திங்கள், 13 ஜூலை, 2015

எனதாகிய நான் – ‘இசை’ திரைப்படம்



தமிழ் சினிமாவிற்கு விநோதமான தைரியம் வந்து விட்டது. தமிழ் சினிமாவைக் கேலி செய்து படம் எடுத்தார்கள். அது பெரிய விஷயமில்லை – பழைய தமிழ்ப் படங்களைக் கேலி செய்வது இன்னும் சின்னத்திரையில் வெற்றிகரமாக நடக்கிறது. கதைத் திருட்டு பற்றி ‘வெள்ளித் திரை’ எடுத்தார்கள். அடடே என்று நினைக்க வைத்தது. வெளியில் சொல்ல முடியாத இயலாத கலை வேதனைய மிக அழகாகக் கோர்த்து பாமரருக்கும் புரியும்படியாக அமைத்திருந்தார்கள். இப்போது ‘இசை’. திரை இசையின் அரசியலை, பார்ப்பவர் நெஞ்சை ஆழமாகக் கீறி உணர்ச்சியின் ஊற்றுக் கண்ணைத் திறந்து வைக்கிற அளவு வேகம், விளக்கம், இலை மறை காய் என்று இல்லாத பாத்திரக் குறியீடுகள் என்று … பார்க்கும் போது நெஞ்சு வலிக்கிறது.
இது ஒன்றும் புது விஷயமில்லை. எல்லாத் துறையிலும் அன்றாடம் நிகழ்வதுதான். ஆனால் வெளியில் சொல்ல முடியாத வேதனையான ஊமை வலி இது. அதனால் தான் பாதிக்கப் பட்டவரின் மனதில் கிடந்து உழன்று, ஊறி அந்த மனிதரின் மூளையைக் குழப்பிப் பைத்தியமாக அடித்து சமூகத்தில் இருந்து ஒதுக்கிவைத்துவிடும். எத்துனை திறமைசாலி பாவம் இப்படி ஆகிவிட்டாரே என்று ஆதங்கப் படும் வெளி மனிதர்களுக்கு அந்த வேதனை புரியாது, தெரியவும் தெரியாது.
ஒரு கலைஞனால் பல தலைமுறைகளைத் தன் இசையில் கட்டிவைக்க முடியும். ஆனால் ஒரு மனிதன் ஒரே கலைஞனின் இசையை மட்டுமே இரசிக்க வேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்த முடியாது.
தமிழ்மொழி இலக்கணம் படைத்தவர்கள் கூட இறுதியில், பழையன கழிதலும் புதியன் புகுதலும் தப்பில்லை ; அது காலத்தின் கட்டாயம் என்று சொல்லித்தான் முடிக்கிறார்கள்.
ஆனால் ‘எனதாகிய நான்’ என்று மனிதனின் கர்வம் தலைக்கேறும் போது, தன் வெற்றியில் தானே மயங்கி, தன்னில் மிஞ்சிய யாரும் இனி வரக்கூடாது என்று கிளம்பிவிடுவது … ‘வலியவன் பிழைப்பான்’ என்று மனித இனத்தின் இரத்தத்தில் ஊறிவருகிற பிறவி உந்துதல்.
நாம் இரசித்து, மதித்து வந்தவர்களிடம் இந்தக் குணம் இருந்தால் அது பெரும் அதிர்ச்சியாகவும் அருவருப்பாகவும் ஆகிவிடுகிறது.
இந்தப்படத்தில் இளைய இசை மேதை உருவாகியவுடன் மூத்த இசைமேதையிடம் தோன்றுகிற பொறாமை குறிப்பிட்ட யாரோ இருவர் கதை மட்டுமில்லை; காலம் காலமாக ஒரு வெற்றிகரமான கலைஞன் இடத்தை அடுத்த தலைமுறை அடைவது நாம் பார்த்து கேட்டு வருகிற சரித்திரம்தான். ஆனாலும் மூத்த மேதைகளுக்குப் புகழ் குறைவதில்லை. அவர்ளின் புகழ் பெற்ற பாடல்களை மக்கள் ஒர்துக்குவதில்லை. அரசல் புரசலாகச் சிறு வதந்தி போலப் பேசப்பட்டு மறைந்துவிடுகிற பூசல்களே நிகழும்.
ஆனால் இந்தப் படத்தில் பலமுறை வெளிப்படையாகவே இன்ன பாடல் என்று சொல்லிக் காட்டுவதும், உருவத்தில் ஒற்றுமை காட்டுவதும், ஆர்மோனியமும், பியானோவும் மோதுவதும் … இது இந்த இருவர்தான் என்று விளக்கமாகச் சொல்லி விடுகின்றன. இது வெறும் புகைதான். ஆனால் தன் பின்னால் பெரும் நெருப்பு கொண்ட புகை என்று தான் தோன்றுகிறது. கடைசியில் சூரியா இயக்குனராகிய தன் கனவு இது என்று சொல்லிக் கொள்ளும் போது விஷயம் உறுதிப் பட்டு விடுகிறது.
இந்த வேதனைப் பட்டிருந்தால் அதை அனுபவித்து எழுந்து நிற்கிற இளைய இசை மேதைக்குத் தலைவணக்கம்! This is not happening ONLY to you! There are your brothers and sisters everywhere in the world experiencing this all the time! Don’t give up the courage!
பிரச்சினைக்குரிய படம் என்றாலே சத்தியராஜ் இருக்க வேண்டும் போல. ஆனால் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு தைரியம் கொண்ட இப்படி ஒரு நடிகன் இருப்பது கலை உலகிற்கு நல்லதுதான்.
வியாபார நோக்கிலும் இது வெற்றிகாணக் கூடிய படம். சன் டிவி முந்திக் கொண்டாலும், சூடான கதை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி!
இந்த வலைப் பூவின் ஆதார மொழிபெயர்ப்புத் தொடர் ‘விசித்ரசித்தன்’ இதே போல வேறு துறையில் வேறு ஒரு இளம் மேதையின் போராட்.டம்தான் சொல்கிறது. அயன் ராண்ட் கதை ‘கட்டிடக் கலை வித்தகன் விசித்ரசித்தன்’ ஹோவர்ட் ரோர்க்-கிற்கு ஊரே எதிரி; எஸ்.ஜே.சசூர்யா படம் ‘இசைப் புயல்’ சிவாவிற்கு ஒரே எதிரி; இதுதான் வித்தியாசம்!