சனி, 19 நவம்பர், 2022

தமிழ்நாடு மாநிலம் - பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்

தமிழ்நாடு மாநிலம் - பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம்

குறிப்பு: இந்தக் கட்டுரை பெண்ணியம் பேசுகிறது. அரசியல் தென்பட்டால் அது பெண்ணியம் தொடர்பானது மட்டுமே.

விலையில்லா வேலை, விலையில்லா சேவை

சுமை தூக்கும் தொழிலாளி தொடங்கி தரகு வரை கூலியாக அல்லது கட்டணமாக அல்லது சம்பளம் என்று பல பெயர்களில் வேலைகளுக்குப் பணம் கைமாறுகிறது.

ஆனால் எவ்வித பணமும் கொடுக்காமல் பிறரிடம் இருந்து வேலைகளை இந்த உலகம் அனுபவிப்பது இரண்டு வகையில்தான்.

1.   1. கொத்தடிமைகள் -இன்னும் உலகில் இது ஏதோ உருவத்தில் இருக்கத்தான் செய்கிறது.

2.  2. பெண்கள் - தாய், மனைவி, மகள், உடன்பிறந்தவள் என்ற பெயர்களில் எங்கேயும் எப்போதும் பெண்கள் சம்பளம் இல்லாத வேலையாட்களாக இருந்து வருகிறார்கள். பணம் கொடுக்காவிட்டால் கூடப் பரவாயில்லை, சிறிதும் நன்றி, அங்கீகாரம் இல்லாத வேலை பெண்கள் செய்கிற வீட்டு வேலை.

சமூகம் பெண்கள் மீது திணிக்கின்ற சுமைகள் அதிகம். பாரம்பரியம், கலாச்சாரம், பாதுகாப்பு என்பது போன்ற வடிவங்களில் பெண்களின் நடமாட்டம் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதிக்கப்படுகிறது. ஆகவேதான் வீட்டு வேலைகள் பெண்களிடம் கட்டாயமாக சுமத்தப்படுகின்றன.

வெளியில் பணம் சம்பாதிக்கும் ஆண், அது சமையல், தையல் வேலை என்றாலும்கூட வீட்டிற்குள் அந்த வேலையைச் செய்தால் மதிப்புக் குறைந்துவிடும் என்று செய்ய மாட்டார். அப்படி வீட்டு வேலையைச் செய்யத் துணியும் ஆண்கள் இன்னுமே இழிவாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் இன்றளவும் - மதிப்பைக் குறைக்கும், உழைப்பைச் சுரண்டும், நன்றிகெட்ட - வீட்டு வேலை பெண்களுக்கு மட்டும் ஏக போகக் கடமை.

பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளின் மதிப்பை அளப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தொடங்கி யாருக்கும் இன்றளவும் இயலவில்லை. சரி, பணம் இல்லை என்றாலும் இந்த வேலைகளுக்கு முறையான நன்றியாவது கிடைக்கிறதா? வீட்டு வேலை என்பது முறையான அங்கீகாரம் கிடைக்காத பணி, சேவை! உண்மையிலேயே விலையில்லா வேலை, விலையில்லா சேவை இதுதான்.

சுருக்கமாகச் சொன்னால் வங்கியில் சென்று கடன் கேட்டால் இதை ஒரு வேலை என்று மதித்துக் கடன் கொடுக்க மாட்டார்கள்!

யாரும் பறிக்க முடியாத பணம்

பெண்களுக்கென்று சலுகைகள் வழங்குவதை நீர்த்துப் போகச் செய்கின்றவர்களும், எதிர்ப்பவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும்தான் அதிகம் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதி வண்டி கொடுக்கப்படும்போது அவை வீடு வந்து சேரும் முன்பே அடகுக் கடைக்குப் போன இடங்கள் ஏராளம்.

ஆனால் மாணவர்கள் கையில் உள்ள இலவசப் பேருந்துப் பயண அட்டையை வேறு யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாது.

அது போல யாரும் பறிக்க முடியாத, ஏமாற்றி அனுபவிக்க வாய்ப்புகள் மிகக் குறைவான ஒரு சலுகைதான் தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துப் பயணம் இலவசம் என்பது.

இது யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாதபடி நமக்குத் தரப்பட்டிருக்கும் பணம். வீட்டு வேலைக்குக் கிடைத்துள்ள குட்டியூண்டு சம்பளம்.

இலவசம் என்றால் கூசாதா? இலவசம் அவமானம் இல்லையா?

அவசரத்தில் இலவச வண்டி என்று தெரியாமல் ஏறிவிட்டு நடத்துநர் பயணச்சீட்டு கொடுத்த போது புரிந்ததும் முதலில் எனக்கு ஒருவிதக் கூச்சம், நமக்குத்தான் கையில் பணம் இருக்கிறதே, சம்பாதிக்கிறோமே, சலுகை என்றால் ஏழைகளுக்கு, இயலாதவர்களுக்குத்தானே. எனக்கு எதற்கு என்றெல்லாம் என்னுள் போராட்டம்.

வீட்டில் வந்து ஆற அமர சிந்தித்த போதுதான் புரிந்தது.

நான் எல்லாம் பல சகோதரிகள் அளவு வீட்டில் அதிகம் வேலை செய்கிற ஆள் இல்லை, ஆனாலும் சில கடமைகளைத் தவிர்க்க முடியாமல் நானாக ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறேன். ஆணாக இருந்தால் இப்படி இருந்திருக்க மாட்டேன். நிச்சயமாக! எனக்கு உள்ளும் பிறவி தொடங்கி இந்த சமுதாயம் எனது இரத்தத்தில் ஏற்றிவைத்துள்ள ‘பெண்மை’ எங்கோ இருந்துகொண்டு இந்த வலையில் என்னைப் பிணைத்துவிடுகிறது. இந்த வேலைகள் செய்யும் போது எனக்குத் தெளிவாகவே உணர முடிகிறது, மதிப்பு குறைத்தே நடத்தப்படுகிறேன். என் கருத்துக்களுக்கு, விருப்பங்களுக்கு மதிப்பு தரப்படுவதில்லை.

இந்த நன்றி கெட்ட வீட்டு வேலையில் செலவழிக்கும் என் நேரத்தையும் உழைப்பையும் அலுவலக வேலை அல்லது வியாபாரத்தில் பாயவிட்டால், ஆண்கள் போலப் பணமாகச் சம்பாதித்துக்கொண்டு இருக்கலாமே. அப்போது வீட்டில் பாத்திரம் கழுவுவது, சமையல் உள்ளிட்ட வேலைகளை சம்பளப் பணம் கொடுத்து வேறு சகோதரிக்கு இதை ஒரு வருமானம் தரும் வேலையாக ஆக்கி அந்த வேலைகளுக்கும் மதிப்பை ஏற்றலாமே!

அப்போதுதான் இத்தகைய ‘பெண்ணிய’ சிந்தனைகளை மீறிக் கடமை உணர்ச்சியில் செய்கின்ற வேலைக்குச் சமுதாயம் தருகின்ற அங்கீகாரமாகவே இந்தப் பேருந்துப் பயணத்தை என்னால் உணர முடிந்தது. காலையில் பாத்திரம் தேய்த்துவிட்டு, வீட்டைப் பெருக்கி விட்டு, உடைந்த பல்பை மாற்றிவிட்டு வந்த வேலைக்கு தமிழ்நாடு அரசின் இலவசப் பேருந்து சேவை யாரும் பறிக்க இயலாத ‘எனக்கே எனக்கான உரிமை’ ஊதியம் என்பது புரிந்தது.

·         உதிரிப் பூ மூட்டையைச் சுமந்து கொண்டு மதுரை பூ சந்தையில் இருந்து அதிகம் வேண்டாம், கோரிப்பாளையம் வரை நடந்து சென்று பாருங்கள்,

·         அதிகம் வேண்டாம், ஒரே ஒரு தார் வாழைப் பழங்களைத் தலைச்சுமையாகக் கூடையில் சுமந்து கொண்டு இரண்டே இரண்டு தெரு சுற்றி விற்றுப் பாருங்கள்,

·         அழுக்குத்துணி மூட்டையைச் சுமந்து கொண்டு துவைப்பதற்காகத் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரக் கணக்கில் பேருந்து வசதி இருந்தால் கூட கால்நடையாகவே ஆற்றுக்கு நடந்து திரும்பும் நமது கிராமத்துத் தாய்மார்கள் வேலையைச் செய்து பாருங்கள்,

·         பருப்பு ஆலையில் 60 கிலோ மூட்டையை ஆண்களுக்கு இணையாகச் சுமந்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்,

அப்போது புரியும் - 10 ரூபாய் சேமிப்பதற்காக எத்தனை சுமையை நம் பெண்கள் சுமக்கத் துணிகிறார்கள் என்று.

இன்று இலவச பேருந்துப் பயணம் இவர்களில் பெரும்பான்மையானோருக்குப் பெரிய வரம்!

நன்றி சொல்லலாமா?

பெண்கள் சேமிக்கும் பணம் குடும்பத்திற்கே செலவழிகிறது. வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி குடும்பத்தினருக்குச் சோறு போடத்தான் சுமை தூக்குகிறார்கள் பெண்கள். நகை என்று அவர்கள் கையில் உள்ள சொத்துதான் எப்போதும் குடும்பத்தின் தைரியமாக அதேசமயம் குறியாகவும் இருக்கிறது. கையில் ஏதும் இல்லாமல் அநாதரவாக வைத்திருந்தால்தான் பெண்களின் உழைப்பைச் சுரண்டலாம் என்று நன்றாகப் பழகிக் கொண்டிருக்கிறது உலகம்.

அத்துடன் பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை மீண்டும் குடும்பத்திடம் சென்று சேருகிறது என்பதுதான் உண்மைகூட. இலவச பேருந்தில் சென்று அவர்கள் சேமிக்கின்ற 10 நிமிட நேரம், அதனால் தவிர்க்கப்படும் களைப்பு எல்லாமே நேரடியாகவோ மறைமுகமாகவோ குடும்பத்திற்குத்தான் போய்ச் சேருகிறது.

பெண்களுக்கு என்று இலவச பேருந்துப் பயணம் போன்ற, பிறரால் பறித்துக் கொள்ள இயலாத சலுகைகளைத் தர முன்வருபவர்கள் அதன் பின்னால் இருக்கும் காரணம் எதுவானாலும் சரி, அவர்களுக்கு நாம் நன்றிகூற வேண்டியவர்கள்தான். இது நிச்சயம் பெண்களுக்கான திட்டம். பெண் இனத்தின் நன்மையை நீண்ட கால நோக்கில் சிந்தித்துச் செய்த நன்மை. இந்த நன்மையைச் செய்த தலைவர்கள், அவர்களின் ஆலோசகர்கள், இலவசப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உள்பட இத்திட்டத்தில் பங்களிக்கும் அனைவருக்கும் நன்றி!

ஒரு 10 தடவையாவது இலவசப் பயணம் செய்துள்ளேன். ஒரு முறை கூட ஓட்டுநர், நடத்துநர் யாரும் மதிப்புக் குறைவாகப் பேசவோ பார்க்கவோ, வெறுப்பு, ஏளனம் காட்டவோ செய்ததில்லை. அவர்களுக்கும் புரியும்தானே.

இலவசப் பேருந்துப் பயணம் செய்வோம் வாருங்கள்

இத்தகைய சலுகைகளில் பங்கெடுப்பதன் மூலம் அவற்றின் நியாயத்தினை நிலை நாட்டி, சகோதரிகளுக்கும் ஆதரவாக இருக்கலாம். ஏன் எனில், அதிகம் படித்த, வெள்ளைச் சட்டை வேலைகளில் நன்றாகச் சம்பாதிக்கும் பெண்கள் மீது பிற பெண்களுக்கு ஒரு கனவு, ஏக்கம், பிரமிப்பு, நன்மதிப்பு! எத்தனை திறமைகளை எத்தனை எத்தனை கனவுகளைச் சுமந்துகொண்டு கையில் பைசா இல்லாமல் சதா வீட்டிற்கென்று உழைத்துக் கொண்டே வாழ்ந்து ஏக்கங்களே வாழ்க்கையாக முடிந்து விடுகிறார்கள் பெரும்பான்மையான பெண்கள்!

ஆண் இல்லை என்றால் உலகமே இயங்காது. அந்தக் கையில் இருக்கும் பணப்பைதான் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இன்று பணப்பை இல்லாமல் நாமும் பயணம் செய்யலாம். பெண்கள் செய்கிற வீட்டு வேலைகளுக்கு இனி வருங்காலத்தில் கிடைக்கவிருக்கின்ற பெரும் அங்கீகாரத்தின் முதல் படியாகவே இந்த இலவச பேருந்துப் பயணத்தைப் பார்க்கிறேன்.

பெண்களே இலவசப் பேருந்தில் பயணியுங்கள். கையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். இலவச பேருந்துப் பயணம் பெண்கள் வீடுகளில் இலவசமாகவே செய்துவரும் வேலைகளுக்கு அரிதாகக் கிடைத்திருக்கும், யாரும் பறிக்க இயலாத அங்கீகாரம்! அதைப் பயன்படுத்தி நமது சகோதரிகள் அனைவரும் பயன்படுத்த ஊக்கம் தாருங்கள்.

இது இலவசமில்லை. உலகம் முழுவதும் வீட்டுக்கு வீடு நாம் கொடுக்கும் விலை மதிக்க முடியாத பெரும் இலவசங்களுக்குக் கிடைத்துள்ள சிறு அங்கீகாரம் அவ்வளவே.

ஆகவே … ஒரு முறையாவது இலவச பேருந்தில் ஏறிப் பயணம் செய்வோம் வாருங்கள்! வாருங்கள் சகோதரிகளே வாருங்கள்!