செவ்வாய், 29 ஏப்ரல், 2014

ஆறுபடை வீடு –6.திருத்தணி

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



சென்னையில் இருந்து 2.30மணி நேரப் பயணத்தில் ஆந்திரா எல்லையில் உள்ளது திருத்தணிகை மலை. சிறு குன்று. சரிவாக இருப்பதால் வண்டிகள் ஏறிக் கோவில்வரை செல்லலாம்.
குறவர் குலத்தலைவருக்குக் குழந்தை இல்லாமல், வள்ளிக் கிழங்குச் செடியருகே கிடந்த குழந்தையை எடுத்து வள்ளி என்று பெயரிட்டு வளர்த்தார். முருகன் கிழவன் வேடமிட்டுப் போய் வம்பு செய்து அண்ணன் பிள்ளையார் யானை உருவில் வந்து உதவ, வள்ளியை மணம் புரிந்த இடம் திருத்தணிகை மலை. வள்ளி திருமணம் நாடகம் பிரசித்தம்.  வேடன், வேலன், விருத்தன்(முதியவன்) என்று மூன்று வேடங்களில் தோன்றிக் குற வள்ளியுடன் விளையாடிக் கோபப் படுத்தி, யானையை வரவழைத்துப் பயமுறுத்தி, முடிவில் பெரும் தர்க்கம் (debate) நடத்தி மணமாலை வாங்குவார் முருகன். டி.ஆர்.மகாலிங்கம்-யு.ஆர்.ஜீவரத்னம் வேடமிடும் வள்ளி திருமண நாடக நிகழ்ச்சிகள் அத்தனை பிரபல்யம். இன்றும் மழை வேண்டி வள்ளி திருமணம் நாடகம் நடத்தப் படுகிறது.
பாட்டி சொல்கிற சுவையான நிகழ்ச்சி ஒன்று: ஒரு தரம் எஸ்.எம்.குமரேசன் – தாராபாயா இல்லை யு.ஆர்.ஜீவரத்தினமா நினைவில்லை; வள்ளி வேடமிட்ட பெண்மணி வாதத்தில் தோற்க மறுத்து பேச்சுக்குப் பேச்சு பேசிக்கொண்டே போனாராம். கிழக்கு வெளுத்து விட்டது; விடிவதற்கு முன் நாடகம் சுபமாக முடியவேண்டும்; ஆகவே ஊர்ப் பெரியவர்கள் வள்ளியிடம் முறையிட்டு வாதில் தோற்றதாக ஏற்றுக் கொண்டு திருமண மாலையை வாங்கிக் கொள்ளச் சொல்லி வேண்ட, இறுதியில் அதுவும் மாலையைக் கழுத்தில் வாங்காமல், கையில் வாங்கிக் கொண்டு முடித்தாராம் அந்த நடிகை. அத்தனை திறமை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ள சுவாரசியமான நாடகக் கதை.
திருத்தணிக்கு நல்ல இரயில் வசதி உண்டு. சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்துகள் பலவும், திருத்தணி விலக்கு ரோட்டில் நிற்கும். ஆனால் இரயில் உகந்தது. பயண நேரமும் குறைவு, இரயில் நிலையமும் வசதியாக உள்ளது. பேருந்து நிலையத்தை அப்படிச் சொல்ல முடியாது. இத்தனை ஆட்கள் வந்து போகும் ஊருக்கு இத்தனூண்டு பேருந்து நிலையம். விலக இடமில்லை. மலையடிவாரத்தில் இருந்து கோவில் நிர்வாகம் இயக்குகிற பேருந்துகள் உண்டு. ஆட்டோ உண்டு. ஆனால் மாதக் கிருத்திகை போன்ற வழக்கமான நல்ல நாட்களுக்கெல்லாம் கூட்டம் அலை மோதும். மற்ற நாட்களில் இதுதானா அந்தக் கோவில் என்று வியக்கும் அளவு வெறிச்சோடிக் கிடக்கும். 

கோவில் சின்னது. கருவறையைச் சுற்றி இருக்கிற ஒரு மண்டபம் தவிர ஒதுங்க நிழல் கிடையாது. வரிசையில் நின்றால் வேதனைதான். சிறுவர்களும் மூத்த குடிமக்களும் அண்ட முடியாது. அதீத வருமானம் உள்ள கோவிலில் ஏன் பக்தர்களுக்கு வரிசையில் நிற்கக் கூட கூறையில்லை ? இத்தனைக்கும் சிறப்பு தரிசனத்திற்கு வேறு 200 முதல் 500 ரூபாய் வரை வாங்குகிறார்கள். அத்தனை பணமும் எங்கே போகிறதோ? நிர்வாகம் பழனியைப் போல இங்கும் மோசம்தான்.

முருகன் சிறு உருவமாகச் சேவல் கொடியும் மயிலும் கொண்டு அழகனாக நிற்கிறான். சாதாரண நாளில், வெயில் குறைந்த நேரத்தில் சென்றால் அருமையான தரிசனம் நிச்சயம்.
 
(ஆறுபடைவீடு தொடர் நிறைவு)

2 கருத்துகள்:

  1. ayn randக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு ? "http://vicitran.blogspot.in/search/label/Ayn%20rand" என்று labelஐ வத்து நாவல் பகுதிகளை படிக்கலாம் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. The fountain head வாரம் ஒரு அத்தியாயம் என்று திட்டமிடப்பட்டது. ஆகவே இடையில் பிற எழுத்துக்கள் வந்தன. சில மாதம் முன்பு பழைய அத்தியாயங்களை நீக்கிவிட்டதாக நினைவு. தொடரவும் முடியவில்லை. கையெழுத்துப் பிரதியாகத் தங்கிவிட்டது.

    பதிலளிநீக்கு