புதன், 16 ஏப்ரல், 2014

ஆறுபடை வீடு –4.திருச்செந்தூர்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.



ஆறுபடை வீடு –4.திருச்செந்தூர்


வங்காள விரிகுடாக் கரையில் கன்யாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் இடையே அமைந்த நகரம். முருகன் தேவர் படைத் தலைமை ஏற்று சூரனை வதத்த இடம்.

பௌர்ணமியில் முழு நிலவு கடலில் இருந்து கிளம்புவதைக் காணுவது ஆனந்தம்! நீண்ட கடற்கரையில் பெரிய கோயில். பிரகாரம் சுற்றி வந்து ஆறு முகங்களுடன் கூடிய முருகனைத் தரிசிக்கலாம். ஆண்டு தோறும் பக்தர்கள் வருகை அதிகம் என்றாலும் தீபாவளிக்கு மறுநாள் பிரதமை தொடங்கி ஆறு நாட்கள் – முருகன் சூரசேனையுடன் யுத்தம் புரிந்த ஆறு நாட்கள் – பக்தர்கள் செந்தூரிலேயே தங்கி கந்த சஷ்டி விரதம் இருப்பார்கள். தினம் கடல் நீராடல். தேவஸ்தானம் பக்தர்களிடம் நன்கொடை வாங்கிக் கட்டி விட்டிருக்கிற தங்குமிடங்கள் அத்தனையும் நிறைந்து வழியும். கடலோர மணலிலேயே தங்கி விடுபவர்களும் உண்டு. ஆறாம்நாள் சூரசம்ஹாரப் பெருவிழா! மாலை மயங்கும் நேரத்தில் முருகன் கடற்கரையில் இறங்கி … இப்போது எல்லாத் தொலைக்காட்சியிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாகிறது. பார்த்தே ஆனந்திக்கலாம்.

கடற்கரையில் நாழிக்கிணறு நீராடல் ஒரு முறையாவது செய்ய வேண்டும். அதிருஷ்டம் இருந்தால் கூட்டம் இல்லாத நாளில் படிகள் இறங்கிக் கிணற்றுக்குள் போய், அங்கே நாழி (நெல் அளக்கும் படி அளவு உள்ளதால் அந்தப் பெயர்) அளவில் இருக்கிற வட்டத்தில் பொங்குகிற நீரை மொண்டு குளிக்கலாம். பிறகு கடல் நீராடலாம். சில நாட்களில் கூட்டம் அதிகம் இருந்தால் பொறுமையும் நேரமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
கடலோரம் கோவில் பிரகாரம் அருகிலேயே கற்கள் நிறைந்து குன்று என்று சொல்ல முடியாது ஆனால் பெருங்கல் குவியல். அங்கே ‘வள்ளிக் குகை’ என்று கேட்டால் சொல் வார்கள். அதற்குள் நுழைந்து, குறுகிய பாதையில் போய் வள்ளி ஒளிந்து விளையாடிய இடம் பார்க்கலாம். வள்ளி சிலைக்கு ஆராதனையும் நடக்கிறது.

செந்தூர் பனை மரம் நிறைந்த காடு. பனை வெல்லம் – அதிலும் சில்லுக் கருப்பட்டி – மிக ஆரோக்கியமும் சுவையும் மணமும் நிறைந்த பிரசாதம். அதோடு, தினை மாவும் கிடைக்கும். 

செந்தூர் தொடர்பில் வழங்குகிற செவிவழிக்கதைகளில் சுவாரசியமான ஒன்று. வீர பாண்டிய கட்டபொம்மன், தினமும் செந்தூர் முருகனுக்கு உணவு படைக்கப் பட்டபின்புதான் தான் உணவு உண்பது வழக்கமாம். அந்த நேரத்தை அறியும் பொருட்டு செந்தூரில் இருந்து தன் இருப்பிடமான பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைவரை மணிக் கூண்டுகள் அமைத்தார். செந்தூரில் தொடங்கி மணிக்கூண்டுகள் அடுத்தடுத்து சத்தம் காதில் வாங்கியதும் தான் ஒலித்து அடுத்த கூண்டிற்குச் செய்தி அனுப்ப பாஞ்சாலங்குறிச்சியின் கடைசி மணி ஒலி கேட்டதும் சாப்பிடப் போவாராம் கட்டபொம்மு என்கிறது செவிவழிச் செய்தி.

மதுரையில் இருந்து நிறையப் பேருந்து – சாதாரண நாளிலேயே பத்து நிமிடத்துக்கு ஒருமுறை; விஷேஷகாலத்தில் இன்னும் அதிகம்  – இருக்கிறது. குறைந்த பட்சம் மூன்று மணிநேரப் பயணம். இரயில் கொஞ்சம் குறைவுதான். ஆனால் முன் பதிவு செய்து வருவதானால் வரலாம். இங்கிருந்து கன்யாகுமரி அருகில் என்பதால் சேர்த்தே பார்த்து வரத் திட்டமிட்டுக் கொள்ளலாம். 

சாவாதானமாகத் தீர்த்த யாத்திரை செய்பவர்கள் என்றால், அருகில் நவ திருப்பதி எனப்படும் 9 பெருமாள் தலங்கள் 40 கி.மீ சுற்றுக்குள் இருக்கிறது. தாமிரபரணிக் கரையின் இருபுறமும் அடுத்தடுத்து இருக்கும் இத் தலங்களைப் பார்க்க ஒரு நாளாவது தங்க வேண்டும். 

அருகிலேயே திருநெல்வேலி; நெல்லையப்பர்-காந்திமதி தரிசனம். கன்யாகுமரி மாவட்டத்தில் இன்னும் நிறையக் கோவில்கள் உள்ளன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக