புதன், 6 ஜூலை, 2016

மொழிபெயர்ப்பு – Solar power, Geo thermal power



Solar Power – வெயில் மின்சாரம்

சூரியஒளி மின்சாரம் அல்லது சூரியஒளி மின்சக்தி என்று மொழிபெயர்க்கப்படுவது Solar power. காற்றாலை என்று ஒற்றைச் சொல்லில் wind mill என்பதை எளிமைப்படுத்த முடிந்தது. ஆனால் சூரியனுக்கு ஆயிரம் நாமங்கள் வடமொழியில் வழக்கில் இருக்கின்றன; தமிழ்மொழி இலக்கண அனுமதியுடன் அவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ளலாம். ஆதைவிட்டாலும் சூரிய ஒளி என்பதற்குத் தமிழில் ஒற்றைச் சொல் இருக்கிறது என்பதை முற்றிலும் மறந்துவிட்டோம். சூரிய ஒளி என்று சுற்றி வளைத்துச் சொல்வதற்குப் பதிலான நேரடி மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல் வெயில்.
மின்சார வகைகளை அனல் மின்சாரம் (Thermal power), புனல் மின்சாரம் (Hydral power), காற்றாலை மின்சாரம்(wind power)  என்று தேர்ந்தெடுத்துச் சரியான, நேரடியான, எளிமையான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தபோது சூரிய ஒளி மட்டும் நேர்ச்சொல் மறந்து போனது. 

உதாரணமாக: அனல், புனல், காற்று, வெயில் இவையே மின் ஆற்றல் மூலங்களாகப் பயன்படுகின்றன. காற்று, வெயில் இரண்டும் புதுப்பிக்கக் கூடியவை.
Solar Energy  என்பதை வெயில் ஆற்றல் என்றும் Solar Power என்பதை வெயில் மின்சாரம் என்றும் மொழிபெயர்ப்பது பலவகைகளில் எளிதாகவும் சொல்வளம் கொண்ட மொழியின் மதிப்பை நாம் அறிந்ததற்கு அடையாளமாக்வும் இருக்கும் இல்லையா?

Geo Thermal power – புவிஅனல் மின்சாரம்
பூமியில் துளையிட்டு உள்ளே இருக்கிற அனலின் சூட்டை வெளிக்கொண்டுவந்து, அதை எரிபொருளாக்கி நீராவி உற்பத்திசெய்து மின்சாரம் எடுப்பது Geo Thermal power. இதற்கு எளிமையாக Geo என்று ஆங்கிலம் சொல்லிவிட்டது Geological என்றுகூட முழுச் சொல் கொண்டு நீட்டி முழக்கவில்லை. தமிழில் கூட பூமி என்று நெடில் கொண்ட சொல்லுக்கு புவி என்று குறில் கொண்ட சொல் உண்டு. பூமி அனல் மின்சாரம் என்றாலும் புவிஅனல் மின்சாரம் என்றாலும் இரண்டுமே பொருந்திவரும். புவிஅனல் (அல்லது புவியனல்) என்பது சுலபமான ஆங்கிலச் சொல்லுக்குச் சவால்விடும் எளிமைகொண்ட சொல்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

மொழிபெயர்ப்பு – online, offline


Online / offline இந்த இரண்டு எதிர்ப்பதங்களுக்கும் மொழிமாற்றம் இதுவரை சிக்கலாகத்தான் இருக்கிறது. வார்த்தைகளின் மூலம், பயன்பாடு என்று அலசிப்பார்த்ததில் தடம் (பாதை என்ற பொருளில்) என்ற தமிழ்ச் சொல் line என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மிக அருகில் பொருந்தி வருகிறது. ஏற்றம்/இறக்கம் on/off –க்கு ஒத்து வருகிறது.  On the line – தடத்தில் ஏறிநிற்றல் off the line – தடத்தில் இருந்து விலகி, அதாவது தடத்தில் இருந்து இறங்கி நிற்றல் என்று கொண்டால் ‘online-தடமேற்றம்’, ‘offline-தடமிறக்கம்’ என்ற பதங்கள் பொருள், பயன்பாடு இரண்டுக்கும் தகுந்தபடி இருக்கின்றன.

Online (on-line etc variants) – தடமேற்றம்
Offline (off-line etc variants)- தடமிறக்கம்

பயன்பாடு (app என்ற பதத்திற்கு மொழிமாற்றமாகப் பயன்படுகிறதே அந்த சொல்லை இங்கே நான் குறிக்கவில்லை) எடுத்துக்காட்டுக்கள்:

Warning! You must be online to use this feature.

எச்சரிக்கை! இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் தடமேற்றம் செய்திருக்க வேண்டும்.

Hi! I’m online

ஹாய்! நான் தடமேற்றம் செய்தேன்

Keep this data online

இந்தத் தரவைத் தடமேற்றம் செய்து வைத்திரு

This does not work if you are offline

நீங்கள் தடமிறங்கி இருந்தால் இது வேலை செய்யாது