வெள்ளி, 1 ஜூலை, 2016

மொழிபெயர்ப்பு – online, offline


Online / offline இந்த இரண்டு எதிர்ப்பதங்களுக்கும் மொழிமாற்றம் இதுவரை சிக்கலாகத்தான் இருக்கிறது. வார்த்தைகளின் மூலம், பயன்பாடு என்று அலசிப்பார்த்ததில் தடம் (பாதை என்ற பொருளில்) என்ற தமிழ்ச் சொல் line என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மிக அருகில் பொருந்தி வருகிறது. ஏற்றம்/இறக்கம் on/off –க்கு ஒத்து வருகிறது.  On the line – தடத்தில் ஏறிநிற்றல் off the line – தடத்தில் இருந்து விலகி, அதாவது தடத்தில் இருந்து இறங்கி நிற்றல் என்று கொண்டால் ‘online-தடமேற்றம்’, ‘offline-தடமிறக்கம்’ என்ற பதங்கள் பொருள், பயன்பாடு இரண்டுக்கும் தகுந்தபடி இருக்கின்றன.

Online (on-line etc variants) – தடமேற்றம்
Offline (off-line etc variants)- தடமிறக்கம்

பயன்பாடு (app என்ற பதத்திற்கு மொழிமாற்றமாகப் பயன்படுகிறதே அந்த சொல்லை இங்கே நான் குறிக்கவில்லை) எடுத்துக்காட்டுக்கள்:

Warning! You must be online to use this feature.

எச்சரிக்கை! இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் தடமேற்றம் செய்திருக்க வேண்டும்.

Hi! I’m online

ஹாய்! நான் தடமேற்றம் செய்தேன்

Keep this data online

இந்தத் தரவைத் தடமேற்றம் செய்து வைத்திரு

This does not work if you are offline

நீங்கள் தடமிறங்கி இருந்தால் இது வேலை செய்யாது

5 கருத்துகள்:

  1. ரூட், டிராக் என எத்தனை சொற்களுக்குத் தான் இந்தத் தடம் என்பதைப் பயனாக்குவது? ஏற்கனவே எடுகோடு, விடுகோடு எனும் சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. நான் எடுகோட்டில் இருக்கிறேன். விடுகோட்டில் இருக்கையில் இது வேலை செய்யாது. இத்தரவை எடுகோட்டில் வைத்துவிடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரூட், டிராக் எல்லாமே பாதை, வழி, தடம் என்ற பொருளில்தான் பயன்படுகின்றன. கோடு என்னும் சொல் இத்தகைய பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை. பொதுவாக, வடிவ கணிதச் சொற்களுக்கே கோடு, இணை கோடு, தொடு கோடு என்றெல்லாம் பயன்படுகிறது. கோடு என்பதற்கு மலை என்ற பொருளும் இலக்கியத்தில் உண்டு. ஆனால் பாதையைக் குறித்து இந்தச்சொல் இலக்கியத்திலோ அன்றி பேச்சு வழக்கிலோ இல்லை. online/offline -ல் இருக்கும் line என்பது வழி, தடம், பாதை என்ற பொருளில்தான். ஆகவேதான் அதே பொருள் தரும் தடம் என்ற சொல் பொருத்தமானதாகும்.

      நீக்கு
  2. +கோடு என்றால் மலை மட்டுமல்ல கிளை, கொம்பு எனப் பல பொருட்கள் உள்ளன.
    +தடம் என்ற சொல்லுக்கும் பல பொருட்கள் இருந்தாலும், பேச்சுத்தமிழில் track, footstep என்ற பொருளில் மாத்திரம் தான் பெரும்பாலும் ஆளப்பட்டுவருகிறது.
    +சொல்லுருவாக்கத்தில் கவனிக்கத் வேண்டியவை நிறைய உள்ளன. முதலில் அச்சொல்லுக்கு நிகரான சொல் தமிழில் உள்ளதா, பழம் இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளதா, வழக்கொழிந்து போன சொல் உளதா, வேர்ச்சொல் யாது, தமிழை ஒட்டியதா, அச்சொல்லுக்கு நம் பண்பாட்டில் புழக்கத்தில் ஒரு சொல்லை உருவாக்கலாமா, ஏலவே ஒருவர் இச்சொல்லுக்கு நல்ல சொல்லொன்றைப் படைத்துள்ளாரா, பொதுவான வேர் எனில் அதிலிருந்து ஒரு சொல்லைப் படைப்பது இப்படி என.... இல்லாவிட்டால் ஒவ்வொரு துறைக்கும் ஒரு சொல் படைக்க வேண்டியது தான். இவை குழப்பத்தைத் தருபவை. முடிந்தவரை துறை தாண்டிய சொல்லாட்சிகளே சிறந்தவை.
    +online , offline விடையத்தில் ஒன்றுக்கொன்று நேரான சொல்லைப் படைப்பது உகந்ததாக இருக்கும். on/ off = எடு , விடு.
    +நீங்கள் சொல்லும் ஏற்றம், இறக்கம் எல்லாம் துல்லியமற்றவை. பெரும்பாலும் ஆங்கிலத்தில் - ate எனவரும் பின்னொட்டுக்கு நிகராக ஆளவேண்டியது இந்த ஏற்றம். எடுத்துக்காட்டுக்கு carbonation - கரிம ஏற்றம். online , offline என்பது ஒரு நிலை. அது ஒரு செயல் அல்ல. அதன் பின்னணியில் ஒரு செயற்பாடு ஒளிந்திருக்கலாம். ஆனால் முதற்கண் அது ஒரு நிலை. ஒரு மெய்நிகர் (virtual) ஆளின் அல்லது ஒரு எந்திரத்தின் நிலை. தன்முனைப்பால் வினைக்கும் விடையத்துக்கு வேண்டுமானால் ஏற்றம் பொருந்தும். இதற்கு அல்ல. கோட்டுக்குப் பதிலாக வேண்டுமானால், எடுதடம், விடுதடம் எனலாம்.
    இதில் வரும் lineக்கு எங்கு வழி, பாதை பொருள் வருகிறது? கம்பியில் இணைக்கப்பட்ட, கணுக்கப்பட்ட, தொடுக்கப்பட்ட நிலை தான் இங்கு, நமக்குத் தேவையானது ஒரு அடைச்சொல் :
    etymonline:
    online (adj.) : in reference to computers, "directly connected to a peripheral device," 1950 (originally as on-line).
    ... connected to, served by, or available through a system and especially a computer or telecommunications system (as the Internet) ; also : done while connected to such a system - m-w
    +முன்னர் இந்த டவுன்லோடு, அப்லோடுக்கு எவரோ பதிவிறக்கம் என்றால் சொல்லிவிட கேள்விகேட்காது பலரும் அதையே பயனாக்கினர். பதிவு என்றால் என்ன, அதை ஏன் இறக்க வேண்டும். வெறும் இறக்கம், ஏற்றமே போதாதா.. பாடலை இணையத்திலிந்து இறக்கிக் கொள்கிறேன். எனது புதிய படத்தில் மேலேற்றியிருக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்.
    +தமிழில் சொல் படைப்பதை ஓய்வு வேலையாகப் பலரும் செய்து வருகின்றனர். பிரெஞ்சுக் கழகம் போல எம் மொழியை நெறிப்படுத்த அனைவருக்கும் பொதுவான ஒரு நிறுவனம் இல்லாததால். ஒவ்வொருவரும் ஒரு பரிந்துரையை கொடுத்த வண்ணம் உள்ளனர். உண்மையில் ப. அருளி, மணவை முஸ்தபா, கு.அரசேந்திரன் , இராமகி போன்றோர் மிக மிக அருமையான சொற்களை ஏற்கனவே படைத்துள்ளனர். அவற்றை ஆள்வதும், அறிமுகம் செய்வதும், பொருத்தமில்லாதது என்று தோன்றும் சொற்களுக்கு மாற்றுத்தேடுவதும் சிறப்பான செயலாக இருக்கும்.
    +ஏற்கனவே உளவியல் (உளத்தியல்), இயற்பியல் (பூதிகவியல், இயல்பியல்), ஊடகம் (மிடையம்) , புலம் (diasporaவின் நிலத்தை குறிக்க ஈழத்தார் பயனாக்கும் சொல்), விசிறிகள் (fanaticsஇன் தவறான மொழிபெயர்ப்பு) என பிழையான சொல்லாட்சிகள் தமிழில் ஏராளமாக உலாவி வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லுருவாக்கம் என்பதற்கு கலைச்சொல்லாக்கம் என்ற சொல் ஏற்கனவே வழக்கில் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 1980 –களிலேயே கணினி அறிவியல் துறைக்கான தமிழ்ப் பாடத்திட்டத்தில் ‘கலைச்சொல்லாக்கம்’ என்பதை ஒரு அங்கமாக வைத்திருந்தது.
      முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்டதைப்போல தமிழ் மொழியை நெறிப்படுத்த பொதுவான கழகம் இல்லை என்பது குறை .
      இரண்டாவதாக இதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. ஒரு பிரபலமான நகைச்சுவை:
      Piece of conversation between an American and a British:
      American: Nice Elevator
      British: Nice LIFT!
      American: Elevator was invented in America
      British: But the language was invented in England

      இங்கே எது சரி, எது தவறு? இரண்டுமே மொழி வளர்ச்சியின் அடையாளம். அதனால்தான் தொழில்முறை மொழிபெயர்ப்பில் English(US), English(UK) என்றெல்லாம் மொழி வழங்கும் இடத்திற்கேற்ப வேறுபடுத்திச் செய்ய வேண்டியுள்ளது. தமிழிலும் இப்படி இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், மலேசித் தமிழ் என்று வந்துவிட்கோம். On / off என்பதற்கு எடு / விடு என்பது இந்தியத் தமிழில் பேச்சுவழக்கில் இல்லை எடு என்றால் take என்ற பொருளும் விடு என்றால் leave என்ற பொருளுமே வழக்கம். ஆகவே அதை இங்கே பயன்படுத்த முடியாது.
      On / off என்பவை ஆன், ஆஃப் என்று பேச்சு வழக்கிலும் கிராமங்கள் வரை எட்டிவிட்டன. On Company service என்பதைக் குறித்த OC என்பது தமிழில் ஓசி என்று வழங்கி, எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் மொழியோடு கலந்துவிட்டது. அதைப் போல ஆன், ஆஃப் கூட வைத்துக் கொண்டு ஆன்லைன், ஆஃப்லைன் என்று போய்விடலாம். ‘பிறசொல்’ என்று தமிழ் இலக்கணத்தின் முழு அனுமதியுடன் ஏற்றுக் கொண்டுவிடலாம். இது ஒரு வழி.
      On என்ற சொல்லுக்கு ‘இதன் மேல்’ என்றும் off என்பதற்கு ‘இதிலிருந்து விலகி’ என்றும் பொருள் வழங்குகிறது. On-premise, on-site/off-site என்று தொடர்புடைய சொற்கள் இன்னும் உண்டு. இவற்றை எல்லாம் ஆன் – பிரிமைஸ் என்று கொண்டு போனாலும் மொழியின் சொல்வளத்தை ஆராயாமல் எல்லாவற்றையும் ‘பிறசொல்’ என்று செய்து விடுகிற பழி வரும்.
      கூர்ந்து பார்த்தால் இந்தச் சொற்களில் வரும் on/off என்ற முன் கூட்டல் தமிழில் பொருள் கொள்ளும்போது தடம்-மீது, தடம்-விலகி, வளாகத்துள், உள்-நிலம் / வெளி-நிலம் என்று சந்தர்ப்பத்திற்குத் தக்க முன் அல்லது பின் கூட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆக்வே பொதுவான முன் கூட்டலாக எடு/விடு, உள்/வெளி அல்லது மீது/விலகி, பட்டு/விட்டு என்று எடுத்துக் கொள்ள இயலாமல்தான் இருக்கிறது.
      இன்னும் சற்று ஆராய்ந்ததில் முன்கூட்டல் கொண்ட இந்த ஆங்கிலச் சொற்களின் பொருள் தமிழில் பின் கூட்டலாகத்தான் பொருள்கொள்ள வருகிறது. ஆகவே தடம்-உள்ளே//தடம்-வெளியே, இடம்-உள்ளே/இடம்-வெளியே, புலம்-உள்ளே/புலம்-வெளியே என்பது பயனுள்ளதாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
      I’m online – நாள் தடம்-உள்ளே; I’m offline – நான் தடம்-வெளியே
      Your device must be online to use this. – இதைப் பயன்படுத்த உங்கள் சாதனம் தடம்-உள்ளே இருக்க வேண்டும்
      To Purchase online – தடம்-உள்ளே வாங்குதற்கு
      Let us take this discussion off-line – நாம் இந்த விவாதத்தைத் தடம்-வெளியே செய்யலாம்.
      It is an on-site project – இது ஒரு புலம்-உள்ளே திட்டம்
      It is done off-shore – இது நிலம்-வெளியே செய்யப்படுகிறது
      The data center is on-premise – தரவு மையம் வளாகம்-உள்ளே
      இன்னும் சுருக்கிக்கூட தடம்-உள் / தடம்-வெளி, புலம்-உள்/புலம்-வெளி, நிலம்-உள்/நிலம்-வெளி என்றும் வைத்துக் கொள்ளலாம்.
      தடமகம்/தடப்புறம் என்று கூட யோசிக்கலாம். ஆனால் இத்தகைய சொற் கூட்டல் பொருளை மாற்றிவிடும். தடம்-அகம் / தடம்-புறம் என்றாலும் மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் இட்டுப் பார்த்தால் அத்தனை பொருத்தமாயில்லை. ஆகவே முடிவாக:
      1. on/off குறிக்க உள்ளே / வெளியே என்ற பதங்கள்
      2. தமிழில், இவை பின்கூட்டலாகப் பயன்படுதல்
      ஆய்ந்து சொல்லுங்கள். ஏற்புடையதாக இருந்தால், உள்ளீடைத் தகுந்தபடி மாற்றிவிடுகிறேன்.

      நீக்கு