வியாழன், 26 ஜூன், 2014

இன்றைய திருக்குறள்






Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.




இன்றைய திருக்குறள்
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

மனதில் நினைப்பது உயரியதாக, பெரியதாக இருக்க வேண்டும். மற்றபடி அது நிறைவேறுமா முடியாதா என்று நினைத்து பெரிதாக நினைக்கப் பயப்படக் கூடாது என்பது பொருள்.

பெரிதாக நினைக்கப் பயப்படுபவர்கள் நிறையப்பேர். சிறிதாக ஆரம்பித்துப் பெரிதாக வளர்ந்து நிற்கும் நிறுவனங்களின்(வியாபார நிறுவனங்கள் மட்டுமில்லை. கட்சி, மதம், இயக்கம் எல்லாமே நிறுவனம் தான்)பின்னனியில் இந்த ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் குணம் உள்ளது. வந்தது வரட்டும் என்று இறங்கி வேலை பார்க்கிற திறன்! கர்மம் செய் பலன் எதிர் பாராதே என்று கீதை சொல்லுவதைப் போல, சில சமயம், பலன் என்ன ஆனாலும் சர் என்று அபாயத்தில் இறங்கி, இதுதான் என் குறிக்கோள் என்று இறங்குபவர்களுக்கு வெற்றி தானாக அமைகிறது. வேண்டி விரும்பிப் போவதில்லை.

ஒரு காரியம் வேண்டும் என்று நினைத்து இறங்கி வேலை பார்த்தால் தானாக ஒரு நாள் கிடைக்கும். என்னால் முடியாது என்றால் – முடியாது. முடியைக் கட்டி மலையை இழுக்கிற policy. வந்தால் மலை; போனால் .. என் நேரத்தில் என் உழைப்பைச் செலவிட்டு முயலுகிறேன். ஆகவே நட்டமில்லை.

செவ்வாய், 24 ஜூன், 2014

பழக்கம் -3

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.


பழக்கம் -3

முதல் வரி: "சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்"

இரண்டாம், மூன்றாம் வரிகள் இங்கே

'பழக்கம்' என்பது பற்றி ஒரு சங்கப் பாடல். நாலு வரிப் பாடலின் கடைசி வரி இன்று:



                              "ஞானமும், தயையும், கொடையும் பிறவிக் குணம்"


ஞானம் என்பது சூட்சும அறிவு. உண்மையை ஆராய்ந்து அடிப்படையயைப் புரிந்து கொள்கிற ஆற்றல். பிறக்கும் போதே சில திறமைகள் – இராமானுஜத்திற்கு கணிதம், இரமணருக்கு ‘நான் யார்’ என்ற கேள்வி, இரவி வர்மாவுக்கு ஓவியம் … என்று பிறவி ஞானம் கொண்டவர்கள் உண்டு. பலருக்குக் கல்வியறிவு விஷய ஞானத்தைக் கொடுக்கும். சிலருக்கு சில விஷயங்கள் சுட்டுப் போட்டாலும் அறிவு வராது.

தயை என்பது கருணை; இரக்கம். Signal லில் வண்டி நிற்கிற சில நொடிகளில் கை ஏந்தி வருகிறவர்களுக்கு வேஷம் கட்டிக் கொண்டு வருகிறார்கள் (ஹைதராபாத் சைபராபாத்தில் இது ரொம்ப professional ஆகவே நடக்கிறது – கிளிசரின், இரக்கத்தை உண்டு பண்ணும் அலங்காரம் எல்லாம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். யாரோ பெரிய ஆள் பின்னணியில் நிச்சயம் உண்டு. ). தெரிந்தும் கூட, கையேந்தி விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் பையைத்திறந்து காசு போடுபவர்களைப் பார்க்கலாம். சென்னையில் e-train நிலையங்களில் எல்லாம் season ticket வாங்கிக் கொண்டு தினம் பயணிக்கிறவர்களில் பெரும் பாலோர் தினம் ஒரு ரூபாயாவது ‘தானத்திற்கு’ என்று வைத்துக் கொண்டு தேடிப் போய்க் கொடுக்கிறார்கள். ‘இன்னாபா, போனவாரம் ஆளைக் காணோம். உட்ம்பு சரில்லியா?’ என்று விசாரிக்கும் அளவு பழக்கம் வந்துவிடுகிறது. என்றாலுல் தெரிந்தேதான் கொடுக்கிறார்கள்.

கொடை என்றாலே கர்ண மகாராஜன் பெயர்தான் சொல்லவரும். அத்தகைய கொடையாளி காண்பது அரிது. மகாபாரதத்தில் இந்தக்கதை வருகிறது. கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சதா போட்டி. ஆனால் கொடையில் மட்டும் கர்ணன் பெரியவன் என்பதே சகலரின் கருத்தாக இருந்தது. ஒருநாள் தாங்க முடியாமல் பீஷ்மரிடம் கேட்டே விட்டான் அர்ஜுனன்:

“என்ன பெரிய கொடை? நானும் தான் வறியவர்களுக்கு, தானம் கேட்பவர்களுக்குக் கொடுக்கிறேன். இதில் கர்ணன் என்ன பெரிதாக யாரும் செய்யாததைச் செய்துவிட்டான்?”

பீஷ்மர் அர்ஜுனனை ஊர் மனித நடமாட்டம் அதிகமுள்ள ஒரு இடத்திற்கு அழைத்துப்போய் மலையாய்க் குவித்து வைத்திருந்த தானியக் குவியல் இரண்டில் ஒன்றைக் காட்டிச் சொன்னார் “அர்ஜுனா! இதை இன்று பொழுது சாய்வதற்குள் தானம் செய்துவிடு!” 

சற்று நேரத்தில் கர்ணனும் அங்கு அழைத்து வரப் பட்டான். பீஷ்மர் அவனிடம் அடுத்த தானியக் குவியலைக் காட்டிச் சொன்னார்: “கர்ணா! இதை இன்று பொழுது சாய்வதற்குள் தானம் செய்துவிடு!” 

அதற்குள் இரண்டு வழிப்போக்கர்களை அழைத்து குனிந்து மண்வெட்டி கொண்டு தானே எடுத்து இரண்டு கூடைத் தானியம் தானம் செய்து முடித்துவிட்டான் அர்ஜுனன். பெருமையோடு பார்த்தான்.

சற்று நேரத்தில் அந்த வழியே வந்த ஒருவன் அர்ஜுனனிடம் ஒருகூடை தான வாங்கிக் கொண்டு கர்ணனிடம் வந்து நின்றான். கர்ணன் நிமிர்ந்து நின்றவாறே கையைக் காட்டிச் சொன்னான் 
“இது அத்தனையும் உங்களுக்கே! எடுத்துக் கொண்டு போங்கள்”. 

ஒரு கைகாட்டல், ஒரு வாக்கியம்; அது கர்ணவாக்கியம்! மொத்த தானிய மலையும் தானமாகிவிட்டது. பீஷ்மரிடம் திரும்பிக்கேட்டான் 

“இன்னும் வேண்டுமே? பொழுது இருக்கிறது.”

அப்போதுதான் அர்ஜுனனுக்குப் புரிந்தது.

உலகத்தின் பல பாகங்களிலும் கொடை என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. பெரும் கொடை வள்ளல்கள் என்று பெயர் கொண்டவர்களுக்குப் பஞ்சமில்லாத உலகம். தமிழகத்தில் கடைஏழு வள்ளல்கள் பாரி, காரி, ஓரி, பேகன், அஞ்சி, அதிகமான், ஆய் என்று புலவர்கள் புண்ணியத்தில் புகழ் நிலைத்து நிற்கிறார்கள். 

கையேந்துபவர்களுக்கு இரக்கப் பட்டுக் கொடுப்பது; சோம்பேறி, கையேந்தி ஓசிக் காசு கண்ட சுகத்தில் மூழ்கி, முடிந்தாலும் உழைக்க மாட்டேன் என்கிறான் என்று தெரிந்தும் ‘போகிறான் போ! அவன் பாடு அவனுக்கு. கையேந்தி விட்ட பாவத்திற்காவது ஏதாவது கொடுத்து விரட்ட வேண்டியதுதான்’; ‘எனக்கு சின்ன வேலை என்றாலும் தினம் ஏதோ கிடைக்கிறது. என்னிலும் கழிவு உலகத்தில் இருக்கிறது. ஏதாவது, ஏழைக்கு ஏழை …’; உழைத்துச் சம்பாதித்த பணம். எனக்குப் பிறகு யாருக்காவது உதவட்டும்; என்ன சம்பாதித்து என்ன, பணம் கொடுத்தாவது பாவத்தைத் தொலைக்கிறேன்; … இன்னும் எதேதோ காரணங்கள்! 

ஆனால், கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் சிறு துளியாவது இரத்தத்தில் இல்லாவிட்டால், ஒருவனால் கொடுக்க முடியாது. அதனால் தான் “ஞானமும், தயையும், கொடையும் பிறவிக்குணம்”

“எருமையூரான் கொடை” என்று முடியும் ஔவையார் செய்யுள் ஒன்று விநோதக் கொடையாளி பற்றி உண்டு. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அதைப் பார்க்கலாம்.



முழுச் செய்யுள்

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் – நித்தம்
நடையும் நடைப் பழக்கம், ஞானமும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.