வியாழன், 18 டிசம்பர், 2014

புதன், 9 ஜூலை, 2014

எண்ணி எண்ணி





எண்ணிப் பிறந்தால் கணக்கு
எண்ணப் பிறந்தால் சிந்தனை
எண்ணமாய்ப் பிறந்தால் கற்பனை
எண்ணிப் பிறந்தால் திட்டம்
எண்ணாமல் பிறந்தால் கவிதை!

வியாழன், 3 ஜூலை, 2014

இன்றைய திருக்குறள்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.




இன்றைய திருக்குறள்
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

சினம் என்றால் கோபம். கோபத்தில் ஒருவனுக்கு உடல் நிலையே மாறுகிறது. இரத்த அழுத்தம் ஏறும். மூச்சு வாங்கும். மூளை சரியாகச் சிந்திக்காது .. எத்தனை எத்தனையோ. சினம் கொள்ள மூல காரணம் – எதிர்பார்த்த விஷயம் நடக்காதது; கிடைக்காதது; எதிரில் இருப்பவர் தான் சொன்ன பேச்சைக் கேட்கவேண்டும் என்று நினைக்கையிலேயே அவர் மறுத்தால் .. கோபம், உக்கிரம். ஆக, ஆராய்ந்து பார்த்தால் கோபத்திற்கு அடிப்படை இயலாமை. தன்னால் இயலாத விஷயத்தில்தான் கோபம் வரும். சொன்னேன் கேட்கவில்லை, முயன்றேன் நடக்கவில்லை … கோபம்! உன்னை என்ன செய்கிறேன் பார் என்று தன் புஜபல, தவபல வலிமையைப் பிரயோகிக்கிற வேகம். 

கோபம் கொண்டவனுக்கும் கேடு விளைவிக்கும்; அதில் அகப்பட்டவனுக்கும் கேடு விளைவிக்கும். அதனால் தான், ‘தன்னைத் தான் காக்கின் சினம் காக்க’ – உன்னை நீயே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் சினத்தை நிறுத்திக்கொள்! ‘காக்க’ என்பதற்கு ‘அணைபோட்டு நிறுத்து, வெளியே விடாமல் வைத்துக் கொள்’ என்று அர்த்தம். அப்படி காக்க மறுத்தால், அந்தக் கோபம் உன்னையே கொன்று விடும் – பொருள்: நீ நீயாக இருக்க மாட்டாய். ‘நான்’ என்ற உன் சுய அடையாளம் மடிந்து, வேறு ஆளாகவே மாறிவிடுவாய்.
இன்னொரு வகையில் பார்த்தால் “கோபத்தை உடனே காட்டாமல், தாமதம் செய்!” என்றும் பொருள் வருகிறது. ‘காக்க’ – hold it, don’t show now. விஷயங்களைக் கொஞ்சம் ஆறப் போட்டுப் பார்த்தால் வேகம் தணிந்து விடும். முக்கியமாக கோபத்திற்கு அந்தக் குணம் உண்டு. ஒரு மனிதனால் சதா நேரமும் கோபத்திலேயே இருக்க முடியாது. ஏதாவது ஒரு சொல், ஒரு செயல், ஒரு நிகழ்வு அவனைத் தன்னிலைக்குக் கொண்டுவந்து கோபத்தைப் போக்கி விடும். சில சமயங்களில், காரணத்தோடு வேண்டும் என்றே கொள்ளும் கோபமும் உண்டு; ஆனால் கோபம் என்பது விளையாட்டாக எடுத்தால் கூட, கொண்டவனை அப்படியே ஆட்கொண்டு கொன்று வேறு ஆளாக்கிவிடும்.

பக்தன், குழந்தை பிரகலாதன் சொல் காப்பதற்காகத் தூணில் இருந்து கோபத்தோடு வந்தது நரசிங்கம். அது இரண்ய அரக்கனைக் கொல்ல வேறு வழியில்லாமல் வேண்டுமென்றே கொண்ட கோலம். சாந்த வடிவில் நின்று கோபம் காட்டுவது கடினம். சின்னப் பிள்ளையாக வந்து மஹாபலியிடம் மூன்றடி கேட்டபோது சாந்தம். மூன்றி அளக்கக் கிளம்பியபோது, விஸ்வரூபமாய், பலத்தைக் காட்டி மஹாபலியின் தலையைப் பூமியில் புதைத்தது கோபம். அந்தக் கோபத்தில் உக்கிரமில்லை. உடனே தணிந்தது.

ஆனால் நரசிம்மம் மிருக ரூபமும் கொண்டதால் தானோ என்னவோ இரணிய அரக்கனைக் கொன்றும் தணியவில்லை கோபம். யாரைக் காக்கக் கோபம் கொண்டாரோ அந்த பிரகலாதனைக் காட்டி, மனதுக்கு இனிய மனைவி, இலட்சுமியைக் காட்டி, மெதுவாகக் கோபம் தணிக்க வேண்டியிருந்தது.

கோபம் பல நேரங்களில் காரியத்தைக் கெடுத்து விடும். அதனால்தான் வியாபாரக் கல்விக் கூடங்களில் (Business schools) கோபம் வரும் போது, 10 அல்லது 20தில் இருந்து ஒன்று ஒன்றாகக் கீழ் நோக்கி எண்ணிக் கொண்டு வரக் கற்றுக் கொடுக்கிறார்கள். பத்து, இருபது நொடி .. இந்தச் சிறு காலம் வரை மட்டும் கோபத்தைக் கட்டுப் படுத்திவிட்டால், புத்தி தணிந்து சுய சிந்தனை மீண்டு வந்து நீ நீயாக இருப்பாய். 

***

செவ்வாய், 1 ஜூலை, 2014

விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15


Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.





விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15
அத்யாயம் 15:  நிச்சயதார்த்தம்  – பகுதி3:

            வெளியே பனிப்படலம். உலர்ந்து, மெலிதான கனமில்லாத பனிப்படலம் காற்றில் மிதந்தது. சாலையோரம் விழுந்துகிடந்த பனியில் தடம் பதித்து நடந்தார்கள்.

            வாஷிங்டன் ஸ்கொயரில் இருக்கை பார்த்து அமர்ந்தார்கள். வீடுகளைத் துண்டித்து அந்த இடத்தைத் தீவாக்கியிருந்தது வெண்பனி. வளைவின் நிழலில் வெள்ளை, பச்சை, சிவப்பு விளக்குகள் மாறி ஒளிர்ந்தன.

            அவனை நெருங்கி அமர்ந்தாள். அவன் நகரத்தை வேடிக்கை பார்த்தான். நகரத்தைக் கண்டு எப்போதும் எழுகிற அச்சம் இப்போதும் இருந்தது அவனுக்கு. ஆனால் வெண்பனியும், சிறு பெண்ணும் துணையிருந்தார்கள் அவனுக்கு. 

            “கேட்டி…கேட்டி” கிசுகிசுத்தான்.
 
            “நான் உன்னைக் காதலிக்கிறேன் பீட்டர்”

            “கேட்டி, நம் திருமணம் நிச்சயமாகிவிட்டது இல்லையா?” அவன் குரலில் துளியும் சந்தேகமில்லை.

            அவள் முகத்தின் உணர்ச்சிகளைக் கூர்ந்து படித்தான்.

            “ஆமாம்” வெகு நிதானமாகப் பதிலளித்தாள்.

            எதிர்காலத்தைப்பற்றிய கேள்வி அவள்மனதில் ஒருபோதும் எழுந்ததில்லை. கேள்வி சந்தேகத்தின் மொழியல்லவா? ஆனால் ‘ஆமாம்’ என்ற வார்த்தையை உதிர்த்தபோது இதற்காக எத்தனைநாள் காத்திருந்தேன் என்று மனம் துள்ளிய துள்ளலில் உடைந்து விடுவேனோ?

“இன்னும் இரண்டே வருடம்தான். பிறகு திருமணம் செய்து கொள்ளலாம். கொஞ்சம் என்காலில் நின்று விட்டால் போதும். அம்மாவையும் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் பரவாயில்லை”. மனதில் எழுந்த கனிவின் உருக்கத்தைக் கட்டுப்படுத்திச் சாதாரணமாகக் குரல் வர பிரயாசைப்பட்டான்.

“காத்திருக்கிறேன் பீட்டர். அவசரமில்லை”

“போரிடமும் சொல்லவேண்டாம்… இது நமது ரகசியமாக..” தீடீரென்று உள்மனதில் இருந்த சிந்தனை எட்டிப் பார்த்தது. அவளைவிட்டு விலகினான். கோபப்பட்டான்.

“கேட்டி. நீ உன் மாமாவிடம் இதைச் சொல்லிவிட மாட்டாயே?”

நகைத்தாள். தன்குட்டு வெளிப்படக் கூனிக் குறுகினான்.

“கடவுளே! அவருக்குப் பிடிக்காதுதான். அதனால் நமக்கென்ன?”
“அவருக்குப் பிடிக்காதா? ஏன்?“

“ஓ.. அவருக்குப் பொதுவாகவே திருமணம் என்றால் பிடிக்காது. ஏதும் மோசமான நடத்தையைப் பிரசாரம் செய்கிறார் என்றில்லை. இருந்தாலும் திருமணம் என்பது சொத்துவிட்டுப் போகாமல் அணைபோட்டுத் தனிமனிதச் சொத்துரிமையை வாழவைக்கிற விஷயம் என்று சொல்வார். இருந்தாலும் என்னவோ, அவருக்கு இது பிடிக்காது”.

“ரொம்ப அழகு! நாம் நிரூபித்துக் காட்டுவோம்”

உண்மையில் அது அவனுக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால் அவனது வெள்ளந்தியான மனதிலும், பிறர்து கபட மனங்களிலும்.. அவளைப்பற்றி..அதாவது.. வேறு வகையில்..அதாவது உதாரணமாக ஃப்ராங்கள் மகனின் பொருட்டு என்று.. இதென்ன இத்தனை முக்கியம்! ஓ, இவள்மீது என் எண்ணம் பிறதளைகளிலிருந்து விடுபட்டிருக்க வேண்டுமென்று கருதிகிறேன்.

தலையைப்பின் சாய்த்து பனித்துளிகளை இதழ்களில் வாங்கிக்கொண்டு திரும்ப அவளை முத்தமிட்டான். அவள் உதடுகளில் பனியின் குளுமை.

அவள் தொப்பி ஒருபுறம்சரிய, பாதிதிறந்த வாயிதழும், மயங்கிக் கனிவான கண்களும் பளபளத்தன. அவள் கையைப்பற்றி உள்ளங்கையை ஆராய்ந்தான். கம்பளிக்கையுறை போர்த்திய விரல்கள் குழந்தை விரலைப்போலத் தாறுமாறாக இருந்தன. கையுறையில் விழுந்தபனி கடந்துபோன வாகன ஒளியைவாங்கிக் கொண்டு ஜொலித்தது.

அமெரிக்க சிற்பிகள் சங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிக்கை ஹைன்றி கேமரானின் ஓய்வுபற்றி ஒருபத்திச் செய்தி வெளியிட்டது. அவர் சிற்பவியல் சாதனைகளை ஆறேவரிகளில் சொல்லி அதிலும் இரண்டு புகழ்பெற்ற கட்டிடங்களின் பெயரைத்தப்பாகப் போட்டிருந்தது.

சரித்திரப் பொருள் வியாபாரியுடன் பிரஞ்சுமேடம் ஒருவரின் பொடி டப்பியை மும்முரமாகப் பேரம் பேசிக்கொண்டிருந்த ஃப்ராங்கனிடம் குறுக்கிட்டு நுழைந்தான் பீட்டர் கீட்டிங். கடைசியில் குறித்ததைவிட $9.25c அதிகம் கொடுத்துபேரத்தை முடித்து வியாபாரியை அனுப்பிய ஃப்ராங்கன், என்ன தலைபோகிற அவசரம் என்று பீட்டரை ஒருமாதிரியாகப் பார்த்தான். 

“என்ன விஷயம் பீட்டர்?”

கீட்டிங் கையிலிருந்த பத்திரிக்கையை மேஜைமேல் போட்டு ஹென்றி கேமரான் செய்தியில் விரல் வைத்துக்காட்டி சொன்னான்.
“எனக்கு இவன் வேண்டும்?”

(தொடரும் ... )