வியாழன், 10 ஏப்ரல், 2014

ஆறுபடை வீடு –1.பழமுதிர்ச் சோலை

Note: In this blog you can also read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



                                             ஆறுபடை வீடு –1.பழமுதிர்ச் சோலை
முருகன் தமிழ்க் கடவுள் என்று போற்றப் பட்டாலும் பாரத கண்டத்தில் வழங்கி வந்த புராண மதங்கள் எட்டில் ‘கௌமாரம்’ என்னும் குமரக் கடவுள் வழிபாடு தொன்று தொட்டு இருந்துவருகிறது. குமார குப்தன், ஸ்கந்த குப்தன் என்று சக்கரவர்த்திகள் பெயர் சூட்டிக் கொண்டார்கள். ஆந்திராவில் குமாரஸ்வாமி, கார்திகேயன் என்றும் கர்நாடகாவில் சுப்ரமண்யா என்றும் இன்றும் வழங்கிவருவது முருகக் கடவுள் வழிபாடு.
தமிழகத்தில் முருகனின் ஆறு படைவீட்டுக் கோயில்கள் பிரபலம். இவற்றுக்கு ஒரு வரிசை உண்டு. அந்த வரிசையைப் பின் பற்றாமல் எனக்கு தரிசனம் கிடைத்த வழியில் இந்தத் தொடர் நடக்கப் போகிறது.
தல வரலாறு: ஔவையார் நாவல் பழம் சாப்பிட ஆசைப்பட்டு மரத்தின் மேல் இருந்த ஆடு மேய்க்கும் சிறுவனிடம் கொஞ்சம் பழம் உதிர்த்துப் போடு என்று கேட்க, சிறுவன் “சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டு தமிழ் மூதாட்டியை அதிசயிக்க வைத்த இடம். பழத்தில் என்ன சுட்டது சுடாதது என்று யோசனையோடு சிறுவன் உதிர்த்துப் போட்ட பழம் மண்ணில் விழ, அதை ஊதித் தின்ன முற்பட்ட ஔவையிடம் “என்ன பாட்டி! பழம் சுடுகிறதா?” என்று குறும்புக் கேள்வி கேட்டு, முருகக் கடவுள் காட்சி கொடுத்ததாகத் தல வரலாறு.
தல யாத்திரை: பழமுதிர்ச் சோலை மதுரை நகரத்திற்கு அருகில் (15-20 கி.மீ) திருமாலிருஞ்சோலை மலை என்று வழங்கப்படும் அழகர் கோவில் மலையில் இருக்கிறது. மதுரையிலிருந்து அடிக்கடி டவுன் பஸ் உண்டு.
இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழல். மலை அடிவாரத்தில் திருமால்; அழகர் என்னும் திருநாமத்தோடு நின்ற திருக்கோலம். இதைப் பற்றித் தனியாக எழுதுகிறேன். மலை மேல் ஏற காட்டுவழியில் நடை பாதையும் இருக்கிறது, தேவஸ்தானமும் சிறு வண்டிகள் விட்டிருக்கிறது. சொந்த வண்டியும் அனுமதி உண்டு.
தரிசனம்: அதிக உயரமில்லை. ஏறிப் போனால் இடது புறம் கோவில் முகப்பு தெரிகிறது. எளிமையான வாசல். உள்ளே போய் முருகனைத் தேடினால் … இன்னும் ஆச்சரியம் … சங்கப் புலவர் நக்கீரர் திருமுறுகாற்றுப் படை பாடிய முருகனா! மதுரையில் முக்குக்கு முக்கு இருக்கிற சிறு கோவில்களைப் போல கர்ப்பக் கிருஹம் என்று இருள் படியாத சன்னிதானம்! சின்னஞ்சிறு முருகன்! முற்றும் எதிர் பாராத் தரிசனம் என்பது இதுதான்! முருகா! இப்போது சன்னிதியைச் சுற்றித் தாழ்வரை அமைத்து இருக்கிறார்கள். கோவிலும் கொஞ்சம் பெரிதாகத் தெரிகிறது.
சிலம்பாறு நீராடல்: சாப்பாடு கொண்டு போனால் உட்கார்ந்து சாப்பிட்டு ஓய்வெடுத்து வரலாம். கோவிலுக்கு வெளியே வந்து இன்னும் கொஞ்சம் மேலேறினால் உயரமாகப் படிக்கட்டுகள் மலை ஏறுகின்றன. அதில் ஏறி மேலே போனால், இராக்காயி கோயில். பெண்தெய்வத்தின் கோவில். கட்டிடம் நடுவே ‘சிலம்பாறு’ என்று சங்க இலக்கியம் தொட்டு அறியப்பட்ட வற்றாத சுனை நீர் கொட்டுகிறது. மூலிகை கலந்த மலை நீரில் தலைகாட்டி நீராடுவது ஆனந்தம். இதில் வழக்கமாகக் குளியல் போடுவதற்கென்றே வார விடுமுறை நாட்களில் மதுரையில் இருந்து வந்துபோகும் கூட்டம் ஒன்று இருக்கிறது.
இப்படி கீழே திருமால் அழகர், நடுவே முருகக் கடவுள், மேலே இராக்காயி என்று முழுக்க அமைதியான மனம் நிறைவான தல யாத்திரை.
(அடுத்த தல யாத்திரை – திருப்பரங்குன்றம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக