திங்கள், 28 செப்டம்பர், 2015

தனி ஒருவன் தமிழ் சினிமா



தனி ஒருவன்
படத்தில் ஹீரோவும் தனி ஒருவன்; வில்லனும் தனி ஒருவன். என்னதான் டீம் ஒர்க் என்றாலும், எல்லாம் அடிவேர் தனி ஒரு மனிதன் .. அவன் சிந்தனை … அவன் அறிவு … அது ஆக்கம் என்றாலும் அழிவு என்றாலும். ஒன்றில் மனது வைத்துப் போராடத் துணிகிற மனிதனே அனைத்துக்கும் காரணமாகிறான் .. இதுதான் கருத்து.
கதையில் பேரறிவாளி வில்லன் சின்ன வயதில் இருந்தே குறுக்குப் பாதையும், குற்றம் பற்றிக் கவலைப்படாமல் தன் இலக்குகளை எட்டிக் கொண்டுபோய், மாபெரும் கார்ப்பொரேட் சாம்ராஜ்யத்தை முற்றிலும் பினாமிகளைக் கொண்டே இயக்குகிறான். தானும் தேச இளைஞர்களுக்கு முன்மாதிரியான விஞ்ஞானியாக வலம் வருகிறான். Douglas Adams வரிகள் நினைவுக்கு வருகின்றன. “Anyone who is capable of getting themselves made President should on no account be allowed to do the job.” ( Book: The Hitchhikers guide to the Galaxy. புத்தகத்தைப் படிக்காமல் யாரும் என்னிடம் சண்டைக்கு வர வேண்டாம்)
ஹீரோ, ஐ.பி.எஸ் பயிற்சி முதல் குற்றத்தை விட அதன் பின்னால் இருக்கிற காரண, காரியங்கள் ஆராயப் பட்டால்தான் உண்மைக் குற்றவாளி கண்டு களைய முடியும் என்று கிளம்புகிறான். இருவரின் மோதலில் வில்லனின் முடிவு கதை முடிவாகிறது.
‘பேராண்மை’ போல மாறுபட்ட கதைக் களம் ஜெயம் ரவிக்கு நல்ல வாய்ப்பு. நயன்தாரா பேருக்கு ஒரு கதாநாயகி வேண்டும் என்று மட்டும். அதனாலேயே ஒரே ஒரு டூயட். அரவிந்தசாமிக்கு இயல்பான ரோல். நடிக்கவே தேவையில்லை. தம்பி ராமையா அப்பாவுக்கு மகன் அரவிந்தசாமியின் மூன்று போதனைகளும் அதன் பலனும் … இருவரும் சேர்ந்து வந்த போதெல்லாம் அப்பாவின் ஒரே வார்த்தை ரொம்ப சீரியஸான கட்டத்தில் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. நயன்தாராவின் காதல் வசனங்களும், தம்பி ராமையாவின் நகைச்சுவையும் .. அருமையான திரைக்கதை.
தனி ஒருவன் என்று வகைக்கு ஒன்றாக ஹீரோ, வில்லன் வந்தாலும், துணைப் பாத்திரங்கள், குறிப்பாக ஹீரோவின் நண்பர்கள் … அத்தனை பேரும் அருமையான நடிகர்கள்!
நான் இதைப் பார்த்த இடம் மதுரையில் பிரசித்தியான திரை அரங்கம். ஆகவே அங்கே தொழில் நுட்பக் கோளாறு இருக்கக் காரணமில்லை.ஆனாலும் சொல்லாமல் விட மனமில்லை. ஏனென்றால் நிறம் என்பது முக்கியமான் விஷயம். நயன் – ரவி, டார்ஜிலிங் பின்னணியில் நீல வானமும், பச்சை வனமும் இருக்கப் பேசுகிற காட்சியில், கொஞ்சுகிற கேமிரா, மற்றபடி படம் முழுக்க வேறு நிறம் காட்டி – ஒரே சாம்பல் அல்லது மங்கல் மஞ்சள் நிறம் – கடுப்படிக்கிறது. ரவி, அரவிந்தசாமியைப் பார்க்க லிஃப்ட் மேலே ஏறிப் பயனிக்கும் போதும், ஹாலிவுட் ஸ்டைலில் அரவிந்தசாமி அறிமுகம் ஆகும்போதும் அபாரமாக இருக்கிறது கேமிரா. ஆனால் அங்கேயும் நிறம் டொச்சுதான். அதீதம் அனைத்தையும் கெடுத்துவிடுகிறது.
கதையில் நிறைய குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு திரைக்கதை, நடிப்பு, கதைக்களம், தமிழ் சினிமாவில் வருவதே ஆச்சரியமான விஷயம். ஆனந்தமான விஷயமும் கூட. இறுதியில் எல்லாம் தனி மனிதன் நினைத்தால் முடியும் எழுந்திரு தமிழா என்று எழுப்பி விடுகிறார்கள்! படம் முடிஞ்சாச்சி போலாம் என்று இருக்கையை விட்டு எழுவதைத் தவிர இப்போதைக்கு தமிழன் வீறுகொண்டு எழுவதாயில்லை. இருந்தாலும், ‘புறம்போக்கு என்ற பொதுவுடமை’ படமும் இந்த தட்டி எழுப்பும் முயற்சிதான். ‘தனி ஒருவன்’ அந்த வரிசையில் நிற்கிறது. பார்க்கலாம் பலன் இருக்கிறதா என்று.
*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக