வியாழன், 15 ஜூன், 2017

யோகா - பாகம் இரண்டு

இதையும் வாசியுங்கள்: http://timesofindia.indiatimes.com/home/science/yoga-not-as-safe-as-thought-study/articleshow/59352401.cms


நாட்டில் நிறைய பிரச்சினைகள் வந்துவிட்டதால் யோகா அடுத்தபாகம் மறந்தே போய்விட்டது. இன்று குழந்தைகள் யோகாதினம், அதற்குத் தயாராகையில் கால் பிசகிவிட்டது என்று சொன்னதும் … 

மீண்டும் நினைவு கொள்ள – யோகா என்பது வயது, காலம், நேரம் பார்த்து சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறையைப் பின்பற்றிச் செய்ய வேண்டிய விஷயம். ஒரு மனிதன் தன் உடலையும் மனதையும் தன்வசப்படுத்தி, உடல்-மன நோய் எதுவானாலும் தனக்குத் தானே குணமாக்கிக் கொள்ளும் அபூர்வ சாதனம் யோகா. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் எல்லோரும் எல்லா நேரத்திலும் இதைச் செய்ய முடியாது. எதையோ சொல்லிப் பயமுறுத்தும் முயற்சியில்லை இது.

உங்களைச் சுற்றிலும் யோகா வகுப்புகளுக்குச் சென்ற/செல்பவர்களை உற்றுப் பாருங்கள். ஒரே வாரத்தில் உடலை அடையாளமே தெரியாமல் இளைக்க வைக்கும் யோகா கூட சொல்லித் தருகிறார்கள். அப்படி உடல் இளைத்தவர்கள் பலரையும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் நடுவயதில் 30-40களில் உள்ளவர்கள் கடும் மன உளைச்சலைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்து சில நாட்களிலேயே பல காரணங்களால் தொடராமல் விட்டவர்களிடம் பேசிப்பாருங்கள். “முதுகுத்தண்டில் சின்ன வலின்னுதான் ஆரம்பிச்சிச்சி, அப்புறம் கை, காலை அசைக்க முடியலை. அஞ்சாறு வருஷமா ஊர் வைத்தியமெல்லாம் பாத்தாச்சு, ஸ்கேன் பாத்து நாலஞ்சு பெரிய டாக்கரெல்லம் பாத்து மருந்து மாத்திரை முழுங்கியாச்சி, கேரளம் போய் உழிஞ்சல் கூட செஞ்சாச்சி ஏதோ கொஞ்சம் இப்போ பரவாயில்லை” என்பவர் முதல் “ஐயோ, என் ஃப்ரண்டு நாப்பத்திரண்டு வயசுல யோகா ஆரம்பிச்சா திடீர்னு கண்மூடித் திறக்கிறதுக்குள்ள ஹார்ட் அட்டாக். அவ கூட க்ளாஸ் போன இன்னொருத்தரும் அப்படித்தான். இந்த வயசுல யோகான்னாலே பயமா இருக்கு” என்பது வரை பல கதைகள் உங்களைச் சுற்றிக் கேட்கும்.

ஸ்பீட் யோகா என்று ஒன்று கிடையவே கிடையாது. உடலை, அது இளக்கமாக இருக்கிற அதிகாலை மற்றும் அந்தி நேரங்களில், சுத்தம் செய்து, தூய உடையில், அமைதியான இடத்தில் இருந்து, இரத்த ஓட்டத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் நன்றாகவும் சீராகவும் பாய விடும்படி தினம் தினம் ஒரே நேரத்தில் செய்து வர வேண்டும். உடலை வளைக்கத் தொடங்கும் முன்பு, காற்றோட்டமான சமதரையில் கண்மூடி அமர்ந்து மூச்சுப்பயிற்சி செய்து சில நிமிடங்களாவது தியான நிலையைத் தொட்டு விட்டு வர வேண்டும். குறைந்த பட்சம் 45 நிமிடங்களுக்குக் குறையாமல் செய்யப்படுகிற எதுவும் உண்மையான யோகா இல்லை. எதிர்மறை பலனைக் கொடுத்துவிடக்கூடிய விளையாட்டுத்தனமான முயற்சி அது.
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
                              -திருக்குறள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக