சனி, 25 ஜனவரி, 2014

மதி


இளவேனிற் காலத்தின்
இளைய நிலா வானத்தில்
இங்கிருந்து பார்த்தாலும்
அங்கிருந்து பார்த்தாலும்
மனம் மகிழ்ந்தால் முகம் சிரிக்கும்
மனம் குலைந்தால் மதி மயங்கும்!

புதன், 22 ஜனவரி, 2014

37வது பு.கா, சென்னை




இந்த ஆண்டு முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனாலும் எதிர்பாராமல் சென்னையும், பு.கண்காட்சியும் அமைந்துவிட்டன. மொத்தம் 2 மணி நேரமே. அதிக பட்சம் 5 சந்துக்கள் சுற்றியிருப்பேன்.
குழந்தைகள் புத்தகம் – ரொம்ப அதிகம். ஆனால் ஆங்கிலமும் தமிழும் குழப்பமாக .. முத்து/லயன் காமிக்ஸ் புத்தக அளவு, அச்சின் தரம் உயர்ந்தாலும் கதைகள் குழப்பம்தான் … மொத்தத்தில் இந்திய இதிகாசங்கள் ஆங்கிலத்திலும் கௌபாய்க் கதைகள் தமிழிலும் … எந்தவித சுதேசப்படுத்தல் என்று கொள்வது புரியவில்லை. எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. குழந்தை இலக்கியத்தில் நிறைய மாறுதல் தேவைப்படுகிறதோ? ஒரு கடையில் இறக்குமதி ஆங்கிலப் புத்தகங்கள் $$ ரிலும் ££ டிலும் விலை கொண்டவை ரூ.50க் குக் கிடைத்தன.
பிரபல நாவல்கள் – அதிசயமாய் ரொம்பக் குறைவுதான். கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், இ.சௌ.ராஜன், சுஜாதா(உயிர்மை), ஜெ.கா(மீனாட்சி பு.நிலையம்) கோலோச்சுகிறார்கள். கோவி.மணிசேகரன் புதிய பதிப்புகள், அப்புசாமி-சீதாப்பாட்டி தொகுப்பு என்று ஆங்காங்கு எட்டிப் பார்த்தன. தமிழ்வாணன் துப்பறியும் பழைய சிறுசிறு புத்தகங்கள் மிச்சம் மீதி ஒன்றிரண்டு நூலகம் சேர்ப்பவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தன.
தமிழ் இலக்கியம் – குறிப்பிட்ட சில பதிப்பகங்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் எல்லாம் வழக்கம் போல சிறிது என்றாலும் ஆரோக்யமான முன்னேற்றம். எள்ளளவென்றாலும் நல்லளவு!
இன்ன பிற – ஆனந்தாக்கள், அரசியல் தலைகள், மதம் அதிகம் ஊடுருவிக்கிடக்கிறது. போதாக்குறைக்கு மத நூல்கள் இலவச வழங்கல் வேறு. ஆரோக்யமான திசையாக இல்லை. வருங்கால பு.கண்காட்சியின் தரத்தையும் இவை பாதிக்கப்போகின்றன. மருத்துவ, ஜோதிட நூலகள் கூட அதீதமில்லை. சிறு குறிப்பு நூல்கள் ரூ.10ல். நல்ல விற்பனை முயற்சி. தமிழில் கணிணிக் கல்வி நூலகள், அகராதி முதல் அத்யாவசிய ஆங்கிலம், மேல்படிப்பு, பள்ளிக் கல்வியில் எல்லா வகுப்புகளுக்கும் CD/DVD வழிப் பாடங்கள் …
வாங்கிவந்ததில் தலைப்பினால் ஈர்க்கப்பட்டு, சுஜாதாவின் 24 ரூபாய்த் தீவு படித்து, கனத்த மனதுடன் உறக்கம் சிதறி படுத்து எழுந்தால் தொலைக்காட்சி செய்திகளில் அமைச்சர் மனைவி அசாதாரண மரணம் .. கதயைத் தேடிப் படியுங்கள் தொடர்பு புரியும்.
பரவெளியில் பாற்கடலில் பரமன் துயில்கின்றான்
புலம் பெயர்ந்து பரிதவிக்கும் மனிதன் நம்புகின்றான்.
*********

செவ்வாய், 14 ஜனவரி, 2014

சின்ன முன்னோட்டம்



வலசை
“தயாரா? ம் … சீக்கிரம் மைதானத்துக்குப் போவோம்”.
ஆயிரம் பேருக்குமேல் கூட்டம். அதி நவீன மனிதர்கள். க்ளோனிங் செய்து கொண்டு டி.என்.ஏ-வைப் பல இடங்களில் திருத்திக் கொண்டு வேண்டிய உயரம், நிறம், முடி என்று பயாலஜியின் எல்லை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
சராசரி வாழ்நாள் கூட 140க்கு மேல்.
இருந்தாலும் சில விக்ஷயங்களில் இயற்கை முரண்டு பிடிக்கத்தான் செய்கிறது.  இன்று ஒரே போல் உயரம், நிறம் என்று அந்தக் கூட்டத்தைத்தின் தனி அடையாளச் சீரில் இருந்தார்கள்.
“அண்ணா, நாம எங்க போறோம்?”
“பூமத்திய ரேகைப் பகுதிக்கு. அடுத்து இந்தப் பகுதியில் வெயில் வரும்வரை அங்குதான் இருக்கவேண்டும். கவலைப் படாதே, நன்றாகப் பொழுது போகும்”
“இங்கே இருந்தால் என்ன?”
பதில் சொல்வதற்குள் விரட்டிக் கொண்டு மைதானத்திற்கு அனுப்பினார்கள்.
“ம் .. போய் அவரவர் இடத்தில் நில்லுங்கள்.”
அடியில் தட்டித் தகடாக்கினாற்போன்ற முக்கோண வடிவில் அணிவகுத்தார்கள். முக்கோண உச்சியில் தலைவர் பேசினார்.
“ஒன்று” அனவர் கைகளும் விரிந்தன. இடுப்பையும் கையையும் இணைத்துநின்ற ஜவ்வு விரிந்தது. சிறகா???
“இரண்டு” மெதுவாக ஓடிக் கொண்டே ஒரே சீராக அந்தச் சிறகுகளை விரித்தார்கள்.
“மூன்று” மேலெழும்பி உயரப் பறக்க ஆரம்பித்தார்கள். 5000 மைல் பறந்து பூமியின் மத்தியப் பகுதிக்குப் வலசை போகிறார்கள். தாமதித்தால் வந்து கொண்டிருக்கும் பனியில் சிக்கி மடிய வேண்டியதுதான். குளிர்காலம் போனால் திரும்பி வந்து விடலாம். ஆனால் எப்போது என்றுதான் திட்டமாகத் தெரியவில்லை. போன முறை 17மாதங்கள். இப்போது எத்தனையோ.
*********









செவ்வாய், 7 ஜனவரி, 2014

நனை


கொட்டும் மழையில்
தெருவிளக் கொளியில்
நனையுது மழை நீர்!

- இதற்கும் மொழிபெயர்ப்புக்கும் தொடர்பு உண்டா????!

திங்கள், 6 ஜனவரி, 2014

விசித்ரசித்தன் - இன்று ...



விசித்ர சித்தன் நெடுநாளாக தமிழ் வடிவம் கொடுக்க வேண்டும் என்று நான் எண்ணிய கதை. ஆங்கில மூலத்தின் மொழியும் நடையும் நான் வியந்து போற்றுபவை. விடாமல் வெள்ளிக் கிழமை தோறும் வெளியிட்டு விட எண்ணம் கொண்டுள்ளேன். படியுங்கள் ; எண்ணம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

(விசித்ர சித்தன் அத்யாயம் 2 – 10-ஜனவரி14-ல்)