செவ்வாய், 18 மார்ச், 2014

மலையாளம் - ஒரு தகப்பனும் மகனும் சரித்திரம்

 Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

மலை தேசத்து வாழ்வு தனி மாதிரியாகத்தான் இருக்கிறது. மாலை 6 மணிக்கெல்ல்லாம் கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போய் முடங்கிவிடுகிற வாழ்க்கையை சிறு கிராமங்கள் கூட அரிதாகத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் இந்த நகரங்கள் 6மணிக்கு அடைந்து விடுகின்றன.

பாலக்காட்டுக்கு அருகில் பட்டாம்பி என்ற ஊரில் இருந்து 7 கி.மீ சிறு பேருந்து பயணத்தில் 'திரு வித்வக்கோடு கோயில்' என்ற தமிழ் வரவேற்கிறது. அரை கி.மீ நடந்து உள்ளே போனால் 'வாளால் அறுத்துச் சுடினும் ...' என்று தொடங்கும் குலசேகர ஆழ்வார் பாடிய திருக்கோயில். 108 வைணவ திருப்பதிகளுள் மலையாளப் பதியில் ஒன்று.

ஆழத்தில் ஆறு. மறுபுறம் குன்று. நின்று பார்த்தாலே அழகு வழியும் காட்சி. விட்டு வர மனமில்லாத இடம். 

பட்டாம்பியில் போய் 'திருமுட்டக்கோடு' என்று தான் கேட்க வேண்டும். பட்டாம்பியில் இருந்து இறங்கி சமவெளியில் வந்தால் ஆற்றின் கரையோரம் விளிம்பில் கோயில்.

கேரள கோயில்கள் அமைப்பு பொதுவாய் வெளியில் இருந்து பார்த்தால் சுற்று மதில் (தட்டோடு பதித்த) வைத்த வீடுகள் போலவே இருக்கும்.

இதுவும் அப்படித்தான். ஆனால் வெளியே சில சிறு வட்ட வடிவக் கோயில்களும் இருக்கின்றன. 'வியாசரும் கணபதியும்', நகுலன் - சகாதேவன் பிரதிஷ்டை செய்த விஷ்ணு, பீமன் பிரதிஷ்டை செய்த விஷ்ணு, தர்மர் பிரதிஷ்டை செய்த விஷ்ணு .... சுற்றுப் பாதையில் இதெல்லாம் இருக்கிறதே தவிர, உள்ளே எட்டிப் பார்த்தால் (வாசலில் 2 அடி உயர சுவர். கேரள சிவாலயங்களில் இதைத் தாண்டிக் குதித்துத்தான் போக வேண்டும்) ... ஏமாற்றம். காசிவிசுவநாதர் என்று சொல்லி சிவன் முகத்தில் தான் விழிக்க வேண்டும். தாண்டவும் தயங்கி, குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாளைக் காணேமே என்று மயங்கி விழிக்கும் போது உள்ளே அரவம் கேட்டது. பட்டர் ( அல்லது நம்பூதிரி? யாரோ கோவில் பூஜை நடத்துகிறவர்) இருந்து வரச்சொல்லி அழைத்தார். தாண்டத் தயக்கம் என்றதும், ஆற்றுப் புறம் இருந்த இன்னொரு வாசலைக் காட்டி, கதவை அழுத்தினால் திறக்கும் என்று வழி காட்டி உதவினார்.

உள்ளே போனால் ... வலது பக்கம் பகவதி அம்மன். அது சரிதான்; அப்பிரதட்சணமாக சுற்றி வர சங்கிலித் தடுப்பு இருந்தது. அதன் வழி போனால் ... பெருமாளே!  நான்கு அடி உயர்ந்த தளத்தில் மறைவாக இன்னொரு கோவில் - நேரே பெருமாள் தரிசனம்! 3 படி ஏறிப்போய் சுற்றிவந்து சேவித்தோம். அங்கேயே 'வாளால் அறுத்துச் சுடினும் ..' பாசுரம் தமிழ், மலையாளம் இரண்டிலும் கல்வெட்டியிருந்தது.

யோசித்தால் சரித்திரம் நினைவுக்கு வருகிறது. குலசேகர ஆழ்வார் மகன் சைவ மதத்தைத் தழுவி 'சேரமான் பெருமாள் நாயனார்' என்று நாயன்மார் கூட்டத்தில் இடம் பெற்றார். ஒரு வேளை அவர் காலத்தில் தந்தை பாடிய பெருமாள் கோவிலை இடிக்காமல், வெளி ஆட்களிடம் இருந்து மறைத்து சிவன் சன்னதி கட்டப் பட்டிருக்கலாம். அதற்கான அத்தனை அம்சங்களும் தெரிகின்றன. எந்தப் புண்ணியவான் மறுபடி பெருமாள் கதவைத் திறந்து விட்டாரோ தெரியவில்லை.

சரித்திரம் இப்படி எல்லாம் விநோதங்களைக் கொண்டது. இதில் 'தன் பிழை'யை சரித்திரத்தின் மீது ஏற்ற முயன்றால் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக