வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஜெயகாந்தன் - தமிழ் எழுத்தை ஞானபீடத்தில் அமர்த்திய அரசன்

ஜெயகாந்தன்! எங்களைக் காந்தமாக இழுத்த பெயர். இலகுவான எழுத்து நடையில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை இந்த அளவு இலக்கியமாக்கிக் காட்ட இயலுவது சிலருக்குத்தான் சாத்தியம்.

மீனாக்ஷி புத்தக நிலையம் என்ற பெயரை நான் அறிந்ததே ஜெயகாந்தனைத் தேடித்தேடி வாங்கியதால்தான்.

சிறு கதைகளில் மன்னன்; குறு நாவல்கள் இந்த அளவு எத்தனை பேர் தமிழில் எழுதியிருக்கிறார்கள்? 'குரு பீடம்', 'ஊருக்கு நூறு பேர்', 'பிடி கருணை', 'ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்' ... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். படிக்கப் படிக்க உயிர் தருகிற வரிகளை எழுதியவர் இவர்தானா என்று நேரில் கண்டபோது வியப்பு!

இன்னும் சென்னையில் 'நியூ செஞ்சுரி' (புறாக்கூடிபோன்ற சிறிய நிலையம்! வரலாறு கண்ட களம்) பக்கம் போனால் ஜெ.கே தான் நினைவில் நிறைகிறார்!

தன் கதைகளைத் தானே திரைப்படமாக்கி எழுத்தை ஓவியமாக்கும் வித்தையும் செய்தவர்.

தேடித்தேடி வாங்கி வீடு முழுக்க நிறைத்து வைத்திருக்கிற ஜெயகாந்தன் புத்தகங்கள் ... இன்று ஏக்கமாகப் பார்க்கின்றன. எழுத்தை ஆண்ட தலைவன் இனி எழுத்துக் களுக்குப் பொருளாக ஆகிவிட்டார்.

'இரும்புதான் எஃகாகிறது ஆனால் இரும்பைப்போல் அது உடைவதில்லை!'
'நதி பழைய நதி! புது வெள்ளம் போகிறது!'

பள்ளி வயதில் பசுமரத்தாணியாய்ப் பதிந்துவிட்ட ஜெ.கே வார்த்தைகள். என் இளவயது நட்குறிப்புகளை எடுத்துப் பார்த்தால் முதல் பக்கத்தில் பதிந்திருக்கும் இன்னும் எத்தனையோ வாக்கியங்கள்!

ஜெ.கே! காலம் கடந்த காலம்!