Tamil Serial லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Serial லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜூன், 2014

விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.



விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 15
அத்யாயம் 15:  நிச்சயதார்த்தம்  – பகுதி1:


ஃப்ராங்கன் - ஹேயரில் இப்போது மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்த பீட்டர் நிமிர்ந்த தலையும் நேரிய நடையுமாக வலம் வரக் கற்றுக் கொண்டான். சவரக்கத்தி அல்லது நடுத்தர உல்லாச ஊர்தி விளம்பரங்களிலோ வருகிற வெற்றிகரமான இளைஞனின் சாயல் வந்திருந்தது.
நன்றாக உடை உடுத்தி, பிறர் அதைக் கவனிப்பதைக் கண்டு வைத்துக் கொண்டான். உய்ர் மத்திய தட்டு மக்கள் வசிக்கும் தெருவில் ஒரு வீடு; விலை உயர்ந்த ஓவியங்கள் மூன்று; வாங்கிய நாளிலிருந்து புரட்டிப் பார்க்காத முதல் பதிப்புப் புத்தகம் ஒன்று என்று சுமாராக சொத்து சேர்த்திருந்தான்.
அரிதான நாட்களில் பணக்கார நாடக அரங்கங்களுக்கு வாடிக்கை யாளர்களை அழைத்துச் செல்லும் தகுதியும் வந்திருந்தது. ஒரு முறை வேஷம் கட்டுகிற விருந்தொன்றில் இடைக்கால கல்வெட்டுபவனைப்போல உடையணிந்து வந்து கலக்கினான். அது அவன் புகைப்படத்துடன் மேல்தட்டு பக்கங்களில் வந்த போது பத்திரிக்கையின் அந்த செய்தியை வெட்டிப் பத்திரப் படுத்தினான்.
முதல் கட்டிடத்தை, அதன் பொருட்டு கொண்ட அச்சத்தை எல்லாம் மறந்து போனான். அது எத்தனை சுலபம் என்ற வித்தை தெரிந்து விட்டது. ஆடம்பர முகப்பு, தோரணையான வாயில், அரண்மனை போன்ற வரவேற்பறை; இவை மட்டும் இருந்தால் போதும் மக்களுக்கு என்ற நுணுக்கம் தெரிந்து விட்டது; வாடிக்கையாளர்கள் திருப்தியே அவன் திருப்தியும்கூட. வாடிக்கையாளர்களுக்கோ விருந்தினர் மூக்கில் கைவைத்து அதிசயித்தால் அதுவே திருப்தி; விருந்தினர்களுக்கோ எதைப் பற்றியும் கவலையில்லை; ஆக சகலருக்கும் திருப்தியான வழி.
அன்னை ஸ்டேன்டன் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு நியூயார்க்கிற்கு அவனுடன் குடிவந்து விட்டாள். கீட்டிங்கிற்கு இதில் சம்மதமில்லை என்றாலும் அன்னை என்ற தகுதியை மதித்து ஓரளவு சந்தோஷமாகவே வரவேற்றான். உலகில் தனக்கென்று ஓரிடம் பிடித்துவிட்டான் அல்லவா? ஆனால் அன்னைக்குத்தான் திருப்தி வரவில்லை. அறையை, உடையை, வங்கிக் கணக்கை ஆராய்ந்துவிட்டுச் சொன்னாள் “இப்பொதைக்கு இது பரவாயில்லை பீட்டி”
ஒரே ஒரு முறை அவன் அலுவலகம் போய் அரை மணியில் திரும்பிவிட்டாள். அன்றிரவு கையைப் பிசைந்த வாறு அவள் முன் அமர்ந்து ஒரு மணி நேரம் அறிவுரை கேட்க வேண்டியதாயிற்று பீட்டருக்கு. “இதோ பார் பீட்டி! வித்தர் அறை உன்னைவிட நன்றாக இருக்கிறது. நீயும் உன் மதிப்பில் கவனம் செலுத்தனும். ஒரு சின்னப் பையன் உன்னிடம் படம் கொண்டுவந்து கொடுத்தானே .. அவன் உன்னோட பேசுற விதம் சரியில்லை .. ஓ ஒன்ணும் இல்லை .. நானாயிருந்தா அவன் மேல ஒரு கண் வச்சிக்கிட்டே இருப்பேன் .. அந்த நீள மூக்கன் கூட ரொம்பப் பழகாதே, சும்மா தெரிஞ்சி வச்சுக்கிட்டாப் போதும். அந்த பென்னட்டிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாயிரு. நான்னா அப்போதே அவனைத் துரத்தியிருப்பேன். முன்னுக்கு வரணும்கிற வெறி அவனுக்கு ரொம்பவே இருக்கு .. அதெல்லாம் சரி உன் ஃப்ராங்கன் எப்படி? … குழந்தை குட்டி உண்டா?”
“ஒரே ஒரு மகள்”
“ஓ .. அவள் எப்படி?”
“நான் பார்த்ததில்லை”
“உண்மையிலேயே பீட்டி நீ இப்படி அவர் குடும்பத்தைச் சந்திக்காமல் இருப்பது மரியாதையாக இல்லை.”
“அவர் மகள் வெளியூரில் படிக்கிறாள். ஒருநாள் சந்திக்கத்தான் போகிறேன். இப்போ தூக்கம் வருது; நேரமாச்சு; நாளைக்கு நிறைய வேலை இருக்கும்மா”
ஆனால் அன்றிரவும் மறுநாளும் அவன் யோசனை அதைப் பற்றியே இருந்தது. இதற்கு முன்னாலும் யோசித்திருக்கிறாந்தான். ஃப்ராங்கன் மகள் கல்லூரி முடித்து விட்டு ‘நியூயார்க் பேனர்’ பத்திரிக்கையில் வேலை பார்க்கிறாள் என்பதும் தெரியும். அதில் வீட்டு அலங்காரம் பற்றிச் சிறு பத்தி எழுதுகிறாள் என்பதற்குமேல் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில் யாருக்கும் அவளிடம் பழக்கமில்லை. ஃப்ராங்கனோ அவள் பற்றி வாயைத் திறக்க மறுத்தார்.
மறுநாள் மதிய உணவின் போது மெதுவாக விசாரித்தான்.
“ஹே ஃகை! உன் மகள் பற்றிப் பெரிதாகக் கேள்விப்பட்டேன்”
“எங்கே?” பர பிரும்மமாகக் கேட்டார்.
“அது … காத்து வாக்கில் காதுக்கு வந்தது. ரொம்ப நல்லா எழுதுறாங்களே”
“ஆமாம். ரொம்ப நல்லா எழுதுறாள்” ஃப்ராங்கன் பிடி கொடுக்க மறுத்தார்.
“ஒரு நாள் அவங்களைச் சந்திக்கலாமா?”
ஃப்ராங்கன் அவனைப்பார்த்துப் பெரு மூச்சு விட்டார்.
“அவள் என்கூட என் வீட்டில் இல்லை. தனியா வீடு வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த முகவரி கூட எனக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ .. எப்போதாவது ஒருநாள் சந்திக்கத்தான் போகிறாய். உனக்கு அவளைப் பிடிக்காது பீட்டர், விட்டுடு.”
“ஐயோ என்ன இப்படிப் பேசுறீங்க? “
“தலை விதி! ஒரு தந்தைங்கற முறையில் எனக்கு இதில் தோல்விதான். சரி அதை விடு. திருமதி மேநிங் புது மாடிப்படி பத்தி என்ன சொன்னாள் சொல்”
கீட்டிங்கிற்கு கோபம், ஆத்திரம், கூடவே நிம்மதிப் பெருமூச்சு. எதிரே இருந்த ஃப்ராங்கனின் கொழுத்த உருவத்தைப் பார்த்தான். இவனிடமிருந்து எந்தச் சாயல் அவளுக்கு வந்திருக்கும்? இவ்வளவு அங்கலாய்க்கிறானே, வழக்கம் போலப் பணமும் அழகும் ஒன்று சேராத அவ லட்சணமோ? ஆனால் அதெல்லாம் அவன் ஆசைக்குக் குறுக்கே வந்து விடுமா என்ன? அந்த நாள்வர இன்னும் அவகாசமிருக்கிறது. இன்றிரவு கேத்தரினைப் பார்க்க வேண்டும்.

(continues ...)
 

வியாழன், 22 மே, 2014

விசித்ரசித்தன் மேற்கொண்டு – ஒரு முன்னோட்டம்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.



விசித்ரசித்தன்  மேற்கொண்டு  – ஒரு முன்னோட்டம்

பொதுவாக ஆங்கில நாவல்கள் முதல் 150-200 பக்கங்கள் கதை மாந்தர் அறிமுகம், களம் அமைப்பு என்று போகும். அதன்பிறகு கோர்வையாய்க் கதை புரிய ஆரம்பித்து விறுவிறுப்படையும்.

விசித்ரசித்தனும் அந்த வகையைச் சேர்ந்தது( 1930களில் எழுதப்பட்டது). சொல்லப்போனால் அமெரிக்க ஆங்கில நாவல்களுள் காலத்தால் முற்பட்டது. இன்று வருகிற பலவித நாவலின் கூறுகளையும் இதில் பார்க்கலாம். இன்னும் வர இருக்கிற தமிழ் மொழிபெயர்ப்பு அத்யாயங்கள் இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியவை. Mills&boon என்ற உலகளாவிய கனவுப் புத்தக விற்பனையாளர்களின் கதைக்கருவிற்கு முன்னோடியான நிகழ்ச்சிகள் முதல், தமிழில் நா பார்த்தசாரதியின் இலட்சியக் கதாநாயகன் வரை எல்லாவிதக் கூறுகளும் இக்கதையில் உண்டு. 

ஆங்கில மூலம் நான்கு பாகங்களாகக் கதையின் நான்கு முக்கிய பாத்திரங்களின் பெயருடன் இருக்கின்றன. இப்போது முதல் பாகம் – பீட்டர் கீட்டிங். மற்ற மூன்று கதாபாத்திரங்களும் கதைத் தலைவனான ஹோவர்ட் ரோர்க்குடன் இணைந்து கதையின் பாதையில் உடன் வருகிறார்கள். தலைவன் ஹோவர்ட் ரோர்க் தான் ‘விசித்ரசித்தன்’. சரியான தமிழ்த் தலைப்பைத் தேடியபோது ‘அவன்தான் மனிதன்’ என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. பிறகு மஹாபலிபுரம் கண்டதும் ‘விசித்ரசித்தன்’ (வடமொழிச் சொல் என்றாலும் பொருத்தமாக இருந்த படியால்) பற்றிக் கொண்டது. இந்தக் கதாநாயகனும் சிற்பவியலின் எல்லைகளைத் தாண்டித் தனி பாணி வகுத்துக் கொண்டு போகிறான். உற்றுப் பார்த்தால் ஹோவர்ட் ரோர்க் - கீதையில் ‘ஷேத்ரக்ஞ்ன்’ என்ற பதம் வரும். அதற்கு இலக்கணமான பாத்திரம்.

Ayn Rand அமெரிக்க திரைப்பட உலகில் வேலை பார்த்தவர். கதையைத் திரைக்குத் தகுந்த படியும் எழுதியுள்ளார். தமிழ்த் திரைப் படங்களின் court scene, அங்கே நீண்ட வசனங்கள் எல்லாவற்றுக்கும் முன்னோடி ‘The fountainhead’. 

இனி வரப்போகும் பகுதிகள் படிப் படியாய்க் களம் மாறிக் காலத்தில் ஓடி நீண்ட கதையாகப் போகின்றன. 

ஆங்கிலத்தில் படித்ததைவிடத் தாய்மொழியில் வாசிக்கும் போது இன்னும் அதிகம் இரசிக்கத்தான் முடிகிறது. நான் இரசித்ததை இங்கே உங்களுக்கு மீண்டும் தருவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாசியுங்கள்!