ஞாயிறு, 15 ஜூன், 2014

விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15
அத்யாயம் 15:  நிச்சயதார்த்தம்  – பகுதி1:


ஃப்ராங்கன் - ஹேயரில் இப்போது மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த பீட்டர் நிமிர்ந்த தலையும் நேரிய நடையுமாக வலம் வரக் கற்றுக் கொண்டான். சவரக்கத்தி அல்லது நடுத்தர உல்லாச ஊர்தி விளம்பரங்களிலோ வருகிற வெற்றிகரமான இளைஞனின் சாயல் வந்திருந்தது.
நன்றாக உடை உடுத்தி, பிறர் அதைக் கவனிப்பதைக் கண்டு வைத்துக் கொண்டான். உய்ர் மத்திய தட்டு மக்கள் வசிக்கும் தெருவில் ஒரு வீடு; விலை உயர்ந்த ஓவியங்கள் மூன்று; வாங்கிய நாளிலிருந்து புரட்டிப் பார்க்காத முதல் பதிப்புப் புத்தகம் ஒன்று என்று சுமாராக சொத்து சேர்த்திருந்தான்.
அரிதான நாட்களில் பணக்கார நாடக அரங்கங்களுக்கு வாடிக்கை யாளர்களை அழைத்துச் செல்லும் தகுதியும் வந்திருந்தது. ஒரு முறை வேஷம் கட்டுகிற விருந்தொன்றில் இடைக்கால கல்வெட்டுபவனைப்போல உடையணிந்து வந்து கலக்கினான். அது அவன் புகைப்படத்துடன் மேல்தட்டு பக்கங்களில் வந்த போது பத்திரிக்கையின் அந்த செய்தியை வெட்டிப் பத்திரப் படுத்தினான்.
முதல் கட்டிடத்தை, அதன் பொருட்டு கொண்ட அச்சத்தை எல்லாம் மறந்து போனான். அது எத்தனை சுலபம் என்ற வித்தை தெரிந்து விட்டது. ஆடம்பர முகப்பு, தோரணையான வாயில், அரண்மனை போன்ற வரவேற்பறை; இவை மட்டும் இருந்தால் போதும் மக்களுக்கு என்ற நுணுக்கம் தெரிந்து விட்டது; வாடிக்கையாளர்கள் திருப்தியே அவன் திருப்தியும்கூட. வாடிக்கையாளர்களுக்கோ விருந்தினர் மூக்கில் கைவைத்து அதிசயித்தால் அதுவே திருப்தி; விருந்தினர்களுக்கோ எதைப் பற்றியும் கவலையில்லை; ஆக சகலருக்கும் திருப்தியான வழி.
அன்னை ஸ்டேன்டன் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு நியூயார்க்கிற்கு அவனுடன் குடிவந்து விட்டாள். கீட்டிங்கிற்கு இதில் சம்மதமில்லை என்றாலும் அன்னை என்ற தகுதியை மதித்து ஓரளவு சந்தோஷமாகவே வரவேற்றான். உலகில் தனக்கென்று ஓரிடம் பிடித்துவிட்டான் அல்லவா? ஆனால் அன்னைக்குத்தான் திருப்தி வரவில்லை. அறையை, உடையை, வங்கிக் கணக்கை ஆராய்ந்துவிட்டுச் சொன்னாள் “இப்பொதைக்கு இது பரவாயில்லை பீட்டி”
ஒரே ஒரு முறை அவன் அலுவலகம் போய் அரை மணியில் திரும்பிவிட்டாள். அன்றிரவு கையைப் பிசைந்த வாறு அவள் முன் அமர்ந்து ஒரு மணி நேரம் அறிவுரை கேட்க வேண்டியதாயிற்று பீட்டருக்கு. “இதோ பார் பீட்டி! வித்தர் அறை உன்னைவிட நன்றாக இருக்கிறது. நீயும் உன் மதிப்பில் கவனம் செலுத்தனும். ஒரு சின்னப் பையன் உன்னிடம் படம் கொண்டுவந்து கொடுத்தானே .. அவன் உன்னோட பேசுற விதம் சரியில்லை .. ஓ ஒன்ணும் இல்லை .. நானாயிருந்தா அவன் மேல ஒரு கண் வச்சிக்கிட்டே இருப்பேன் .. அந்த நீள மூக்கன் கூட ரொம்பப் பழகாதே, சும்மா தெரிஞ்சி வச்சுக்கிட்டாப் போதும். அந்த பென்னட்டிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாயிரு. நான்னா அப்போதே அவனைத் துரத்தியிருப்பேன். முன்னுக்கு வரணும்கிற வெறி அவனுக்கு ரொம்பவே இருக்கு .. அதெல்லாம் சரி உன் ஃப்ராங்கன் எப்படி? … குழந்தை குட்டி உண்டா?”
“ஒரே ஒரு மகள்”
“ஓ .. அவள் எப்படி?”
“நான் பார்த்ததில்லை”
“உண்மையிலேயே பீட்டி நீ இப்படி அவர் குடும்பத்தைச் சந்திக்காமல் இருப்பது மரியாதையாக இல்லை.”
“அவர் மகள் வெளியூரில் படிக்கிறாள். ஒருநாள் சந்திக்கத்தான் போகிறேன். இப்போ தூக்கம் வருது; நேரமாச்சு; நாளைக்கு நிறைய வேலை இருக்கும்மா”
ஆனால் அன்றிரவும் மறுநாளும் அவன் யோசனை அதைப் பற்றியே இருந்தது. இதற்கு முன்னாலும் யோசித்திருக்கிறாந்தான். ஃப்ராங்கன் மகள் கல்லூரி முடித்து விட்டு ‘நியூயார்க் பேனர்’ பத்திரிக்கையில் வேலை பார்க்கிறாள் என்பதும் தெரியும். அதில் வீட்டு அலங்காரம் பற்றிச் சிறு பத்தி எழுதுகிறாள் என்பதற்குமேல் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில் யாருக்கும் அவளிடம் பழக்கமில்லை. ஃப்ராங்கனோ அவள் பற்றி வாயைத் திறக்க மறுத்தார்.
மறுநாள் மதிய உணவின் போது மெதுவாக விசாரித்தான்.
“ஹே ஃகை! உன் மகள் பற்றிப் பெரிதாகக் கேள்விப்பட்டேன்”
“எங்கே?” பர பிரும்மமாகக் கேட்டார்.
“அது … காத்து வாக்கில் காதுக்கு வந்தது. ரொம்ப நல்லா எழுதுறாங்களே”
“ஆமாம். ரொம்ப நல்லா எழுதுறாள்” ஃப்ராங்கன் பிடி கொடுக்க மறுத்தார்.
“ஒரு நாள் அவங்களைச் சந்திக்கலாமா?”
ஃப்ராங்கன் அவனைப்பார்த்துப் பெரு மூச்சு விட்டார்.
“அவள் என்கூட என் வீட்டில் இல்லை. தனியா வீடு வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த முகவரி கூட எனக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ .. எப்போதாவது ஒருநாள் சந்திக்கத்தான் போகிறாய். உனக்கு அவளைப் பிடிக்காது பீட்டர், விட்டுடு.”
“ஐயோ என்ன இப்படிப் பேசுறீங்க? “
“தலை விதி! ஒரு தந்தைங்கற முறையில் எனக்கு இதில் தோல்விதான். சரி அதை விடு. திருமதி மேநிங் புது மாடிப்படி பத்தி என்ன சொன்னாள் சொல்”
கீட்டிங்கிற்கு கோபம், ஆத்திரம், கூடவே நிம்மதிப் பெருமூச்சு. எதிரே இருந்த ஃப்ராங்கனின் கொழுத்த உருவத்தைப் பார்த்தான். இவனிடமிருந்து எந்தச் சாயல் அவளுக்கு வந்திருக்கும்? இவ்வளவு அங்கலாய்க்கிறானே, வழக்கம் போலப் பணமும் அழகும் ஒன்று சேராத அவ லட்சணமோ? ஆனால் அதெல்லாம் அவன் ஆசைக்குக் குறுக்கே வந்து விடுமா என்ன? அந்த நாள்வர இன்னும் அவகாசமிருக்கிறது. இன்றிரவு கேத்தரினைப் பார்க்க வேண்டும்.

(continues ...)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக