செவ்வாய், 5 அக்டோபர், 2021

யாவரும் கேளிர்

 

நன்றி : ஓ ஹென்றி! கதைகளைச் சுருக்கமாக தமிழில்

திருடன் ஜன்னல் வழியே உள்ளே குதித்துவிட்டு, நிதானித்தான். ஏதும் செய்வதற்கு முன்னால் நல்ல திருடனுக்கு நிதானம் அவசியம்.

முன்வாசலின் நிலையைப் பார்த்தவுடனேயே வீட்டு அம்மாள் இந்த நிமிடம் எங்கோ கடலோர உணவகத்தில் தன் தனிமை பற்றி யாரிடமோ புலம்பிக்கொண்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான். மூன்றாம் மாடியின் முன்புற ஜன்னல்களில் தெரிந்த வெளிச்சம் பார்த்ததும், வீட்டின் தலைவர் வந்தாயிற்று, இன்னும் சற்று நேரத்தில் விளக்கை அணைத்து விடுவார் என்பதும் அவனுக்குத் தெரியும். ஏனென்றால் அது செப்டம்பர் மாதம். இந்த மாதத்தில் எங்கோ கூரைத் தோட்டத்தில் யாரோ அலுவலகப் பெண்ணுடன் செலவிடுவதை விடத் தன் மனைவி வரவிற்குக் காத்திருப்பது நல்ல ஆணுக்கு அடையாளம் என்பதை நல்ல கணவர்கள் அறிந்திருப்பார்கள்.

திருடன் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான். வெளிச்சத்தில் அவன் உருவம் தெரிந்தது. மூன்றாவது வகைத் திருடன் அவன்.

இந்த மூன்றாம் வகையை இன்னும் யாரும் ஆமோதித்து ஏற்கவில்லை. முதல் இரண்டு வகை நமது காவலர்களுக்கு நன்றாகத் தெரியும். எளிமையான வேறுபாடுதான். சட்டைக் கழுத்துப் பட்டியைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

கழுத்துப்பட்டி அணியவில்லை என்றால் அவன் கீழ்த்தரமானவன், 1878-ல் கைதில் இருந்து தப்பிப்பதற்கு காவலரின் விலங்கினை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியவன். இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் நன்றாக அறிந்த இன்னொருவகை கழுத்துப் பட்டி அணிபவன். பகல் நேரம் ரொம்ப நல்லவனாக அப்பிராணியாக முறையாக உண்டு உடுத்தி இருந்துவிட்டு, இருட்டியதும் திருட்டுத் தொழிலில் இறங்கிவிடுவான். அவன் தாய் அந்த ஊரிலேயே மரியாதையாக வாழ்பவள். அவனைச் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது நகவெட்டியும், காவலர் காவியம் புத்தகமும் ஒரே நேரத்தில் கேட்பான். அவனுக்கு மாநிலத்திற்கு ஒரு மனைவியும், ஒன்றியப் பகுதிக்கு ஒரு துணைவியும் இருப்பார்கள். ஐந்து மருத்துவர்கள் கைவிட்ட பிறகு ஒரே புட்டி மருந்தில் குணமான கதையுடன் அவர்களின் புகைப்படங்கள் செய்தித்தாள்களில் அச்சேறும்.

நம் திருடன் நீல நிறச் சட்டை அணிந்திருந்தான். இவன் இரண்டாம் வகையும் இல்லை, முதல்வகையும் இல்லை. வாயில் சூயிங்கம் மென்றுகொண்டு .38 துப்பாக்கி பையில் வைத்திருந்தான்.

வீட்டின் இருக்கைகள் கோடைக்கால தூசிக்குப் பயந்து போர்வை போர்த்தியிருந்தன. வெள்ளிப் பாத்திரங்கள் எங்கோ பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்தன. ஒன்றும் பெரிதாக அவனும் எதிர்பார்க்கவில்லை. வீட்டின் தலைவர் தனிமையைப் போக்கிவிட்டு அசந்து தூங்குகிற அந்த அறைதான் அவனுக்குத் தேவை. கொஞ்சம் பணம், கைக்கடிகாரம், தங்கப் பேனா, இப்படி தொழிலில் சேர்த்த சிறுபரிசுகள் அவனுக்குப் போதும். திறந்திருந்த ஜன்னலைப் பார்த்ததும் நுழைந்துவிட்டான், அவ்வளவுதான்.

வெளிச்சம் வந்த அறைக்கதவை மெதுவாகத் திறந்தான். படுக்கையில் ஆள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். கண்ணாடி மேஜையில் கசங்கிய பணம் கொஞ்சம், பாதி எரிந்த சிகரெட், காலியில் குடிக்க உற்சாக பானம் என்று கலவையாக பொருட்கள்.

மேஜையை நோக்கி மூன்று அடி எடுத்து வைத்தான். படுக்கையில் இருந்த நபர் சத்தத்துடன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். வலது கை தலையணைக்கு அடியில் நுழைந்து அங்கேயே நின்றது.

‘அசையவேண்டாம்’ திருடன் பேச்சுக் கொடுத்தான். மூன்றாம் வகைத் திருடர்கள் இரகசியம் பேச மாட்டார்கள். திருடனின் கைத் துப்பாக்கி முனையைப் பார்த்தபடி அசையாமல் இருந்தான் படுக்கைப் பேர்வழி.

‘ம் .. ரெண்டு கையையும் தூக்குங்க’ திருடன் ஆணையிட்டான்.

கொஞ்சம் வெளுத்த செம்பட்டைத் தாடியுடன் செல்வச் செழிப்பு அந்த நபரிடம் துலங்கியது. நன்றாக எழுந்து உட்கார்ந்து வலது கையைத் தலைக்குமேல் தூக்கினார்.

‘இன்னொரு கையும் ..’ திருடன் மிரட்டினான். ‘இடது கையால் கூட சுடுற ஆள்தான் நீ. ஒன்னு ரெண்டு எண்ணத் தெரியும்ல. ம் சீக்கிரம் ..’

‘அந்தக் கையத் தூக்க முடியல’

‘என்னா கத?’

‘தோள் பட்டையில முடக்கு வாதம்.’ முகம் சுளித்தார்.

‘வீக்கமா?’

‘இருந்தது. இப்ப போயிருச்சி’

மறைந்த கையை நோக்கித் துப்பாக்கியைப் பிடித்தவாறு திருடன் சில வினாடி நின்றான். மேஜையில் இருந்த மருந்துப் புட்டிமீது பாய்ந்த கண் கொஞ்சம் சங்கடத்துடன் மனிதர் மீது திரும்பியது. அவனும் இப்போது முகம் சுளித்தான்.

‘என்ன பார்க்கிற, வேண்டியத எடுத்துட்டுக் கிளம்பு. தேடு, கிடைக்கும். ஏதோ கொஞ்சம் இருக்கு.’

திருடன் முகத்தில் புன்னகை. ‘மன்னிக்கனும். எனக்கும் இதே பிரச்சினைதான். நானும் முடக்குவாதமும் பழைய நண்பர்கள். வேறு யாராவதா இருந்தா நீ இடது கையைத் தூக்கலைன்னதும் சுட்ருப்பான்.’

‘உனக்கு எத்தன நாளா இந்தப் பிரச்சினை?’ வீட்டு ஆள் விசாரித்தார்.

‘நாலு வருடம்! அது மட்டும் இல்ல. ஒருக்கா வந்தா இது வாழ்நாள் பூரா ஒட்டிக்கும் – இது என் அனுபவம்’

‘கட்டுவீரியன் தைலம் போட்டுப் பாத்தியாப்பா?’

‘ வண்டி வண்டியா ஆச்சு…நான் குடிச்ச எண்ணெய்க்கு அந்த பாம்புகள நீட்டி வரிசையா நிறுத்தினா இங்கருந்து நிலாவரைக்கும் ரோடு போடலாம்’

‘சிலர் மாத்திரைகூட பயன்படுத்தறாங்களே ..?’

‘என்னாத்த … அஞ்சு மாசம் தின்னேன் …ஒன்னும் சரிப்படல .. வைத்தியர் தைலம் ஒரு வருடம் கொஞ்சம் சரிப்பட்டது … அதுவும் சரிப்படல …’

‘காலைலயா இல்ல சாயங்காலமா? எப்ப அழுத்தும்?’

‘ராத்திரி, எனக்கு வேலை நேரம் எப்பவோ அப்ப … எப்பவாவது முடக்கத்தான் தைலம் போட்ருக்கீங்களா?’ திருடன் விசாரித்தான்.

‘ம்ஹூம் …உனக்கு அப்பப்ப வருமா இல்ல விடாம மடக்குமா?’

திருடன் படுக்கை நுனியில் அமர்ந்து துப்பாக்கியை முழங்கால் மடிப்பில் வைத்துக் கொண்டான்.

‘தடக்குனு தாக்கும். ‘ திருடன் சொன்னான். ‘எதிர்பாராத நேரத்துல சுருக்குனு அடிக்கும். அதனாலயே மாடி வேலையை விட்டுட்டேன். பாதி ஏறுற போதே உயிர வாங்கிரும். சொல்றனே … இந்த டாக்டர்கள் பைசாவுக்கு ஆகமாட்டார்கள். ஒருத்தருக்கும் இதுபத்தித் தெரியது.’

‘எனக்கும் அப்படித்தான். லட்ச ரூபாய் செலவழிச்சு ஒரு மண்ணும் ஆகல. வலி குறையக் காணோம். உனக்கு வீக்கம் வருமா?’

‘ காலைல … மழை பேயப் போகும் போது ..கடவுளே ..’

‘எனக்கும்தான். மதுரைல மேகம் வந்தா மானாமதுரைல மழைபேய்ஞ்ச கததான். இடது கைல ஈரம் வழிய ஆரம்பிச்சுரும்.’

‘சனியன் .. விடாம் ஒழுகும்.’

‘சரியாச் சொன்ன!’

திருடன் துப்பாக்கியைச் சற்று சங்கடத்துடன் பார்த்துவிட்டுப் பையில் சொருகிக் கொண்டான்.

‘தாத்தா! நீலகிரித் தைலம் போட்டுப் பாத்தியா?’

‘போதும் போதும்… சும்மா வெண்ணெய்யத் தடவினாக் கூடப் பரவாயில்லை.. சனியன்’ கோபமானார்.

‘சரிதான். பூனைக் கால் நகம் விழுந்த புண்ணுக்குக் கூட ஆகாது. நாம் ரெண்டு பேருமே இதுக்கு எதிரிதான். வலியைக் குறைக்க ஒரே வழிதான்… எதையும் மறக்க வைக்கிற குடிதான். இன்னைக்கி என் வேலை கெட்டது. டிரஸ் மாத்திட்டு வா போவோம். எங்கயாவது போய்க் குடித்து வலியை மறப்போம். மன்னிச்சுக்கோப்பா .. நான் பாட்டுக்குப் பேசுறேன். தா, மறுபடி வருது பாரு. யப்பா..’ திருடன் வலியில் முனகிணான்.

‘ஒரு வாரமா … உடுப்பு போடக்கூட முடியலப்பா. தாமஸ் வேற பக்கத்துல காவல் இருக்கு …’

‘போதும் எழுந்திருப்பா … உடுப்புக்கு நான் உதவுறேன்’

திடீரென்று வீட்டு ஆளுக்கு பழக்க வழக்கம் நினைவுக்கு வந்தது. தாடியை நீவிக் கொண்டார்.

‘இது வழக்கம் இல்லையே ..’

‘இந்தா சட்ட. மாட்டிட்டுக் கிளம்பு..’ திருடன் ஊக்கினான். ‘கிளம்புப்பா. என் நண்பன் ஒருத்தன் ஏதோ தைலம் போட்டு ரெண்டே வாரத்துல எல்லாம் சரியாயிருச்சின்னு சொன்னான். அங்க போயிப் பாப்பம்’

கதவை நெருங்கும்போது வீட்டு ஆள் மீண்டும் உள்ளே திரும்பினார்.

‘பணத்தை மறந்துட்டனே. நேத்து ராத்திரி மேஜைல வச்ச ஞாபகம்’

திருடன் அவர் வலது தோளைத் தொட்டுத் திருப்பினான்.

‘வாப்பா போலாம். கூப்டது நான். அதோட நிறுத்திக்குவம். என்ட்ட பணம் இருக்கு. எப்பவாது புத்தூர் தைலம் போட்ருக்கியா நீ’

------------