புதன், 6 ஜூலை, 2016

மொழிபெயர்ப்பு – Solar power, Geo thermal power



Solar Power – வெயில் மின்சாரம்

சூரியஒளி மின்சாரம் அல்லது சூரியஒளி மின்சக்தி என்று மொழிபெயர்க்கப்படுவது Solar power. காற்றாலை என்று ஒற்றைச் சொல்லில் wind mill என்பதை எளிமைப்படுத்த முடிந்தது. ஆனால் சூரியனுக்கு ஆயிரம் நாமங்கள் வடமொழியில் வழக்கில் இருக்கின்றன; தமிழ்மொழி இலக்கண அனுமதியுடன் அவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ளலாம். ஆதைவிட்டாலும் சூரிய ஒளி என்பதற்குத் தமிழில் ஒற்றைச் சொல் இருக்கிறது என்பதை முற்றிலும் மறந்துவிட்டோம். சூரிய ஒளி என்று சுற்றி வளைத்துச் சொல்வதற்குப் பதிலான நேரடி மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல் வெயில்.
மின்சார வகைகளை அனல் மின்சாரம் (Thermal power), புனல் மின்சாரம் (Hydral power), காற்றாலை மின்சாரம்(wind power)  என்று தேர்ந்தெடுத்துச் சரியான, நேரடியான, எளிமையான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்தபோது சூரிய ஒளி மட்டும் நேர்ச்சொல் மறந்து போனது. 

உதாரணமாக: அனல், புனல், காற்று, வெயில் இவையே மின் ஆற்றல் மூலங்களாகப் பயன்படுகின்றன. காற்று, வெயில் இரண்டும் புதுப்பிக்கக் கூடியவை.
Solar Energy  என்பதை வெயில் ஆற்றல் என்றும் Solar Power என்பதை வெயில் மின்சாரம் என்றும் மொழிபெயர்ப்பது பலவகைகளில் எளிதாகவும் சொல்வளம் கொண்ட மொழியின் மதிப்பை நாம் அறிந்ததற்கு அடையாளமாக்வும் இருக்கும் இல்லையா?

Geo Thermal power – புவிஅனல் மின்சாரம்
பூமியில் துளையிட்டு உள்ளே இருக்கிற அனலின் சூட்டை வெளிக்கொண்டுவந்து, அதை எரிபொருளாக்கி நீராவி உற்பத்திசெய்து மின்சாரம் எடுப்பது Geo Thermal power. இதற்கு எளிமையாக Geo என்று ஆங்கிலம் சொல்லிவிட்டது Geological என்றுகூட முழுச் சொல் கொண்டு நீட்டி முழக்கவில்லை. தமிழில் கூட பூமி என்று நெடில் கொண்ட சொல்லுக்கு புவி என்று குறில் கொண்ட சொல் உண்டு. பூமி அனல் மின்சாரம் என்றாலும் புவிஅனல் மின்சாரம் என்றாலும் இரண்டுமே பொருந்திவரும். புவிஅனல் (அல்லது புவியனல்) என்பது சுலபமான ஆங்கிலச் சொல்லுக்குச் சவால்விடும் எளிமைகொண்ட சொல்.

4 கருத்துகள்:

  1. எழுத்துக்கள் மிகவும் பொடிசாக இருக்கிறது// மாற்றவும் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமத்திற்கு மன்னிக்க. அடுத்தமுறையிலிருந்து பெரிய எழுத்து.

      நீக்கு
  2. Geo என்பதற்கு ஞால என்பதையும், Earthக்கு புவியையும் வைப்பதே சாலச்சிறந்ததாகும். நீங்கில் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீ யாண்டு பெற்றாள் இவள் என்கிறது குறள். இதில் அரும் தெறூ thermalக்கு நேரான சொல்.Power என்பது ஆற்றல் அல்லவா? கதிரொளி ஆற்றல் - solar power.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலக்கிய வழக்கில் சொல்வளம் தமிழுக்கு நிறையவே உண்டு. காலம் கடந்து பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் நிற்கிற சொற்களுக்கு முதன்மை கொடுக்க வேண்டுமல்லவா? தெறூஉம் என்பது சுடும், கொதிக்கும் என்று பண்புகளைக் குறிக்கும் சொல். அனல் என்பது இந்தப் பண்புகளுக்கான பெயர்ச்சொல். Thermal என்பது அப்படித்தான். தெறூஉம் என்று கொண்டால் ஆங்கிலத்தில் Heat, hot என்று வந்துவிடும்.
      Power என்பது electric power என்பதைக் குறிக்க இடத்திற்குத் தக்கப் பயன்படுகிறது. Power என்பது ஆற்றல். ஆனால் இடத்திற்குத் தகுந்தபடி Thermal power அனல் மின்சாரமாகிறது.
      கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், கதிர் என்பது radiation. கதிரை வெளிவிடுவதால் அது ‘கதிரவன்’. காரணப்பெயர். சூரியஒளி, கதிரொளி, ஞாயிறுஒளி என்று சூரியனின் அத்தனை பெயர்களின் பின்னாலும் ஒளி என்பதை இணைத்து ஏராளமான காரணப் பெயர்களை அடையலாம். 1. ஆனால் இந்த குறிப்பிட்ட ஒளிக்கு, இன்னும் வழக்கில் உள்ள இடுகுறிப் பெயர் ‘வெயில்’. நேர்ச் சொல் இல்லாத போது கலைச்சொல் ஆக்கலாம். ஆனால் நேர்ச் சொல் இருக்கும்போது, புதுச்சொல்லைப் புகுத்த முயலுவது, ஒரு நல்ல சொல்லை மொழியிலிருந்தே வழக்கொழித்துவிட்டுவிடும். 2. மேலும் solar photovoltic, solar thermal, solar concentrated என்று மேலும் தொடர்புடைய சொற்றொடர்களையும் கையாள வேண்டும். வெயிலொளி, வெயிலனல், வெயில்குவி என்று இடுகுறிப்பெயரைப் பண்புடன் சேர்த்து எளிதில் சொல்லாக்கம் செய்து விடலாம். கதிரொளி, கதிரனல், கதிர்குவி என்னும் போது Solar radiation, radiation heat, radiation centration என்று பொருள் மாறிவிடும். பிற காரணச் சொற்களுக்கும் இதே நிலைதான். 3. நீண்ட சொற்களைப் பயன்படுத்தி இலக்கியத்திற்கு அழகைக் கூட்ட முடியும். ஆனால் அறிவியல், தொழில் நுட்பம், இணையம் என்று வரும் போது, ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது முக்கியம். வெயில் என்ற இடுகுறிப் பெயர், அளவிலும், பேச்சு மற்றும் இலக்கிய வழக்கிலும் அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் மேலே கொடுத்த விளக்கத்தின்படி பொருத்தமான சொல்.

      நீக்கு