புதன், 18 ஜூன், 2014

பழக்கம் - 1

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



'பழக்கம்' என்பது பற்றி ஒரு சங்கப் பாடல். நாலு வரிப் பாடலின் முதல் வரி இன்று.

"சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்"

சித்திரமும் கைப் பழக்கம்:

சித்திரம் என்பது நன்றாகப் புரியும் படி வரைந்து காட்டுவது. மொழி புரியாமல் போகலாம், ஆனால் சித்திரம் தெளிவாகப் புரி வைக்க உதவும் கருவி. விசித்திரம் என்பதன் பொருள் சிலசமயம் ‘புரியாதது’ என்று வரும்; சில சமயம் ‘வித்தியாசமானது’ என்றும் வரும். (அப்படின்னா modern art ‘விசித்திர’மா? என்று கேட்பவர்களுக்கு – எனக்கே அந்த சந்தேகம் தான். என்னிடம் பதில் இல்லை.)

 ‘விசித்ரசித்தன்’ பெயர்க் காரணம் அதுதான். மகேந்திர பல்லவன் தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர். பல்லவனுக்கு கற்பாறைகளைக் குடைந்து கோவில் அமைக்க வேண்டும், சிற்பம் அமைக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. அதற்குமுன் (‘உலக வரலாற்றிலேயே முதல் முறையாக?’ )வட இந்தியாவில் அஜந்தா, எல்லோரா எல்லாம் குகைக்கோவில்கள் அதற்கு முன்பெ ஏற்பட்டு விட்டன. ஆனால் ஒரு வித்தியாசம். அவற்றின் சுவர்களை அலங்கரித்தது ‘ஓவியங்கள்’. அங்கேதான் பல்லவனுக்கு சற்றே விசித்ரமான எண்ணம் தோன்றி, ஓவியங்களுக்குப் பதில் சிற்பங்கள் – அதாவது கதை சொல்லும் சிலைகள் – அமைத்தான். ‘உனக்கென்ன பைத்தியமா?’ என்று யாராவது கேட்டிருக்கலாம். ஆமாம் நான் அப்படித்தான் என்று சொல்லியிருக்கலாம். மன்னன் என்பதால் ‘பைத்தியம்’ என்று சொல்லாமல் கௌரவமாக ‘விசித்ரசித்தன்’ என்று அழைக்கத் தோன்றியிருக்கலாம். ‘விசித்ரசித்தன்’ என்று Ayn Rand கதையின் மொழிபெயர்ப்புக்குப் பெயர் வைக்கக் காரணம் இதுதான். இதன் hero, Howard Roark இந்த வார்த்தைக்கு இலக்கணம் வகுத்தாற்போன்ற குணம் கொண்ட பாத்திரம் – ஒருவகையில் புரியாத புதிர்; மறுவகையில் பிடிவாதமாகத் தன் போக்கில் கட்டிடங்களைப் புது பாணியில் உருவாக்கக் கிளம்புகிறான்.


செந்தமிழும் நாப்பழக்கம்

தமிழ் மட்டுமில்லை, எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும். பேசிப் பேசி நாக்கு பழகவேண்டும். இல்லை என்றால், வார்த்தை உச்சரிப்பு வராது அல்லது வார்த்தை என்ன என்றே பிடிபடாது. பத்து வருடத்துக்கு மேல் தழிழ் நாட்டிற்கு வெளியே வசித்து விட்டு, வேறு மொழி பேசிவிட்டு வர நேர்ந்தது. பேச்சு வரவில்லை – கடைக்குப் போனால் ஆலு, பொட்டேடோ என்று வருகிறதெ தவிர அது உருளைக்கிழங்கு என்று சட்டென்று வாயில் வர மறுத்து விட்டது. அலுவலகத்தில் சரளமாகத் தமிழ் பேச முடியாமல் இழுத்தது. வீட்டில் அந்தப் பிரச்சினை இல்லை. வழக்க மாகத் தமிழ்தான். ஆனால் வீட்டிற்கு வெளியே பெரிய பிரச்சினையாகி விட்டது. அதுவும் மதுரைத் தமிழ் பழகிய நாக்கு, சென்னைத் தமிழ் பேச, புரிந்து கொள்ளக்கூட சிரமப்பட்டது. ஏறக்குறைய ஒருவருடம் ‘கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ மாதிரி பேச்சு. உள்ளே அவமானமாக இருந்தாலும் வெளியே மக்கள் என்னவோ ரொம்ப மதித்தார்கள். என்ன கொடுமையோ! ஆனால் மொழிபெயர்ப்புசெய்கிற பழக்கம்தான் வார்த்தைகள் மறவாமல் இருக்க உதவி புரிந்தது. எந்த மொழியும் ‘நாப்பழக்கம்’ – பேசப்பேச வரும்’


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக