திங்கள், 21 ஏப்ரல், 2014

ஆறு படைவீடு – 5.பழனி



Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.
                    
                    ஆறு படைவீடு – 5.பழனி

மதுரையில் இருந்து மேற்கே கேரள எல்லையை ஒட்டி இருக்கிறது பழனி மலையை உள்ளடக்கிய மேற்கு மலைத் தொடர். 

பழனி முருகன் கதையை ஊடுக்கே பெரிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை திருவிளையாடல் திரைப் படத்திற்கு உண்டு. கலகப் பிரியரான நாரத முனி, அபூர்வமான மாம்பழம் ஒன்றைக் கொண்டுவந்து சிவனிடம் கொடுக்க, சிவன் அதை மனைவியிடம் கொடுத்தார்.மனைவியோ, பிள்ளைகளிடம் கொடுக்கலாம் என்று சொல்ல, கலகம் பிறந்தது. பழத்தைப் பிரிக்காமல் சாப்பிட்டால்தான் பலன் என்று நாரதர் உறுதியாகச் சொல்லி விட்டார். அதனால், பிள்ளைகளுக்குள் எனக்குத்தான் உனக்குத்தான் என்று சண்டை. இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராடினார்கள். ஆகவே சிவன் போட்டிவைத்தார். இருவரில் யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே பழம்! முருகனுக்குக் கொண்டாட்டம். வேகமாகப் பறக்கிற மயில் வாகனத்தின் முன், அண்ணன் கணபதியின் எலி வாகனம் தோற்றுவிடும் என்ற எண்ணத்தில் பூமியைச் சுற்றப் புறப்பட்டார். ஆனால், பிள்ளையாருக்குத் தன் வாகனத்தின் மகிமை தெரிந்ததால், வேறு வழி யோசித்தார். பேசாமல் அம்மாவையும் அப்பாவையும் எதற்கும் இருக்கட்டுமென்று மூன்று முறை சுற்றி வந்து விட்டு, எனக்கு உலகமே அம்மா-அப்பாதான்; ஆகவே இப்போது உலகம் சுற்றிவந்து விட்டேன்; போட்டியில் வெற்றி எனக்கு என்று சொல்லி,. அம்மாவின் கைப் பழத்தை உரிமையுடன் எடுத்துக்கொண்டார். பூமியைச் சுற்றிவந்த முருகன் பார்த்தால் … ஒரே கோபம். பெரியவர்கள் எல்லாம் சேர்த்து ஏமார்றி விட்டீர்களே என்று கோபித்துக் கொண்டு உங்கள் சொத்து, சுகம், சாவகாசமே வேண்டாம் என்று கோவணம் மட்டும் உடுத்தி, ஆண்டிக்கோலத்தில் போய் நின்று கொண்ட தலமே ‘பழநி’. 

அநேகமாக இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் போட்டிகளில் விதிமுறைகள் புகுத்தும் வழக்கம் தோன்றி, இன்று மூன்றாவது, நாலாவது அம்ப்பையர் போட்டுத் தீர்மானிக்கும் வரை வந்துள்ளது. ஆனால் இன்னும் அலுவலகங்களில் இப்படி உலகம் சுற்றித் தோற்றுப் போகிறவர்களுக்கும் போட்டிக்குப் புது அர்த்தம் கற்பித்து, நான் தான் ஜெயித்தேன் என்று வெற்றி மாலை சூடிக் கொள்பவர்களுக்கும் பஞ்சமில்லை.

பழனி மலை, சுமார் 600+ படிகள் ஏறிப் போனால்தான் தரிசனம். ஆறு படைவீடுகளிலும் பழனியே சற்று ஏறிச் செல்லக் கடினமான இடம். ஆனால் ரொம்பகாலம் முன்பே ‘யானைப் பாதை’ என்று படியில்லாமல் சரிவில் (Ramp) ஏறிப் போக வழி உண்டு, இது சற்று இலகு. ஆனாலும் கடைசியில் 100 படி ஏறித்தான் ஆக வேண்டும். போன நூற்றாண்டில் இழுவை இரயில் போட்டார்கள். இப்போது கயிற்றில் ஓடும் பெட்டியும் இருக்கிறது, ஆனாலும் இவை போதாது. சாதாரண காலங்களில்கூட பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகம் தவிர கேரளத்து பக்தர் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

தமிழகத்தில் அதிகம் வருமானம் வருகிற கோவில் பழனி. ஆனால் மோசமான நிர்வாகத்தால், பக்தர்களுக்கு சரியான வசதிகள், தங்கும் இடங்கள், ஏதும் கிடையாது. இரயிலுக்கும், கயிற்றுப் பெட்டிக்கும் காத்துக்கிடக்கிற கூட்டத்தில், ஆலய நிர்வாகிகள், அலுவலர்கள் அவரவர் வேண்டிய ஆட்களைக் கொண்டுவந்து இடைச் சொருகுவது அநியாயம். வயதான, மலை ஏற இயலாத பக்தர்களுக்கு ஏற்பட்ட இந்த வழிகளைத் தவறாகப் பயன் படுத்துகிறார்கள். வரிசையில் நிற்பவர்களுக்கு மட்டும் புண்யத்திற்கு நிழல் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆலய நிர்வாகம் நிறைய சீர் குலைந்து கிடக்கிறது.
தரிசனம்: இத்தனை கஷ்டப்பட்டு ஏறிப் போனால், அழகான மலை உச்சி, அடக்கமான கோவில். சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. வரிசையில் நின்று பொறுமை காத்தால் நன்றாகத் தரிசிக்கலாம். ரொம்ப இருள் காட்டாத கருவறை. முருகனை நன்றாகவே தரிசிக்கலாம். 

போகர் என்ற சித்தர், நவபாஷாணம் (ஒன்பது மூலிகைகள்) கலந்து தயாரித்ததாகச் சொல்லப்படுகிற மூல விக்கிரகம். வலதுகை மடித்து இடுப்பில் இருக்க, இடதுகையில் கோல் ஊன்றி நிற்கும் ஆண்டிச் சிறுபிள்ளை! ஆனால் விக்கிரகத்தின் மருத்துவ சக்தியை அறிந்து, காசு வாங்கிக் கொண்டு சிறிது சிறிதாகச் சுரண்டி விற்கிறார்கள்; முருகனின் கைக்கும் இடுப்பிற்கும் இடையே இடைவெளி வரும் வரை சுரண்டப்பட்டு விட்டது என்று பக்தர்கள் குற்றம் சாட்டியதும், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்து மூலவர் அபிஷேகம் நிறுத்தப் பட்டு விட்டது. 

முருகன் ஆண்டிக் கோலத்தில் இருப்பது யாருக்கு அதிருஷ்ட்டமில்லை என்று நினைத்தார்களோ தெரியவில்லை, எப்போதும் இராஜாலங்காரத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் பழனிக்குப் போவது அவனை ஆண்டிக் கோலத்தில் தரிசிக்கத்தான். அதைக்கூட அழித்து விட்ட நிர்வாகம்!

தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் சமீப காலமாக கோவில் வளாகத்திலேயே பஞ்சாமிர்தக் கடை! வாசலிலேயே மடக்கி வியாபாரம்! இதுவும் கோவில் நிவாகச் சீர்கேட்டின் இன்னொரு அடையாளம்,

பழனியின் பிரசாதம் பஞ்சாமிர்தம், பழங்களைக் கூட்டித் தயாரிக்கப்படுகிற இனிப்பான, உடல் நலத்திற்கு உகந்த பிரசாதம். மலையடிவாரத்தில் நிறையக் கடைகள் உண்டு. வேண்டிய மட்டும் வாங்கிக் கொள்ளலாம். நீண்ட காலம் கெட்டுப் போகவும் செய்யாது.
பழனியில் தைப்பூசம் விஷேசம், தமிழ் நாடு முழுவதிலும் இருந்து பாத யாத்திரை பக்தர்கள் கோஷ்டி கோஷ்டியாக வருகிறார்கள். இரவில் சாலையிலோ, இரயிலிலோ அந்த வழியில் பயணிக்கும் போது சாரி சாரியாக பக்தர் கூட்டம் நடந்து போவதைப் பார்க்கலாம்.
மொத்தத்தில், நாம் மதுரையில் இருந்து அதிகாலை புறப்பட்டுப் போய் யானைப் பாதையில் மலைஏறி, தரிசனம் செய்து திரும்புவதே உத்தமம், நிர்வாகத்தை நம்பி எந்த வசதியும் எதிர்பார்க்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக