்று உள்ள இடமாகப் பார்த்து அங்கேபோய்ப் பயிற்சி செய்து பழக  வேண்டும். நன்றாகப் பழக்கம் வந்த பின் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் போது, பயணிக்கும் போது, ஏன் அலுவலக மீட்டிங்கில் அடுத்தவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சிந்தனையில் இருக்கும் போதுகூடச் செய்யலாம். நாம் செய்யும் மூச்சுப் பயிற்சி அடுத்தவர்களுக்குக் கூடத் தெரியாது. மனதும் நிதானப் பட்டு ஒருமுகப்படும். கவனம் கூர்ந்து நினைவாற்றல் பெருகும். பேச்சில் நிதானம் வரும்.
3.     
  3.   உடல் நலம் குறைந்த போது கட்டாயம் யோகா செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் மருந்து வேலை செய்யாது. பக்க விளைவுகளும் ஏற்படும்
4.        யோகாசனங்கள் செய்வது ஒரு ஒழுங்கு முறைகடைபிடித்தால் மட்டுமே பயன் தரும். 10 நாட்களில் எடை குறைக்கும் யோகா வகைகளை 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் திடீரென்று ஆரம்பிப்பது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
5.        
         யோகா செய்யும் போது சம தரையில் இருந்து மட்டுமே செய்ய வேண்டும். சில யோகா வகுப்புளில் நடுவில் குழி உள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து ஆசனம் செய்ததால் நரம்பு பிடித்துக்  கொண்டு வருடக்கணக்கில் சிரமப் படுபவர்கள் உண்டு.
6.         
      யோகா கற்றுக் கொள்ளும் போது நீண்ட நாள் யோகா செய்து இன்னும் தினமும் செய்து கொண்டிருக்கும் ஆசிரியரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு ஆசிரியரால் செய்ய முடிந்த ஆசனங்கள் மட்டுமே அவர் வழிகாட்டுதலில் செய்ய வேண்டும்
7.         
      10 வயதிற்குள் யோகா பழகஆரம்பிக்க வில்லை என்றால், அவர்கள் எல்லா ஆசனங்களையும் செய்யக் கூடாது. உடல் கூறு அனுமதிக்கிற சுலபமான ஆசனங்கள் சிலவற்றை மட்டும் கற்றுக் கொண்டு, அதை விடாமல் தினமும் செய்ய வேண்டும். 

       மூச்சுப் பயிற்சியும் தியானமும்:
தியானம் என்பது யோகத்தில் சேர்ந்த சுலபமான விஷயம். இதை எந்த வயதினரும், நோய்வாய்ப்பட்ட காலத்தில் கூட, செய்யலாம்.  மூச்சுப் பயிற்சியும் தியானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

திங்கள், 1 ஜூன், 2015

புறம் போக்கு என்கிற பொதுவுடமை


சரியான நடிகர் தேர்வு, உறுதியான கதைக்களம், ஊடாடிக் கிடக்கும் சமூகநிலை சார்ந்த குறியீடுகள் ... முக்கியமாக .. காதைத் துளைக்காத பின்னணி இசை ... எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய கதைசொல்லும் உத்தியை, இரசிகர்கள் இரசிக்கும் படி வியாபாரத்தையும் விடாமல் வெற்றியாக்கியிருக்கிறார்கள்!

சுதந்திரப் போராட்ட நாயகி - குயிலி, அடிமைத்தனத்தில் வைத்திருந்த வெள்ளை - மெக்காலே, உயிரை எடுக்கிற - எமலிங்கம், தூக்கு மர நிழலில் நின்று அதைக் கதையாக எழுதிய தோழர் சி.ஏ. பாலன் நினைவாய் - பாலு என்கிற பாலுச்சாமி ... கதை மாந்தர் பெயர்களே கலக்கல் தான்.

தனக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு வாசிக்கப் படுகையில் அலட்டிக்கொள்ளாமல் கடலை உடைத்துச் சாப்பிடுகிற ஆர்யா, அட்டகாசமான சென்னைத் தமிழில் புலம்பிப் புலம்பி, தான் ஒரு உயிரை எடுத்தோம் என்று ஆகாமல் இருந்தால் எதையும் செய்யத் தயாராகும் விஜய் சேதுபதி, எல்லாம் பாலு தூக்கு முடித்தபின்னால்தான் என்று கடமையாய்த் திரியும் ஷ்யாம், மெல்லிய உடலோடு அலட்சியமாய் பைக்கில் உலா வரும் கார்த்திகா ... கதையில் தங்கள் பாகத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செய்திருக்கிறார்கள்.
ஒரு இனம் அழிவைப் பார்த்துக்கொண்டு அதன் மறுபாதி அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்ற காலகட்டத்தில் மனித உரிமை என்றால் என்ன, நம் கண் முன்னாலேயே நாடு குப்பைக் கிடங்காக மாற்றப் படுவது, சிறைக்குள் இருக்கும் மனிதர்களும் காரணங்களும் என்று சிந்தனையை எழுப்பிவிட முயற்சி நடந்திருக்கிறது. சிலபல காரணங்களால் உரக்கவோ அன்றி உயர்த்தியோ குரலெடுக்க முடியாத ஊமை வலிகள் ... சரித்திரம் அறிந்தவரும் சிந்திக்கத் துணிந்தவரும்கூட எழுந்து வர வைக்க முடியாத பலவீனமான முயற்சி. ஆனால் ... சின்னதாக ஒரு உறுத்தல் உள்ளே உணரத்தான் முடிகிறது. அலை கடலின் கரை! ஓடி விளையாடி வீடு கட்டலாம். துணிந்தவன்தான் ஓடம் ஏறி உள்ளே பாய முடியும்!!!

நல்ல ஒரு குத்தாட்டம், எதிர்பாராத இடத்தில் எல்லாம் ஓரிரு வார்த்தைகளிலேயே குபீர் என்று சிரிப்பை வரவழைக்கிற வி.சேதுபதி, மிகமிக மெல்லியதானாலும் ஊடாடுகிற காதல், கண்ணுக்குக் குளிர்ச்சியாய் ஆர்யா, கார்த்திகா, பொருத்தமான வேடத்தில் ஷ்யாம் என்று மக்கள் பார்த்து மகிழ எல்லாமே இருக்குது, நல்லாவே இருக்குது. இன்னும் ஒரு முறை ... சலிக்காது!