ஞாயிறு, 23 மார்ச், 2014

விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 11



note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.

விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர்  -அத்யாயம் 11 –பகுதி1:
 குறிப்பு: இந்த வாரத்திலிருந்து 'விசித்ரசித்தன்' தொடர் வாரம் மூன்று நாள் வெளிவரும்.

 "என் மாமா பேர் எல்ஸ்வொர்த் டூஹி. ஏன்? என்ன விஷயம்?”

கை தளர்ந்து அவளை வெறித்தான்.

“என்ன ஆச்சு பீட்டர்?”

எச்சில் விழுங்கினான். தொண்டை கம்மியது. பிறகு பேசிய குரலில் கடுமை. “கேட்டி நான் உன் மாமாவைச் சந்திக்க மாட்டேன்.”

“என்ன திடீரென்று?”

“உன் மூலம் அறிமுகம் வேண்டாம் … என்னை உனக்கு சரியாகத் தெரியாது கேட்டி. நான் மனிதர்களைப் பயன் படுத்திக் கொள்கிற ஜாதி. உன்னைப் பயன்படுத்திக் கொள்ள என் மனம் சம்மதிக்காது. தயவு செய்து அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடாதே.”

“என்ன உளறுகிறாய்?”

“விஷயம் இதுதான். எல்ஸ்வொர்த் டூஹியை சந்திப்பதென்றால் கையை வெட்டிக் கொடுக்கக்கூடத் தயாராயிருக்கிறேன்.” வில்லத்தனமான சிரிப்பை உதிரவிட்டான். 
“முட்டாள் பெண்ணே! சிற்பத்துறையில் முக்கியமான ஆள் உன் மாமா. இப்போது வேண்டுமானால் அவர் பெருமை உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இரண்டு வருஷம் பொ/றுத்துப் பார். ஃப்ராங்கனே சொல்லி விட்டால் அது பலித்து விடும். உன் மாமா சீக்கிரம் சிற்பத்துறை விமரிசகப் புலி ஆகத்தான் போகிறார். முதலில் எங்கள் தொழில் பற்றி யாரும் எழுதாத காலத்தில் இவர் நுழைந்திருப்பதே சரியான நேரம்தான். அவரது ஒவ்வொரு எழுத்திற்கும், காற்புள்ளிக்கும் அரைப்புள்ளிக்கும்கூட ஆயிரம் அர்த்தம் கற்பிக்கிறார்கள் எங்கள் அலுவலகத்தில். நீ என்னடா என்றால் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார். அவர் ஒரு நாள் என்னைப் பெரியாளாக்கத்தான் போகிறார். சரியான சூழ்நிலையில் அவரைச் சந்திக்கத்தான் போகிறேன். ஆனால் உன் மூலமாக இல்லை. புரிகிறாதா? நீ திறந்துவிடுகிறவழியில் இல்லை.”

“ஏன் கூடாது பீட்டர்?”

“வேண்டாமென்றால் விட்டு விடு. கிளறினால் அசிங்கம். என் தொழில், வேலை, காரியம், எதிர் காலத்தில் என்ன செய்யப் போகிறேன் எல்லாமே அசிங்கம். உன் மீது அதன் நிழல்கூடப் படக் கூடாது. எனக்கிருக்கிற ஒரே பொக்கிஷம் நீதான். இதில் தலையிடாதே. விலகி நில் கேட்டி.”

“எதிலிருந்து விலகச் சொல்கிறாய் கேட்டி?”

“தெரியவில்லை.”

அவள் கை வளைவிற்குள் எழுந்து நின்றான். மடியில் தலை புரண்டது. வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தான்.

“சரி பீட்டர். ஒரு மாதிரியாகப் புரிகிறது. தேவை வரும் வரை மாமாவை நீ சந்திக்க வேண்டாம். எப்போது வேண்டுமோ சொல் போதும். என்னைப் பயன் படுத்துகிறோமோ என்று பயம் வேண்டாம். என் கடமை அது.”

அவன் தலை தூக்கியபோது மெலிதாக நகைத்தாள்.

“களைத்திருக்கிறாய் பீட்டர். கொஞ்சம் டீ போட்டு வரவா?”

“மறந்து விட்டேன். இன்னும் நான் சாப்பிடவேயில்லை”

“அநியாயம். வா. ஏதாவது செய்துதருகிறேன்.”

இரண்டு மணி நேரத்திற்குப் பின் கவலைகள், ஃப்ராங்கன், டூஹி சகலரும் மறந்த உல்லாசத்துடன் விடை பெற்றான். நாளைக்கே வருவதாக வாக்குக் கொடுத்தாலும் அதுவே நீண்ட காலம் போலத் தோன்றித் துன்புறுத்தியது.

அவன் கை பட்ட கதவுப் பிடிகளைத் தொட்டுக் கொண்டு தூர மறைகிற அவன் உருவத்தைப் பார்த்தாள். நாளை வந்தாலும் வருவான், இல்லை மாதக் கணக்கில் கூட ஆகலாம்.
(தொடரும் ... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக