செவ்வாய், 24 ஜனவரி, 2017

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரைப்படம்



நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் - திரைப்படம்

ஶ்ரீ கிருஷ்ணா அறிமுக இயக்கம்.
தமிழில் நகைச்சுவை விதவிதமாகக் காட்டப்படும் கட்டத்தில் முக்கியமான குறிப்பிட்டுத் தெளிவாகச் சொல்ல முடியாத விஷயத்தை நகைச்சுவை கலந்து சொல்லும் படம். வலையில் தேடினால் இந்தப் படம் பற்றி அவ்வளவாக நல்ல விமரிசனம் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் மோசமான விமரிசனம் நிறையக் கிடைக்கிறது. ஆனால் இந்தப் படத்தை ஒரு மாதத்துக்கு முன்பு பார்த்தபோது நிறைய இடங்களில் மனம் நெருடியது. ஏனெனில் இதிலிருந்த சம்பவங்கள் பலவற்றுக்குப் பட்டும் படாமலுமான உதாரணங்களை நிஜவாழ்வில் நேரில் நிறையப் பார்த்துக் கேலி செய்திருக்கிறோம். சமூகத்தில் ஊடாடும் அறிகுறிகள் பலவற்றைக் கோர்த்து ஒரு கதையாக்கி ஏதோ சொல்ல முயலுகிற நேர்மையான படம். ஆனால் முக்கிய பாத்திரங்கள் தேர்வு சொதப்பல். மற்றபடி அந்தப் படத்தில் வேறு குறையில்லை. தாராளமாக முழுசும் பார்க்கலாம்.
மிக நேர்மையான ஊர். ஊர்த்தலைவர் பதவி என்பது ஊரை ஆளும் அதிகாரம், பணம் சம்பாதிக்கக் கிடைத்த அருமையான வழி என்று பெரிய காரும், கரை வேட்டியும், சூழ்ந்து நிற்கும் குண்டர்படையும் சூழத் திரியும் கெத்துக் காட்டாமல், மிகச் சாதாரணமாக மக்களோடு மக்களாகத் தானே சாக்கடை அடைப்பைச் சரிசெய்வது, தெருவிளக்கைச் சரிசெய்வது என்று சரியான மக்கள் தொண்டராக (நாம் கூட இந்த மாதிரி நிஜ மனிதர்கள் இருந்த கதையைத் தாத்தா பாட்டியிடம் கேள்விப்பட்டிருக்கிறோம்) இருக்கிற ஊர்த்தலைவர். மனம் திருந்திவாழும் திருடன். 10 பவுன் நகை தெருவில் கிடந்தாலும் தொலைத்தநபர் தவிர வேறெவரும் அதை ஏறிட்டும்பார்க்காத நேர்மை, கோவிலில் பணிசெய்து கொண்டு நேர்மையாய் வாழுகிற இளைஞர்கள் ... என்று ஆதர்ச, விருது வாங்கும் கிராமம். அங்கு போலீசுக்கு வேலை இல்லை என்பதால் அவர்களுக்கு மாற்றல் பயம் வந்ததும் அந்த ஊரிலேயே தங்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த ஊரின் ஒழுங்கு முறையில் அவரவருக்குத் தக்க நாலு போலீசும் கைவைக்கிறார்கள். முடிவில் ஊர்த்தலைவர் அரசியல்வாதியாகி ஊரை இரண்டு பண்ணுகிறார்; போலீசே திருடிய குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் திருடன் மீண்டும் திருடனாகிறான்; பொய்க்குற்றம் சாட்டப்படும் நேர்மையான இளைஞர்கள் திருடனுடன் சேர்ந்து வழிப்பறிக் கும்பலாகிறார்கள்.
நாலு போலீஸ் கூடியதில் நல்லா இருந்த ஊர் நாசமாகிறது. சுபம்!!!!! பாருங்கள் - அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம். சில சமயங்களில் உண்மைகள் கதைகளைவிட அதிசயமாக இருக்கும் என்பார்கள். உண்மை! உண்மை! உண்மை!

திங்கள், 2 ஜனவரி, 2017

திருக்குறள் - நட்பு - நட்பாராய்தல்



திருக்குறள் - நட்பு - நட்பாராய்தல்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

என்று உண்மையான நட்பிற்கு அருமையான இலக்கணம் சொன்னார் திருவள்ளுவர். உடை நழுவினால் அனிச்சையாக அதைத் தாங்கிப் பிடித்து மானம் காப்பாற்ற விழைகிற கையைப் போல உதவுவது நட்பு என்பது அர்த்தம். 

‘நட்பு என்பது ஒருவர் வாழ்வில் தானே தெரிந்து தேர்ந்தெடுக்கும் விஷயம். வேறெந்த உறவிலும் இல்லாத அளவு நெருக்கம் நட்புக்கு உண்டு. மனம் சம்பந்தமான நம்பிக்கையே நட்பு. நண்பர்கள் மனதளவில் ஒரே நபர் என்னுமளவு ஒருவருக்கொருவர் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, இரகசியங்களைப் பரிமாறிக் கொள்வது  நட்பு என்ற ஒரு உறவுக்கு மட்டுமே சாத்தியம். நண்பர் என்பவர் தன் நலம் விரும்பி, முதுகில் குத்தமாட்டார், தான் தவறுசெய்தால் துணிந்து எதிர்த்து நல்வழிப்படுத்துவார், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவார் என்ற பரஸ்பர நம்பிக்கையாலேயே நட்பு என்னும் பந்தத்திற்குச் சிறப்பான மதிப்பு உண்டு,

இனம், மதம், மொழி என்ற பாகுபாடெல்லாம் நட்பிற்குக் கிடையாது. நட்பு ஏற்படும் விதங்கள் பல. சிறுவயது முதல் எப்போது நட்பானோம் என்பது தெரியாமலேயே ஏற்படும்; முதல் பார்வையிலேயே நிகழக்கூடும்; ஏன் பார்க்காமலேயே நிகழக்கூடும் என்பதற்கும் வரலாற்றில் உதாரணங்கள் உண்டு.

சங்ககாலத்துக் கதை ஒன்று – பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னவனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே பரஸ்பரம் பிறர் மூலம் கேள்விப்பட்டு நண்பரானார்கள். ஒரு நாள் கோப்பெருஞ்சோழனின் மகன் தந்தைக்கு எதிராக அரியணையும் ஆட்சியும் வேண்டும் என்று புரட்சி செய்கிறான். ஆட்சி என்று வந்தவுடன் மகனும் கூட எதிரியாகிவிட்டதால் மனம் நொந்த கோப்பெருஞ்சோழர் வடக்கிருந்து உயிர்விட முடிவுசெய்கிறார். வடக்கிருத்தல் என்பது ஒரு தற்கொலை முறை. ஆற்றின் நடுவில் உள்ள திட்டில், வடக்கு திசை நோக்கி உட்கார்ந்துப் பட்டினியால் உயிர்விடுவதற்குப் பெயர் ‘வடக்கிருத்தல்’.

இதைக் கேள்விப்பட்ட பிசிராந்தையார் நண்பரின் துன்ப நிலை கேட்டு ஓடி வருகிறார். இதுவரை பார்க்காமலேயே நட்பு பாராட்டலாம். ஆனால் நண்பர் துன்பத்தில் இருக்கும் போது உடன் இருக்க வேண்டியதுதான் உண்மையான நட்பு. நண்பரை முதன் முதலில் சந்தித்த பிசிராந்தையார், அவர் துன்பம் பொறுக்காமல் தானும் கூடவே வடக்கிருந்து நண்பருடனேயே உயிரை மாய்த்துக் கொள்கிறார். உலகத்தில் நாம் மதிக்கக்கூடிய பொருள் இருக்கும்வரைதான் வாழ்க்கைக்குப் பொருள் உண்டு. அந்த மதிப்பு போய்விட்ட பிறகு வாழ்க்கை பொருளற்றும் போகும். பிசிராந்தையார் கொண்ட நட்பின் ஆழம் அது. கோப்பெருஞ்சோழர் மன்னரான காலத்தில் கூட புலவருக்குப் பொருள் கொடுக்கவோ அல்லது புலவரும் தன் நண்பர் பெரிய அரசர் என்ற செல்வாக்கைக்காட்டிப் பணம், சொத்து சேர்க்கவோ இல்லை. உண்மையான நட்பு. ஈருடல் ஓருயிரான பந்தம். நண்பர் இல்லாத உலகில் இனி தனக்கும் வாழ்ந்து பயனில்லை என்ற முடிவு. இது புனைகதையில்லை. உண்மை வரலாறு.

சமீபத்துத் திரைப் படங்களில் நிறைய வகை நண்பர்களைப் பார்க்கிறோம். இரத்த உறவுகள் விட்டுவிட்டாலும் நட்பின் துணையில் முன்னேறி வாழ்க்கையில் வெற்றிகொள்ளும் கதாநாயகர்களைப் பார்க்கிறோம். இவை வெறும் கதைகளல்ல வாழ்வியல் எடுத்துக் காட்டுகள்.

நட்பு ஒருவரது வாழ்வில் அளிக்கும் பங்கு, ஒருவரது நல்லபெயர் கெட்டபெயருக்கு ஏற்படுத்தும் பாதிப்பு மகத்தானது. நட்பு என்று ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து வெளியேறுவது மிகக் கஷ்டம் அதைத்தான் திருவள்ளுவரும் ‘நட்பாராய்தல்’ என்று 10 குறள்களில் சொன்னார்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.

அதாவது ஆராய்ச்சி செய்து தெளிந்து நட்பை ஏற்கவும் வழங்கவும் வேண்டும் இல்லை என்றால் தீய நட்பு ஒருவருக்கு இறக்கும்வரை துயரம்தரும் என்பது அர்த்தம்.
ஒருவர் மேல் நிலையில் இருக்கும்போது அவரது நட்பை வேண்டி என்ன வேண்டுமானலும் செய்யத்துணிவார்கள் பலர். அதனால்தான் ஆட்சியிலுன் அதிகாரத்திலும் இருப்பவர்கள் நட்பு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து,

கூப்பிய கைகளுக்குள் ஆயுதத்தை மறைத்துக் கொண்டு, வழிகிற கண்ணீருக்குள் ஆபத்தை வைத்துக் கொண்டு திரிபவர்கள் உண்டு. ஆகவே நம்மைக் கும்பிடும் கைகள் எல்லாம் உண்மையில்லை; நம்மிடம் விடும் கண்ணீர் எல்லாமும் உண்மையில்லை. ஆராய்ந்து பார்த்துத் தெளிவதே நல்லது என்பது திருவள்ளுவர் காட்டும் நல்வழி. நண்பர்களை வைத்து ஒருவரின் குணத்தைச் சொல்வார்கள். ஏன் என்றால்,
நிலத்தியல்பான் நீர் திரிந்தற்றாகும் மாந்தற்கு
இனத் தியல்பதாகும் அறிவு

என்றும் வள்ளுவர் சொல்லியிருப்பதைத்தான் சாதாரண மக்கள் ‘கூடாநட்பு கேடாய் முடியும்’ என்கிறார்கள். செம்மண்ணில் விழுகின்ற தண்ணீர் சிவப்பு நிறமும் கரிசலில் விழுகின்ற தண்ணீர் கருப்பு நிறமும் பெறுவதைப் பார்க்கிறோம். அப்படியே நல்ல நண்பர்களை உடையவர் நல்ல வழிகளிலும் தீய நண்பர்களை உடையவர் தீயவழிகளிலும் செல்ல நேருகிறது.

சமூக வலைத்தளங்களின் நட்பு என்று ஏமாந்து நிற்கிறவர் எத்தனையோ பேர். நட்பின் நம்பிக்கைத் துரோகம் வெளியிலிருந்து கவனிக்கும் மூன்றாம் நபர்களுக்கு அசிங்கமாகத் தெரியும் ; பாதிக்கப்பட்ட நண்பருக்குப் பச்சைத் துரோகமாகத் தெரியும்; சமூக நீதிக்கு அநீதியாகத் தெரியும். 

ஆகவே குழந்தைகளே (பெரியவர்களிடம் சொல்லிப் பயனில்லை – நீண்டகால நட்பை இனி வெட்டிக்கொள்ள முடியாது. கடைசிவரை பட்டுத்தான் ஆகவேண்டும். அதோடு பசுமரத்தில்தான்  ஆணிபதியும். வேண்டுமானால் உங்கள் குழந்தைகளிடம் பகிருங்கள்) நட்பு செய்யும் போது ஆராய்ந்து செய்யுங்கள். திருவள்ளுவர் தாத்தாவிடம் கேளுங்கள். இரண்டு வரியில் உங்களுக்குப் பதில் வைத்திருக்கிறார்.