வெள்ளி, 20 ஜூன், 2014

விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15


Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15
அத்யாயம் 15:  நிச்சயதார்த்தம்  – பகுதி2:
அன்னை கேத்தரினை ஸ்டேன்டனிலேயே சந்தித்திருக்கிறாள். பீட்டர் மறந்து விடுவான் என்றுதான் நினைத்தாள். ஆனால் அவளைப் பற்றிப் பேச்செடுக்காவிட்டாலும், வீட்டிற்குக் கூட்டி வராவிட்டாலும் மகன் அவளை இன்னும் சந்திக்கிறான் என்பது அன்னைக்கு நன்றாகத் தெரிந்தது. ‘முன்னுக்கு வருகிற இளைஞர்களாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொண்டு அவர்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போட்டு எதிர்காலத்தைப் பாழடித்து விடுகிற இளம் பெண்களைப்’ பற்றி பெயர் குறிப்பிடாமலேயே அடிக்கடி மகனிடம் எச்சரித்தாள். தவறான இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டு தொழிலைப் பாழடித்துக் கொள்ளும் இளைஞர்கள் பற்றி அடிக்கடி விவாதித்தாள். தகுதிக்கு ஏற்றாற்போல நாகரீகமாக நடந்து கொள்ளத் தெரியாத மனைவிகளை விவாகரத்து செய்யும் செய்திகளை அவனைப் படிக்க வைத்தாள்.
அன்றிரவு கேத்தரின் வீட்டை நோக்கி நடக்கும் போது பீட்டர் நினைத்துக் கொண்டான். இவளைச் சந்திக்கும் நாட்கள் மட்டுமே என் நியூயார்க் நாகர வாழ்க்கையில் பசுமையாக இருக்கிறது.
முன்னறையில் கடிதங்கள் சூழ, சிறு தட்டச்சு எந்திரம், பேனா, அஞ்சல் அட்டைகள், கோந்து .. இவற்றுக்கு நடுவே உட்கார்ந்திருந்தாள்.
பார்த்தால் 17 வயதுக்குமேல் ஆண்டுகளில்லை. உண்மையில் இப்போது 20 வயது.
            “உட்கார் பீட்டர். நீ வர்றதுக்குள்ள முடிச்சுரலாம்னு பாத்தேன், முடியலை. மாமாவின் இரசிகர்கள் கடிதம், செய்தித்தாள் துண்டுகள் எல்லாம். நான் இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி, கோப்புபோட்டு, பதில் எழுதி.. ஐயோ என்னவெல்லாம் எழுதிகிறார்கள் தெரியுமா. அற்புதம். நிக்காத, உக்கார், என்ன? ஒருநிமிஷத்துல வந்துர்றேன்”
            “இப்பவே வர்ற” அலாக்காகத் தூக்கிக் கொண்டுபோய் நாற்காலியில் அமர்த்தினான்.
            அணைத்து முத்தமிட்டவன் தோற்களில் சாய்ந்து கொண்டாள்.
            “கேட்டி. முட்டாள் பெண்ணே. உன் கூந்தலில் நறுமணம் வீசுகிறதே. இயற்கையா, செயற்கையா?”
            “அப்படியே இரு பீட்டர். சுகம்மா இருக்கு”
            “கேட்டி. இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் எனக்கு. ப்ராட்வேயில் போர்ட்மேன் கட்டிடம் திறக்கப் போயிருந்தேன். இருபத்திரெண்டு மாடி. உச்சியில் கோத்திக் கோபுரம். ஃப்ராங்கன் போகமுடியவில்லை. அவரிடத்தில் நான் எப்படியும் அந்தக் கட்டிடத்தை வடிவமைத்தது நான் தானே.. ஓ உனக்கென்ன புரியும்?”
            “புரியும் பீட்டர்.உன் கட்டிடம் ஒண்ணுவிடாமல் பாத்திருக்கேன். படமெல்லாம் வச்சிருக்கேன். மாமா செய்திகள் போலவே உன் கட்டிடங்களையும் வெட்டி ஒட்டிப் பத்திரப்படுத்தியிருக்கேன்”.
            “என்னது?”
            “மாமாவின் செய்தித் தொகுப்புகள்..கடிதங்கள்..இந்தக் கடிதங்கள்.. கொஞ்சம் யோசிச்சுப்பாரேன். தேசத்தின் மூலைமுடுக்கில் இருந்தெல்லாம் எழுதுகிறார்கள். நான் , ஒன்றும் அறியாத சிறுபெண், எனக்கு இதில் எல்லாம் உதவும் வாய்ப்பு! நம்பவே முடியவில்லை”
            “ஓ, மாமா இதெல்லாம் சொன்னாரா?”
            “அவர் இதுபற்றி ஒன்றும் பேசுவதில்லை. ஆனால் அவருடன் கூடவேயிருந்தால் கொஞ்சமாவது ஒட்டிக் கொள்ளத்தான் செய்கிறது.. சுயநலம் கருதாத பெரியமனம்!”
            கோபப்பட நினைத்தாலும், உண்மையான சந்தோஷத்தில் பூத்த அவள் புன்னகையைக் கண்டதும் பதிலுக்குப் புன்னகை செய்யத்தான் முடிந்தது.
            “எல்லாம் உனக்குப் பாந்தமாகத்தான் இருக்கிறது கேட்டி. கொஞ்சம் உடை விஷயத்தில் மட்டும் கற்றுக் கொண்டுவிட்டால் உன்னைப்பிடிக்க ஆளில்லை. நீ வேணா பாரேன் ஒருநாள் கையைப்பிடிச்சி இழுத்துநல்ல தையல்கடையில் விடப்போகிறேன். நீ கைஃப் யை ஒருநாள் சந்திக்கவேண்டும். அவரை உனக்கும் பிடிக்கும்”.
            “ஓ. முன்னாலே வேறமாதிரி சொன்னியே?”
            “அப்போ அவரைப் பத்திச் சரியாத் தெரியாது எனக்கு. பெரிய மனிதர். நீ அவர்கள் எல்லோரையும் சந்திக்கவேண்டும். வந்து… ஏய் , எங்க கிளம்பிட்ட?” அவன் கைக்கடியாரத்தைக் கண்டுவிட்டு விலக எத்தனித்தாள்.
            “நான் … ஒம்பதுமணி ஆயிட்டது பீட்டர். மாமா வருவதற்குள் நான் இதை எல்லாம் முடித்தாக வேண்டும். பதினோரு மணிக்கு வந்துவிடுவார். இன்றைக்கு இரவு தொழிலாளர் கூட்டத்தில் சொற்பொழிவாற்றுகிறார். நீ பேசிக்கொண்டிரு. நான் பாட்டுக்கு வேலை செய்யலாமில்லையா ?”
            “அநியாயம்! உன்மாமாவும் அவர் ரசிகக் கூட்டமும் நாசமாப் போகட்டும். இந்தக்குப்பையை அவரே அள்ளட்டும். நீ இப்படியே என்னோட இரேன் “.
            பெருமூச்சு விட்டாலும் மீண்டும் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். “மாமாவைப்பத்தி நீ அப்படி எல்லாம் பேசக்கூடாது. அவர் புத்தகத்தை வாசித்தாயா?”
            “ஆமாமாம். நல்லாத்தான் இருக்கு. ஆனாப் போற இடமெல்லாம் இந்தப்புத்தகப் பேச்சைக்கேட்டு அலுத்துவிட்டது. வேறு ஏதாவது பேசலாமே”.
            “இனியும் உனக்கு மாமாவைச் சந்திக்கத் தோன்றவில்லையா?”
            “ஏன், அவரைச் சந்திக்க விருப்பம்தான்.”
            “ஓ…”
            “என்ன விஷயம்”
            “என் மூலம் அந்த சந்திப்பு வேண்டாம் என்றாயே”
            “சொன்னேனா? எப்பப்பாத்தாலும் நான்பேசுவதில் குப்பை எதுவோ, அதுமட்டும் உன்மூளையில் நல்லாப் பதிவாகியிருது”
            “பீட்டர், நீ மாமாவைப் பார்க்கக்கூடாது?”
            “ஏனோ?”
            “தெரியலை. மடத்தனம். ஆனால் எனக்கு அப்படித்தான் இருக்கு. காரணம் தெரியலை”.
            “அப்போ விட்டுத்தள்ளு. நேரம் வரும்போது பார்த்துக் கொள்கிறேன். இதைக்கேள். நேற்று இரவு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேனா, உன்நினைவு வந்து.. உடனடியாகப் பார்க்கவேண்டுமென்று வெறி.. ஆனால் ரொம்ப நேரமாகி விட்டபடியால் அடக்கிக் கொண்டேன். உன்னை நினைத்து ஏங்கி…”
            கைகளைக் கோர்த்து அவன் கழுத்தில் மாலையிட்டவாறே பேச்சைக் கவனித்தாள். திடீரேன்று துள்ளிகுதித்து ஓடி மூலையில் அலமாரிக்கு அடியிலிருந்த ரோஸ்நிறக் கடிதத்தை எடுத்தாள்.
            “என்ன இது மடத்தனம்” கோபித்தான்.
            “ஐயோ பீட்டர். இது ரொம்ப முக்கியமான கடிதம். ஐந்து குழந்தைகளின் தாய் தன்தலைமகன் சிற்பியாக ஆசைப்பட்டதை எழுதியிருக்கிறாள். மாமா அதற்கு உதவப் போகிறார். கொஞ்சம் அசந்திருந்தால் கூட்டிக் குப்பையில் போட்டிருப்பேன்”.
            “போதும். காதுபுளித்துவிட்டது. வா வெளியே எங்காவது நடந்துவிட்டு வரலாம். அழகான இரவு. உனக்கும் இந்த இடத்திற்கும் பொருத்தமில்லை”.
            “சரி, வா போலாம்”

(continues ... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக