புதன், 26 பிப்ரவரி, 2014

மறுமொழி



மனதின் உள்ளே மறுமொழி ஓடுது
மருண்ட பார்வை
மௌனம் காக்குது
தப்பு என்று சொல்லத் தயங்கி
மனமொழி மௌனமாய்
மறுமொழி பேசுது
பூட்டிய வாயும்
ஆட்டிய தலையும்
காட்டிய இணக்கம்
எனப் பொருள் கொண்டு
ஆள்பவனை ஆளவிட்டு
அழுபவன் அழுகின்றான்
வாய் திறக்க
தலை அசைக்க
கை உயர்த்திக் கருத்துரைக்க
கதியற்ற கதிரவன்கள்
கருகிப் போவது இப்படித்தான்
இவன்
மௌனம் சம்மதமாய்
பரம்பரையாய் ஆளுகின்றான்
வாய் திறக்கப் பயந்தவன்
மன அலையில் இழுபட்டு
மணல் வாரித் தூற்றிவிட்டு
கரையோரம் களைத்துப் போய்
கனவோடு உறங்குகின்றான்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

நாட்டியம், நடனம், தமிழ்த் திரை – பகுதி 2




முதல் பகுதியில் விட்டுப் போன முக்கியமான உதாரணம் ‘கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ …’ என்று ராதிகாவை பரத நாட்டிய உடையில் ஆடவிட்ட கொடுமை.
நடனம் திரையில் பிரிக்க முடியாத அங்கம். பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்டோர் ஆடுவார்கள். ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் இரண்டு வகை நடனங்கள். ஒன்றில் நாயகியோடு தோழிக்கூட்டம் அழகாக, சீராக, “ஆஆ ஆ ..”, “ஓ ஓ ஓ” “லா லா லா” எல்லாம் பாடிக்கொண்டு திரையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் ஓடிக்கொண்டே இருக்கும்; அவ்வப்போது வட்டம் போட்டு வளந்து ஆடும்.
மற்றொரு வகையில் ஆணும் பெண்ணும் கூட்டமாக முக்கால் வாசி சந்தோஷ நேரம், திருவிழா என்று காட்டுவதற்காக ஆடுவார்கள். இதில் “மாமா மா…மா மாம்மா … ஏம்மா ஏம்ம்மா ஏம்மா? …” என்று எம் ஆர் ராதா ஆடியது அபூர்வமான காட்சி.
பின்னாளில் club dance – group நுழைந்தது. Villain அல்லது இரட்டை வேடத்தில் ஒரு நாயகன் கதை முடிவில் கட்டாயம் திருந்திவிடுகிற பாத்திரம் இதில் சம்பந்தப் ப்ட்டிருக்கும். கதையின் முக்கியமான கட்டம் அல்லது திருப்பம் இந்த சமயத்தில் நிகழும். தமிழ்த் திரையின் James Bond  ஜெயசங்கர் படங்களில் இந்த நடனங்களின் பாட்டு அத்தனையும் hit தான். ஆச்சரியமாக சிவாஜி இத்தகைய நடனங்களில் ஆடுவது அபூர்வம் – சும்மா உட்கார்ந்து புகை பிடிப்பது அல்லது ஒளிந்து கிடப்பது அவ்வளவுதான். ஆனால் எம் ஜி ஆர் Rock and Roll போட்டு ‘அன்று வந்ததும் இதே நிலா .. சச்சச்சா … இன்று வந்ததும் இதே நிலா … சச்சச்சா’ என்று புகுந்து ஆடிய நடனங்கள் ஏராளம்.
அதற்கும் பிறகு Duet பாட்டில் வெள்ளை உடை தேவதைகளைப் பின்னனியில் ஓட வைத்துப் புதுமை புகுத்தியது பாரதிராஜா! கஷ்டப்பட்டுச் சிரிக்கிற நாயகிகளை இந்தப் பின்னணி தேவதைகளைப் பார்த்துச் சிரித்துத்தான் மறக்கமுடிகிறது.
இப்போ எல்லாருமே நேரம் செலவழித்து நாட்டியமும் நடனமும் கற்றுக் கொண்டுதான் வருகிறார்கள். நடிப்பு சுமாரானாலும் நடனம் இல்லை என்றால் முடியாது என்று ஆகிவிட்டது. இருந்தாலும் சில நாயகன், நாயகிகள் நடனம் சிரிப்பைத்தான் கிளப்புகிறது. எத்தனை கஷ்டப்பட்டு இந்த அளவாவது சமாளித்தார்களோ தெரியாது. Hats off to hard working!
(தொடரும் …)

சனி, 22 பிப்ரவரி, 2014

என் தீபம் - கவிதை



நினைவுகள்தான் கலையட்டுமே
கனவுகள்தான் நிறையட்டுமே
காற்றுப்படாத கறுத்த வானத்தில்
என் தீபம்
கண் சிமிட்டுகிறது!
எரிகிற தீபம் எரியட்டுமே
அசைகிற பூமி அதிரட்டுமே
திரும்பிச் சுழலும் காலச் சக்கரம்
வெறுமையில் கடந்து
வெளிச்சம் கலைத்து
உண்மை தெரியுது பார்
என்
கைவிளக்கொளியில்
மையிருள் கலைந்து
மனம் நிறையுது பார்
கருத்த நிலவை உடைத்துச் சிதறிய
காலம் சிரிக்குது பார்
கையில்
வீரம் கொடுக்குது பார்
கொடுத்ததை விலைக்குக் கேட்குது பார்
விலை கொடுத்ததும்
வினை எனச்சொல்லி
விளக்கம் கேட்குது பார்
கொடுத்த விளக்கம்
குறையில்லாமல்
நினைவாய் நிலைக்குது பார்
அந்த
நினைவுகள்தான் கலையட்டுமே
கனவுகள்தான் நிறையட்டுமே …