திங்கள், 10 அக்டோபர், 2016

மொழிபெயர்ப்பு - பக்கத்தை உலாவு




'பக்கத்தை உலாவு' - இது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குப் பெயர்ந்த வாக்கியம். பின்னோக்கி மீண்டும் ஆங்கிலத்துக்குப் பெயர்த்தால் Walk the page என்று ஒரு மாதிரியாகத் திக்கித் திணறி எழுதலாம். Bowser என்ற புதுச்சொல்லுக்கு 'உலாவி' என்ற தமிழ்ப் பதம் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இடம், பொருள், ஏவல் என்ற விஷயங்கள் பார்க்காமல் பெரிய நிறுவனங்களின் மொழியியல் வல்லுனர் குழுவே Browse the page என்பது 'பக்கத்தை உலாவு' என்றுதான் பெயர்க்கப்படவேண்டும், அதுதான் Industry standard என்றால் ... இந்த Industry standard எங்கு கொண்டுவிடும் என்று தெரியவில்லை.
இந்த ரீதியில் சென்றால், Browse the page என்பதை 'பக்கத்தில் உலாவு' என்று கூடப் பெயர்த்து எழுதிவிடுவார்கள், மூல மொழிக்குத் திரும்புகையில் Walk beside என்று பொருள் வந்து விடும்.
மொழிபெயர்க்கும்போது, மறுபடி அதே பொருளில் மூல மொழிக்குக் கொண்டுவர முடியுமா என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் இத்தகைய விநோத வாக்கியங்கள் ஏற்படாது.
Browse the page என்பதில் Browse the online page என்று உள்மறைச் சொல் ஒன்று இருக்கிறது. அதன் படி Browse the page பெயர்ந்து 'பக்கத்தை புரட்டு' என்று 'இணையப் பக்கத்தைப் புரட்டு' என்ற உள்மறைச் சொல் பொருள்படும்படி இயல்பாக வரும். இந்த அளவு சிந்தித்துச் செயல்படுமளவு வல்லமை மொழியியலாளர்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறதா IT Industry? இல்லையென்றால் இத்தகைய மொழியியலாளர்கள் இல்லையா இவ்விடங்களில்?

புதன், 6 ஜூலை, 2016

மொழிபெயர்ப்பு – Solar power, Geo thermal power



Solar Power – வெயில் மின்சாரம்

சூரியஒளி மின்சாரம் அல்லது சூரியஒளி மின்சக்தி என்று மொழிபெயர்க்கப்படுவது Solar power. காற்றாலை என்று ஒற்றைச் சொல்லில் wind mill என்பதை எளிமைப்படுத்த முடிந்தது. ஆனால் சூரியனுக்கு ஆயிரம் நாமங்கள் வடமொழியில் வழக்கில் இருக்கின்றன; தமிழ்மொழி இலக்கண அனுமதியுடன் அவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ளலாம். ஆதைவிட்டாலும் சூரிய ஒளி என்பதற்குத் தமிழில் ஒற்றைச் சொல் இருக்கிறது என்பதை முற்றிலும் மறந்துவிட்டோம். சூரிய ஒளி என்று சுற்றி வளைத்துச் சொல்வதற்குப் பதிலான நேரடி மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல் வெயில்.
மின்சார வகைகளை அனல் மின்சாரம் (Thermal power), புனல் மின்சாரம் (Hydral power), காற்றாலை மின்சாரம்(wind power)  என்று தேர்ந்தெடுத்துச் சரியான, நேரடியான, எளிமையான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தபோது சூரிய ஒளி மட்டும் நேர்ச்சொல் மறந்து போனது. 

உதாரணமாக: அனல், புனல், காற்று, வெயில் இவையே மின் ஆற்றல் மூலங்களாகப் பயன்படுகின்றன. காற்று, வெயில் இரண்டும் புதுப்பிக்கக் கூடியவை.
Solar Energy  என்பதை வெயில் ஆற்றல் என்றும் Solar Power என்பதை வெயில் மின்சாரம் என்றும் மொழிபெயர்ப்பது பலவகைகளில் எளிதாகவும் சொல்வளம் கொண்ட மொழியின் மதிப்பை நாம் அறிந்ததற்கு அடையாளமாக்வும் இருக்கும் இல்லையா?

Geo Thermal power – புவிஅனல் மின்சாரம்
பூமியில் துளையிட்டு உள்ளே இருக்கிற அனலின் சூட்டை வெளிக்கொண்டுவந்து, அதை எரிபொருளாக்கி நீராவி உற்பத்திசெய்து மின்சாரம் எடுப்பது Geo Thermal power. இதற்கு எளிமையாக Geo என்று ஆங்கிலம் சொல்லிவிட்டது Geological என்றுகூட முழுச் சொல் கொண்டு நீட்டி முழக்கவில்லை. தமிழில் கூட பூமி என்று நெடில் கொண்ட சொல்லுக்கு புவி என்று குறில் கொண்ட சொல் உண்டு. பூமி அனல் மின்சாரம் என்றாலும் புவிஅனல் மின்சாரம் என்றாலும் இரண்டுமே பொருந்திவரும். புவிஅனல் (அல்லது புவியனல்) என்பது சுலபமான ஆங்கிலச் சொல்லுக்குச் சவால்விடும் எளிமைகொண்ட சொல்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

மொழிபெயர்ப்பு – online, offline


Online / offline இந்த இரண்டு எதிர்ப்பதங்களுக்கும் மொழிமாற்றம் இதுவரை சிக்கலாகத்தான் இருக்கிறது. வார்த்தைகளின் மூலம், பயன்பாடு என்று அலசிப்பார்த்ததில் தடம் (பாதை என்ற பொருளில்) என்ற தமிழ்ச் சொல் line என்ற ஆங்கிலச்சொல்லுக்கு மிக அருகில் பொருந்தி வருகிறது. ஏற்றம்/இறக்கம் on/off –க்கு ஒத்து வருகிறது.  On the line – தடத்தில் ஏறிநிற்றல் off the line – தடத்தில் இருந்து விலகி, அதாவது தடத்தில் இருந்து இறங்கி நிற்றல் என்று கொண்டால் ‘online-தடமேற்றம்’, ‘offline-தடமிறக்கம்’ என்ற பதங்கள் பொருள், பயன்பாடு இரண்டுக்கும் தகுந்தபடி இருக்கின்றன.

Online (on-line etc variants) – தடமேற்றம்
Offline (off-line etc variants)- தடமிறக்கம்

பயன்பாடு (app என்ற பதத்திற்கு மொழிமாற்றமாகப் பயன்படுகிறதே அந்த சொல்லை இங்கே நான் குறிக்கவில்லை) எடுத்துக்காட்டுக்கள்:

Warning! You must be online to use this feature.

எச்சரிக்கை! இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் தடமேற்றம் செய்திருக்க வேண்டும்.

Hi! I’m online

ஹாய்! நான் தடமேற்றம் செய்தேன்

Keep this data online

இந்தத் தரவைத் தடமேற்றம் செய்து வைத்திரு

This does not work if you are offline

நீங்கள் தடமிறங்கி இருந்தால் இது வேலை செய்யாது

புதன், 22 ஜூன், 2016

மொழிமாற்றம் - நிகழ்




நிகழ் என்பது உச்சரிக்க அழகான சொல். அது தகவல் தொழில் நுட்பத் துறையின் கலைச்சொல்லாக்கத்திற்கு இத்தனை உதவ முடியுமா என்று வியப்புத்தான் ஏற்படுகிறது.
முதலில் இதை நான் Google நிகழ்நேரம் (அது திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விட்டது) என்பதில்தான் கவனித்தேன். Current News, Reatime News என்பதற்கு ஒரே தமிழ்ச் சொல்லில் நிகழ்நேரம் என்று எழுதினால் சுருக்கமாக, உற்சாகமாக இருக்கிறது. 

ஏற்கனவே நிகழ்தகவு என்ற சொல் Probability என்பதற்குப் பயன்படுகிறது. 

இனி கீழ்க்கண்ட மொழிபெயர்ப்புகளும் சாத்தியம்:

Video – நிகழ்படம் (‘காணொலி’யை விடச் சிறந்த சொல் என்பது என் கருத்து)
Realtime data – நிகழ்தரவு
Virtual Reality – ஏறக்குறைய நிகழ்வு
Realism – நிகழ்வழி


வியாழன், 16 ஜூன், 2016

மொழிமாற்றம் - கணிபேசி




புதிய தொழில் நுட்பட்சொற்கள் தமிழுக்கு வரும்போது அவை நேரடி வார்த்தைகள் தேடி மாற்றப்படும். உதாரணம் Telephone என்பது தொலை பேசி என்று மொழிமாறியது. பின்னர் Mobile / cell phone என்று வந்ததும் மொழிமாற்றம் சிக்கலானது. கைபேசி என்று யாரோ அழகாய் சிக்கனமாய் மொழிபெயர்த்து நல்ல தீர்வு கண்டார்கள். 

ஆனால் அதற்குமேல் இப்போது Smart phone. இதற்கு இணையாச சொல் கண்டுபிடிக்கத் திணறல்! இது ஏறக்குறைய ஒரு கணிணி போல, ஆனால் கைக்கு அடக்கமாக, தொலைபேசியும் இணைந்துள்ள சாதனம். 

Smart Phone = கணிபேசி என்று சொன்னால் என்ன?

புதன், 27 ஏப்ரல், 2016

விழி பிதுங்கும் மொழி மாற்றம் - குளிகை





'குளிகை' என்ற தமிழ்ச்சொல் மாத்திரை என்று நாம் பொதுவாக அழைக்கிற மருந்து வில்லையைக் குறிக்கும். முன் காலத்தில் மருந்து உருட்டி உருண்டையாக  'குளிகை' என்ற அளவில் கொடுக்கப்பட்டது. Tablet என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் இந்தப் பொருள் உண்டு. 

முன் காலத்தில் களிமண் தட்டுகள் செய்து அதில் எழுத்தைப் பொறித்து சுட்டு அவற்றைப் பாதுகாப்பது வழக்கம். அந்தத் தட்டுகளுக்கு Tablet என்று ஆங்கிலத்தில் வழக்கம். கணினி வகையில் இப்படித்தான் சின்னத் தட்டுக்கள் போன்ற உருவத்தில் கைவிரல் தொட்டு எழுதி இயக்க முடிகிற கணினிக்கு Tablet என்ற பழைய சொல் மீண்டும் வழக்கிற்கு வந்தது. இதைப் பின் பற்றினால் நாமும் சுவடி என்ற பொதுச் சொல்லை மீண்டும் வழக்கத்திற்குக் கொண்டுவரலாம். ஓலைச் சுவடி, அரிச்சுவடி என்பதைப் போன்றே சுவடி என்ற பொதுச்சொல்லை எடுத்துக் கொண்டு, மின் சுவடி அல்லது, கணிச்சுவடி என்று கூடப் பெயரிட்டுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு ‘குளிகை’ என்று மொழி மாற்றம் செய்து விழிபிதுங்க விடுவது சரியில்லை.
இனி Tablet (as in smart devices) என்பது ‘கணிச்சுவடி’.
Netbook என்பது ‘வலைச்சுவடி’