திங்கள், 16 ஜூன், 2014

இன்றைய திருக்குறள் - "வெகுளி" – சொன்ன சொல்லும் சொல்லாத சொல்லும்


Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



இன்றைய திருக்குறள்


வெகுளி – சொன்ன சொல்லும் சொல்லாத சொல்லும்

குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
                                                 - நானில்லை, திருவள்ளுவர்

‘வெகுளி’ என்னும் சொல் இன்னும் பேச்சு வழக்கில் இருக்கிற தமிழ். இதற்கு அறியாமை, உண்மையான நிலையை உணராமை, குறிப்பாக ‘contextual meaning’ புரிந்துகொள்ளாதவர்களைக் குறிக்கப் பயன் படுகிறது. 

இந்தக்குறளில் வெகுளி என்பது கோபம் – அதுவும் கோபமான கோபம் – என்ற பொருளில் வருகிறது. ‘நல்ல குணம் உடையவர்கள் அறியாமையினால் கொள்கிற கோபம்’ என்று வைத்துக் கொண்டால் பொருள் சரியாக அமைகிறது. உண்மை நிலையை அறியாமல் சட்டென்று வந்து விடுகிற கோபம்; பொறுமை இல்லாமல், விசாரித்து அறிந்து கொள்ளாமல், என்ன ஏதென்று கேட்டு அறியாமல் வருகின்ற கோபமே வெகுளி.

கணமேயும் காத்தல் அரிது என்பதையும் இரண்டு வித மாகப் பொருள் கொள்கிறார்கள் உரை ஆசிரியர்கள். கோபப் படுபவர்கள் குணமெனும் குன்றேறி நின்று, அதுவும் வெகுளி என்று புரிந்த கணத்தில் கோபம் உடனே விலகிவிடும். தவறுதலான கோபம், குணமுடையாரிடம் கண நேரமும் நிலைக்காது.

அடுத்த பொருள், அந்தக் கோபத்தை வாங்குபவர்கள் அதன் வேகத்தை ஒருக் கணமும் தாங்கி நிற்க முடியாது. 

சொன்ன சொல் ‘வெகுளி’ – பலவித மாகப் பொருள் கொள்ள இடம் வகுக்கிறது. சொல்லாத சொல் ‘யார்’ என்பது. விட்டுப் போன ‘யார்’ என்பதால் அது கோபப் படுபவர்களையும் குறிக்கிறது; கோபத்தால் தாக்கப் படுபவர்களையும் குறிக்கிறது.
எந்தப் பொருள் கொண்டாலும் ‘அறியாக் கோபம்’ என்பது யாருக்கும் தகுந்ததில்லை; உடனே ஓடிவிடும் ஆனால் அந்த ஒரு நொடி கூடத் தாங்காது என்பது வெளிப்படையான உண்மை.

கோபத்திற்குப் பெயர்போனது துர்வாச முனிவர். பெயரே ‘துர் வாசம்’ – நாற்றம் என்று ஆக்கிவிட்டார்கள் போலும். எல்லோரும் அவருக்குப் பயந்த காரணம் கோபத்தில் அவர் கொடுக்கும் சாபம். கோபம் வந்தால் சாபம் வரும்; சாபமிட்டால் தவ வலிமை குன்றும்; மறுபடி கடும் தவத்திற்குப் புறப்பட வேண்டும் என்று இதே பொழப்பா இருந்த மனுஷன் போல.

நிறைப் பேருக்குக் கோபம் ஒரு கவசம். தன் தப்பை மூடி மறைக்க, யாரையாவது பலிகடாவாக்க, என்று பல காரணங்களுக்கு கோபம் ஒரு ஆயுதமாகவே இருக்கிறது. சிலபேரை யாரும் அண்ட முடியாது. ஆளைக் கண்டாலே கோபப் பட்டு விரட்டி அடித்து விடுவார்கள். அவர்களிடம் நமக்குக் காரியம் ஆகவேண்டும் என்றால், ‘மகனே நல்லாக் கோபப்படு; என்ன வேண்ணாலும் திட்டிக்கோ, எத்தனை நேரம்’ என்று பொறுமையாக மௌனம் காத்தால் போதும் தன்னால் அடங்கி ‘என்ன வேணும் சொல்லித் தொலை’ என்று வழிக்கு வருவார்கள். இது காந்தி வழி.

கோபப் படுபவர்களுக்கு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்ற ஆள் வேண்டும். ஒரு வார்த்தை போதும். உடன் பட்டோ எதிர்த்தோ, தெரிந்தோ தெரியாமலோ, யாராவது சொல்லி விட்டால் … பற்றி எரிந்து விடும். அந்த சூட்சுமத்தை மட்டும் கொஞ்சம் அறிந்து கொண்டால், இத்தகைய ‘வெகுளி’ களை ஒரே வார்த்தையில் விட்டம் வரை குதிக்க வைத்து வேடிக்கை பார்க்கலாம். அதுவும் சிலருக்கென்று தனி வார்த்தைகள் உள்ளன. ‘ஆடுரா ராமா’ என்றால் போதும் ஆடித் தீர்த்து விடுவார்கள். இது ‘வாழ்க்கையே விளையாட்டு. Take it easy’  என்ற தத்துவார்த்த வழி. 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக